17 நவம்பர், 2008

செய்திகள் வாசிப்பது!

1987 டிசம்பர் 24 அன்று தான் அந்த ஆசை எனக்கு வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சென்னை தொலைக்காட்சியின் செய்திகளில் கையில் கட்டோடு, ஷேவ் செய்யாத முகத்தோடு, கண்களில் தேங்கிய கண்ணீரோடு வரதராஜன் செய்தி வாசிக்கிறார். “தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரன் மரணம்” எங்களது பள்ளியில் தினமும் பிரார்த்தனைக் கூட்டம் காலையில் பள்ளி தொடங்குவதற்கு முன்பே நடக்கும். பிரார்த்தனை என்றால் தமிழ்த்தாய் வாழ்த்து, ஒருமைப்பாடு உறுதிமொழி, தலைமையாசிரியருக்கு சிறப்பு மரியாதை, தேசியகீதம் ஆகியவை இருக்கும். எப்படியும் ஒரு அரைமணி நேரம் ஆகும். 9.30 மணிக்கு பள்ளி என்றால் 9 மணிக்கே எல்லா மாணவர்களும், ஆசிரியர்களும் மைதானத்தில் குழுமிவிட வேண்டும். நான் ஆறாம் வகுப்பு சேர்ந்தபோது பிரார்த்தனையோடு “குறள் விளக்கம்” என்ற புதிய நிகழ்ச்சி நிரல் ஒன்றினை சேர்த்தார்கள். ஒரு குறள் சொல்லி அதற்கு விளக்கமும் சொல்லவேண்டும். பள்ளியில் யாருக்கு தமிழ் உச்சரிப்பு சரியாக வருகிறது என்று கருப்பு தமிழய்யா தேடியபோது அதிர்ஷ்டவசமாகவோ, துரதிருஷ்டவசமாகவோ என் பெயரை பரிந்துரைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் தினமும் பிரார்த்தனைக்கு வராமல் லேட்டாக வரும் மாணவன் என்பதால் என்னை சீக்கிரம் வரவைக்கும் யுக்தியும் இதில் இருந்திருக்கிறது. வீட்டில் அதிகாலையில் (ஆறரை மணி) எழுந்து “கற்க கசடறக் கற்பவை கற்றபின்” என்று கண்ணை மூடி மனப்பாடம் செய்து, மு.வ. எழுதிய விளக்கத்தையும் எழுதிக்கொண்டு அவசர அவசரமாக பள்ளிக்கு ஓடுவேன். தினமும் ஒரு குறள். காமத்துப்பால் தவிர்த்து ஒரு அறுநூறு, எழுநூறு குறள்களையாவது ஐந்து ஆண்டுகளில் மைக்கில் படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். ஏழாவது படிக்கும்போதா, அல்லது எட்டாவது படிக்கும்போதா என்று நினைவில்லை. தமிழய்யா பிரார்த்தனை கூட்டத்தின் போது 'செய்தி வாசித்தால்' வித்தியாசமாக இருக்கும் என்று தலைமையாசிரியரிடம் சொல்லியிருக்கிறார். தலைமை ஆசிரியருக்கும் அந்த யோசனை பிடித்துப் போகவே “குறள் விளக்கம்” சொல்லும் பையனே அதையும் செய்யட்டும் என்று சொல்லிவிட்டார். கருப்பு தமிழய்யா உச்சரிப்புகள் குறித்து ஒரு வாரம் எனக்கு சிறப்பு வகுப்பு எடுத்தார். தினமும் இரவு ஏழரை மணிக்கு செய்திகள் ஓடும்போது, கூடவே நானும் சொல்லி பயிற்சி செய்தேன். எனக்கு செய்திகளை எழுதித்தர செந்தில் (என்னுடைய பெரியம்மா பையன்) என்ற மூத்த வகுப்பு மாணவருக்கு சொல்லப்பட்டிருந்தது. செந்தில் தினமும் மாநில செய்திகள் கேட்பார், தினமணி படிப்பார். பின்பு அவற்றிலிருந்து முக்கியச் செய்திகளை தலைப்பாக எழுதி வைத்துக் கொண்டு.. ஒவ்வொரு தலைப்புக்கும் நான்கு அல்லது ஐந்து லைனில் சுருக்கமாக செய்தி எழுதுவார். வாசிப்பதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பாக ரெண்டு, மூன்று முறை வாசித்துப் பார்ப்பேன். ஆரம்பத்தில் செய்தி வாசிக்கும்போது பள்ளியில் அதிக ஒலியோடு ஆசிரியர் சொல்லுவதற்கு பின்பாட்டு பாடும் பாணியிலேயே ராகத்தோடு செய்தி வாசித்துக் கொண்டிருந்தேன். நாளாக, நாளாக கொஞ்சம் ஸ்டைலாக வானொலி, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் பாணியில் நிறுத்தி வாசிக்க ஆரம்பித்தேன். செய்தி வாசிக்க தொடங்குவதற்கு முன்னால் “செய்திகள் வாசிப்பது உங்கள் லக்கிலுக்” என்று சேர்த்து சொல்ல ஆரம்பித்தேன். இதுபோல சொல்வதற்கு ஏதாவது ஆட்சேபணை வந்தால் நிறுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தேன். நல்லவேளையாக தமிழய்யாவுக்கும் அது பிடித்திருந்ததால் தொடர்ந்தது. செய்திகள் வாசித்ததால் சுமாராக படிக்கும் மாணவனாக இருந்தாலும் பள்ளியில் நல்ல பிரபலம் கிடைத்தது. பெரிய வகுப்பு மாணவர்கள், சிறிய வகுப்பு மாணவர்களை கிண்டல் செய்வார்கள். என்னை மட்டும் கொஞ்சம் மரியாதையோடு பார்க்க ”செய்திகள்” உதவியது. “செய்திகள்” புண்ணியத்தால் தமிழய்யாவின் அறிவிக்கப்படாத சீடனாகவும் கெத்தாக உலவ ஆரம்பித்தேன். எனக்கு செய்திகள் எழுதித்தந்த நியூஸ் எடிட்டரான செந்தில் பள்ளி இறுதி வகுப்புக்கு வந்து விட்டதால் காலையில் ட்யூஷன் செல்ல ஆரம்பித்தார். அவரை தொல்லை செய்யாமல், என்னையே செய்திகள் எழுதிக்கொள்ளும்படி தமிழய்யா சொன்னார். தயங்கியபோது அவ்வப்போது சில டிப்ஸ்களும் தந்து தன்னம்பிக்கையை அதிகரித்தார். நாளாக நாளாக நியூஸ் எடிட்டிங் கைவந்த கலை ஆகிப்போனது. தலைப்புகளை மட்டும் எழுதிக்கொண்டு வந்து என் சொந்த சொல்நடையோடு வாசிப்பது சுலபமாக இருந்தது. மிக கவனமாக ‘கலைஞர்' என்று சொல்லாமல் திரு.கருணாநிதி என்று சொல்வது தான் கொஞ்சம் சிரமமாக இருந்தது. ”எதிர்காலத்தில் என்னவாக வர விரும்புகிறீர்கள்?” என்று பள்ளி மாணவர்களிடம் ஆசிரியர்கள் கேட்பது வழக்கம். ‘டாக்டர், இன்ஜீனியர், வக்கீல்' என்று என் வகுப்பு மாணவர்கள் சொல்லும்போது நான் மட்டும் ‘செய்தி வாசிப்பாளன், அரசியல்வாதி அல்லது லைப்ரேரியன்' என்று சொல்லி சொர்ணம் டீச்சரை ஒருமுறை ஆச்சரியப்படுத்தினேன். அவரை ஆச்சரியப்படுத்துவதற்காக அதை அப்போது சொல்லவில்லை. உண்மையில் நான் என்னவாக விரும்பினேனோ, அதை தான் சொன்னேன். செய்திவாசிப்பு பழக்கத்தால் ஒருமுறை பேச்சுப்போட்டியில் திடீரென்று கலந்துகொண்டு பரிசு வாங்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. ஆறாம் வகுப்பிலிருந்து கட்டுரை போட்டியில் மட்டுமே கலந்துகொள்வேன். மாறுவேடம், பேச்சுப்போட்டி போன்றவற்றில் கலந்துகொள்ள எனக்கு தயக்கம் இருந்தது. பத்தாம் வகுப்பு வந்தபோது என்னிடம் சொல்லாமலேயே என் பெயரை போட்டிக்கு தமிழய்யா சேர்த்து விட்டிருந்தார். ‘எனக்குப் பிடித்த தலைவர்' என்ற மொக்கை தலைப்பில் பேசவேண்டும். நானும் அவசர அவசரமாக வீட்டிலிருந்த சில புத்தகங்களைப் புரட்டி 'எனக்குப் பிடித்த தலைவர் கலைஞர்' என்று பேச ஸ்க்ரிப்ட் ரெடி செய்து தயாராகியிருந்தேன். பேச்சுப்போட்டியன்று நான் ‘எனக்கு பிடித்த தலைவர் டாக்டர் கலைஞர்' என்று சொன்னதுமே தண்டபாணி மாஸ்டர் ஆட்சேபித்தார். ”உயிரோடு இருக்கும் தலைவர்களை பற்றி பேசக்கூடாது” என்று ஒரு விதி இருப்பதாக சொன்னார். அவர் காங்கிரஸ்காரர். கலைஞரை அவருக்கு சுத்தமாக பிடிக்காது. சமூக அறிவியல் பாடம் நடத்தும்போது லைட்டாக கலைஞரை தாக்கி அரசியல் பேசுவார். நான் உட்பட சில திமுக சார்பு மாணவர்கள் உடனே எதிர்ப்பு தெரிவிப்போம். அந்த காண்டு அவருக்கு இருந்தது. எனக்கு முன்பு பேசியவர்களும் காந்தி, நேரு, காமராஜர் என்று தான் பேசியிருந்தார்கள். தமிழய்யாவை பரிதாபமாகப் பார்த்தேன். “அய்யாவைப் பற்றி என்ன தெரியுமோ, அதைப் பேசுடா” என்றார். நான் படித்த பள்ளியின் பெயரே ‘தந்தை பெரியார்' பெயரில் இருந்தது. தமிழய்யாவும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பெரியார் பற்றி சொல்லிக் கொண்டிருப்பார். இருப்பினும் பயிற்சி இல்லாததால் கொஞ்சம் தட்டுத் தடுமாறி பேசி முடித்தேன். “பெரியார் வெறும் கடவுள் எதிர்ப்பாளர் மட்டுமே அல்ல. அவர் ஒரு சமுதாய சீர்த்திருத்த சிற்பி” என்பதை மட்டும் கொஞ்சம் முத்தாய்ப்பாக சொல்லி வைத்தேன். நானே எதிர்ப்பார்க்காத நிலையில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. பத்தாம் வகுப்பு முடிந்த நிலையில் நான் மேல்நிலைக்கல்வி கற்க வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டேன். அங்கே வாரம் ஒருமுறை தான் பிரார்த்தனை. குறள்விளக்கம், செய்திகள் எதுவும் அங்கே இல்லை. எனவே செய்திகளோடு எனக்கிருந்த தொடர்பு கொஞ்சம் அறுந்தது. பழைய பள்ளியிலும் எங்கள் 'செட்' வந்தப்பிறகு புது தலைமையாசிரியர் வந்து ”செய்திகளை” தூக்கிவிட்டதாக கேள்விப்பட்டேன். அதன்பின்னர் ஒரு ஐந்தாண்டு காலத்துக்குப் பிறகு தான் மீண்டும் செய்திவாசிப்பாளர் ஆகவேண்டுமென்ற எண்ணம் வந்தது. தூர்தர்ஷன் செய்திகளுக்கு மவுசு குறைந்து சன் செய்திகள் பிரபலமான நேரம் அது. உச்சரிப்பு மட்டுமல்லாமல் தோற்றமும் செய்தி வாசிப்புக்கு முக்கியம் ஆகிப்போனது. பல்லி மாதிரி இருந்த நான் செய்தி வாசித்தால் யார் பார்ப்பார்கள்? என்ற தாழ்வுமனப்பான்மை எனக்கு எழுந்ததால் நான் எந்த முயற்சியும் செய்யவில்லை. அதே நேரத்தில் தூர்தர்ஷனில் செய்தி வாசிக்க ‘பட்டம்' பெற்றிருக்க வேண்டும் என்று சொன்னதால், வானில் மட்டுமே பட்டம் விடத்தெரிந்த நான் விரக்தி அடைந்துப் போயிருந்தேன். செய்தி வாசிப்பு ஆசையை எல்லாம் மறந்து ஏழெட்டு ஆண்டுகள் கடந்த நிலையில் இருமாதங்களுக்கு முன்பு ‘சன் நியூஸில்' என்னுடைய ஒரு பைட்டு காட்டப்பட்டதால் மீண்டும் அந்த ஆசை கிளர்த்தெழுந்திருக்கிறது. செய்திகள் சம்பந்தப்பட்ட நண்பர் ஒருவரிடம் ”நான் செய்தி வாசிக்க இயலுமா?” என்று கேட்டபோது ”இன்னமும் உன் குரல் உடையவில்லையே தம்பி. ஆள் கொஞ்சம் பரவாயில்லை. குரல் தான் கம்பீரமா இல்லை” என்று சொன்னதுமே கொஞ்சம் அடங்கிவிட்டேன். நண்பர் சொல்வது உண்மை தான். க்ரெடிட்கார்டு, லோனுக்கு எனக்கு தொலைபேசும் கும்மிகள் சில நேரங்களில் “மேடம்” என்று கூட விளிப்பதுண்டு. சென்ற வாரம் தென்மாவட்டங்களுக்கு அலுவலகப் பணி காரணமாக போயிருந்தபோது அங்கிருந்த உள்ளூர் சேனல்களின் செய்தியைப் பார்த்தேன். குரல், உச்சரிப்பு, தோற்றம் எதையுமே கணக்கில் கொள்ளாமல் செய்திவாசிப்பாளர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் :-) அட்லீஸ்ட் அங்கிருக்கும் ஒரு சேனலிலாவது ஒரே ஒருநாளாவது செய்திகள் வாசித்துவிடவேண்டும் என்ற கொலைவெறி மீண்டும் வந்திருக்கிறது. பார்ப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக