7 நவம்பர், 2008

குவாண்டம் ஆஃப் சோலஸ்!

முந்தைய பாகமான கேசினோ ராயலின் க்ளைமேக்ஸில் இருந்து அதிரடியாக தொடங்குகிறது குவாண்டம் ஆஃப் சோலஸ். படு பரபரப்பான கார் சேஸிங் ஓபனிங்கின் இறுதியில் வெற்றி வழக்கம்போல ஜேம்ஸுக்கே. முந்தைய பாகத்தில் கொல்லப்பட்ட ஜேம்ஸின் காதலி வெஸ்பரின் மரணத்துக்கு பழிதீர்க்க அடிபட்ட வேங்கையாய் குமுறிக்கொண்டிருக்கிறார் ஜேம்ஸ். அவரிடம் இருந்த ஒரே ஆதாரம் ஒயிட். ஒயிட்டை விசாரித்துக் கொண்டிருக்கும்போதே ஜேம்ஸ் குழுவில் இருக்கும் சகா மிட்சல் என்பவர் ஒயிட்டை தப்புவிக்க விசாரணைக்குழுவை சுட்டுவிட்டு தப்பி ஓடுகிறார். பின்னணியில் இருக்கும் குழு எத்தகைய தந்திரமிக்கது, செல்வாக்கானது என்பதை ஜேம்ஸ் உணருகிறார். அந்த குழுவின் பெயர் குவாண்டம் என்பதைத் தவிர்த்து அப்போதைக்கு வேறு க்ளூ எதுவுமில்லை. வழக்கம்போல ஓரிரு அழகிகளோடும், இரவுப்பொழுது சல்லாபங்களோடும் கொஞ்சம் சீரியஸாகவே இந்தமுறை விசாரணையை மேற்கொள்கிறார் ஏஜெண்டு 007. விசாரணைக்கு அரசாங்கரீதியான முட்டுக்கட்டைகள் வந்தாலும், அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து, ஒரு கட்டத்தில் தன் பாஸையே கூட முறைத்துக்கொண்டு, க்ளைமேக்ஸில் பாண்டுக்கு வெற்றி. படம் முழுக்க கண்களில் கொலைவெறியோடு அய்யனார் போல ஆவேசமாக அலையும் ஜேம்ஸ் தன்னுடைய தனிப்பட்ட பழி தீர்ந்தபிறகே மலையேறுகிறார். இவ்வளவு ஆக்ரோஷமாக ஜேம்ஸை இதற்கு முந்தைய படங்களில் பார்த்திருக்க முடியாது. கதாநாயகிக்கும் ஜேம்ஸ் போலவே பழிவாங்கும் வெறி. அழகான, அசத்தல் கட்டையான அவரது கண்கள் மட்டும் நாகப்பாம்பை நினைவுறுத்துகிறது. ஜேம்ஸ் பாண்டாக டேனியல் க்ரேக்குக்கு ரெண்டாவது படம். இதுவரை வந்த ஜேம்ஸ் பாண்ட்களிலேயே கட்டுடல் இவருக்குத்தான். ரீட் & டைலர் கோட் சூட் போட்டாலும் கூட உடல் கட்டு தெறித்துக்கொண்டு தெரிகிறது. பாண்ட் படங்களுக்கு ஹீரோயின்களை எங்கிருந்து பிடிப்பார்களோ தெரியவில்லை. உலக அழகிகளை விடவும் அழகாக இருக்கிறார்கள். அதிலும் டேன் செய்து உடலை மாநிறமாக்கியிருக்கும் அழகி கேமில் செம பீஸ். கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்தில் சொல்லவேண்டிய கதையை காட்டுத்தனமான எடிட்டிங் மூலமாக ரெண்டு மணி நேரத்தில் சொல்லியிருக்கிறார்கள். இப்படத்தின் பின்னணி இசை இசையமைப்பாளர்களுக்கு பாடம். காட்சிக்கு இசையால் மட்டுமே கூட பரபரப்பை ஏற்படுத்தமுடியும் என்பதை படத்தின் பல காட்சிகள் நிரூபிக்கிறது. கடந்த வாரம் ஐரோப்பியநாடுகளில் வெளியான படம் இவ்வாரம் இந்தியாவில் வெளியாகியிருக்கிறது. ஜேம்ஸை தரிசிக்கும் பாக்கியம் அமெரிக்கர்களுக்கு அடுத்த வாரம் தானாம். உலகெங்கும் நல்லபடியான விமர்சனங்களோடு வசூல்சாதனைகளை ஜேம்ஸ் மீண்டும் முறியடித்திருக்கிறார். வெகுவேகமான காட்சியமைப்புகள் இந்தியாவில் இப்படத்தின் வெற்றியை பாதிக்கக்கூடும். கண்டிப்பாக காண வேண்டிய படம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக