5 நவம்பர், 2008

சினிமா தீபாவளி 2008

எனக்கு நினைவு தெரிந்த ஒரு தீபாவளிக்கு மொத்தம் 19 படங்கள் வெளிவந்தது. அது 87 தீபாவளி. அவற்றில் 17 படங்களுக்கு இசை இளையராஜா என்பது குறிப்பிடவேண்டிய பொட்டிச் செய்தி. அதெல்லாம் அந்தக் காலம். ரஜினி, கமல் படங்கள் ரிலீஸ் இல்லாவிட்டால் அப்போதெல்லாம் தீபாவளியே இல்லை. மனிதன் - நாயகன், மாப்பிள்ளை - வெற்றிவிழா, தளபதி - குணா, பாண்டியன் - தேவர் மகன், முத்து - குருதிப்புனல் என்று தீபாவளிக்கு தீபாவளி சரவெடி தான். ரஜினி, கமல் படங்கள் மட்டுமன்றி விஜயகாந்த், சத்யராஜ் என்று அடுத்த நிலையில் இருப்பவர்களின் படங்களும், அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த ஒப்புக்கு சப்பாணிகளின் படங்களும் அதிரடியாக களமிறங்கிய காலம். தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த டர்ன் ஓவரில் நாற்பது, ஐம்பது சதவிகித வசூலை தீபாவளியிலேயே எடுத்துக் கொண்டிருந்த காலம். ம்ம்.. எல்லாம் இப்போது கானல் நீர்! தமிழின் முதல் சூப்பர் டூப்பர் ஹிட் படமான ஹரிதாஸ் கூட 1944 தீபாவளி ரிலீஸ் தான். தீபாவளியில் அப்படியென்ன ஸ்பெஷல்? மக்களிடையே பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் மாதங்கள் இரண்டு. ஒன்று தீபாவளி வரும் அக்டோபர் அல்லது நவம்பர். கூடுதலாக ஒரு மாத சம்பளத்தை போனஸ் வாங்கியிருப்பார்கள், தாராளமாக செலவழிப்பார்கள். அடுத்தது பள்ளிகள் திறக்கும் காலமான ஜூன் மாதம், இம்மாதத்தில் கடனோ, உடனோ வாங்கி பிள்ளைகளின் கல்விச்செலவுக்கு தாராளமாக செலவழித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டாவது பணப்புழக்க மாதத்தில் சினிமாவுக்கு நோ சான்ஸ். ஆனால் அதற்கு முன்பாக ஏப்ரல் - மே மாதங்கள் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் விடுமுறை காலமென்பதால் ஏப்ரல் 14 ரிலீஸில் சினிமாக்காரர்கள் ஒரு காட்டு காட்ட முடியும். சினிமாக்காரர்களுக்கு ஏப்ரல் 14 சின்ன தீபாவளி. தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் ஷிப்டிங் முறையிலும் சக்கைபோடு போடும் என்பது ஸ்பெஷலுக்கு இன்னொரு காரணம். உதாரணத்துக்கு செங்கல்பட்டில் ஒரு படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். அது வெற்றிகரமாக ஐம்பது நாட்களை கடக்கும்போது பொங்கல் வந்து விடும். பொங்கலுக்கு புதுப்படம் ரிலீஸ் செய்யவேண்டும். அந்நேரத்தில் இங்கு ஐம்பது நாள் ஓடிய படம் உத்திரமேரூரில் இருக்கும் ‘பி' செண்டர் தியேட்டரில் செகண்ட் ரிலீஸ் செய்யப்படும். இதன் பெயர் தான் ஷிப்டிங். ரிலீஸின் போது நன்கு பேசப்பட்ட படமாக இருந்தால் ஷிப்டிங்கின் போதும் ஒரு அள்ளு அள்ளிவிடும் (87 தீபாவளிக்கு வெளியான மனிதன் 88 தீபாவளிக்கு நங்கநல்லூர் ரங்காவில் ஷிப்டிங்கில் ரிலீஸாகி ஹவுஸ்புல் ஆகி சாதனை படைத்தது). ஷிப்டிங் வசூல் முடிந்தப் பிறகும் கிராமங்களில் இருக்கும் ‘சி' செண்டர் தியேட்டர்களில் களமிறங்கி விநியோகஸ்தர்களின் பாக்கெட்டை நிரப்பும். இப்படியாக தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் சரக்கு கொஞ்சம் சுமாராக இருந்தாலே அடுத்த தீபாவளி வரை ஒரு வருடத்துக்கு அதை வைத்து வருமானம் பார்க்க முடியும். எனவே படவெளியீடுக்கு ஏற்ற சரியான தேதியாக தீபாவளி அமைந்திருக்கிறது. தீபாவளி தவிர்த்து மற்ற தேதிகளில் வெளியாகும் படங்கள் இந்த ரிலீஸ் - ஷிப்டிங் பிராசஸிங்கில் கொஞ்சம் அடிவாங்குவது உண்டு. பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே இதிலிருந்து தப்பிக்கும். 2007 தீபாவளிக்காவது 7 படங்கள் வந்தது. 2008க்கு மூன்றே மூன்று படங்கள். ஏகன், சேவல், மேகம். என்ன கொடுமை சார் இது? மூன்றே மூன்று படங்கள் தான் வந்திருக்கிறது என்பதால் மூன்றுமே நியாயமாகப் பார்க்கப் போனால் சூப்பர் ஹிட் ஆகியிருக்க வேண்டும். ஏகனும், சேவலும் ஓப்பனிங்கில் அசத்தி, படம் பார்த்தவர்களை அயர்ச்சியடைய வைத்து, போனால் போகட்டும் என்று ஓடிக்கொண்டிருக்கிறது. மேகம் சொல்லவே தேவையில்லை. தமிழரசன், பி.ஏ., பி.எல்., என்பவர் தன்னை ஒரு ஹீரோவாக ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற கனவில் சில லட்சங்களை வீணடித்திருக்கிறார். கிட்டத்தட்ட மேகம் ஒரு மேட்டர் படம். தமிழ் திரையுலக வரலாற்றுக்கே மிக மோசமான தீபாவளி இது. தியேட்டர்காரர்களும், வினியோகஸ்தர்களும் துவண்டுப் போயிருக்கிறார்கள். ஈயடிக்கும் தியேட்டர்களில் 'காதலில் விழுந்தேன்' வேறு வழியின்றி ஷிப்டிங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. நம்பிக்கையோடு தமிழ் சினிமாவில் முதலீடு செய்த கார்ப்பரேட் நிறுவனங்கள் கையைப் பிசைந்துக் கொண்டு நிற்கின்றன. முதலீட்டாளர்களுக்கு பதில் சொல்ல வேண்டும்? வழக்கம்போல இந்த சோகமான சூழ்நிலைக்கு சினிமாக்காரர்கள் திருட்டு டிவிடியை காரணம் சொல்கிறார்கள். உண்மையில் சினிமாக்காரர்களின் பேராசை திருட்டு டிவிடியை விட மோசமானது. சின்னப்பா தேவர், ஏவிஎம், வாசன் போன்ற அந்தக்காலத்து தயாரிப்பாளர்கள் சினிமாவை ஒரு தொழிலாக பார்த்தார்கள். இன்றோ சூப்பர்குட் பிலிம்ஸ் போன்ற ஒரு சில நிறுவனங்களை தவிர்த்து மீதமுள்ள தயாரிப்பாளர்கள் இத்தொழிலை குதிரைப் பந்தயமாக பார்க்கிறார்கள். அஜித்தை வைத்து பண்ணிரண்டு கோடி செலவழித்தால் இருபத்து ஐந்து கோடியை எடுத்துவிடலாம் என்று ஆதாரமேயில்லாமல் அபத்தமாக நம்புகிறார்கள். இவ்வளவு முதலீட்டுக்கு இவ்வளவு லாபம் போதுமென்ற மனம் இவர்களுக்கு இல்லை. ஓரிரு படங்களிலேயே அம்பானி ஆகிவிட முயற்சிக்கிறார்கள். இந்தியாவிலேயே ஊழலும், சுரண்டலும் பெரியளவில் இன்று நடைபெறும் தொழிலாக திரைத்தொழில் மாறிவிட்டது. தமிழ் திரையுலகம் இருப்பதிலேயே ரொம்பவும் மோசம். முதல் படத்துக்கு எழுபத்தைந்தாயிரம் சம்பளம் வாங்கி சூப்பர்ஹிட் படத்தை ஒரு இயக்குனர் தந்துவிட்டால், உடனே அடுத்த படத்துக்கு அவசர அவசரமாக முப்பது, நாப்பது லட்சம் சம்பளம் பேசுகிறார்கள். கதை கூட கேட்க வேண்டியதில்லை. ஒரு ஹீரோவின் படம் சுமாராக ஓடிவிட்டால் போதும், அவர் எவ்வளவு கேட்டாலும் தர தயாரிப்பாளர்கள் தயார். படம் ஓடுவது ஹீரோவுக்காக தான் என்று தயாரிப்பாளர்கள் நம்புவதை விட பெரிய காமெடி வேறு எதுவுமில்லை. சினிமா தயாரிக்க பணம் கூட இப்போது அவசியமில்லை. ஹீரோவின் கால்ஷீட் யாரிடம் இருக்கிறதோ அவர் தான் தயாரிப்பாளர். ”அந்த ஹீரோவோட கால்ஷீட் இருக்கு” என்று சொல்லியே பைனான்ஸ் வாங்கிவிடலாம். கதை இல்லாவிட்டால் பப்பு வேகாது என்ற உண்மை சராசரி சினிமா ரசிகனுக்கு கூட தெரிந்திருக்கும் நிலையில் இன்னமும் சினிமாவிலேயே பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கு கூட தெரியாதது ஆச்சரியமாக தானிருக்கிறது. 2008ல் நிஜமாகவே வெற்றிபெற்ற சில படங்களைப் பார்த்தாலே புரியும், எதனால் படங்கள் வெற்றியடைகின்றன என்று. அஞ்சாதே, சுப்பிரமணியபுரம், தசாவதாரம் - இவற்றில் அஞ்சாதே, சுப்பிரமணியபுரம் படங்களில் ஹீரோவின் பங்கு என்ன? அழகிய தமிழ்மகன், குருவி, குசேலன் என்று சமீபத்தில் ஹீரோவை நம்பி பப்படமான படங்கள் உணர்த்தும் பாடமென்ன? அப்பா தயாரிப்பாளர் என்பதால் மட்டுமே இயக்குனராகிவிட்ட இயக்குனரின் சக்கரைக்கட்டி உணர்த்துவதென்ன? ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், என்று பிரபலங்கள் இருந்தாலே வெற்றி உறுதி என்று நினைப்பது மடத்தனமா இல்லையா? சிம்பு எத்தனை ஹிட் கொடுத்திருக்கிறார்? அவருக்கு கோடிகளை கொட்டி கொடுப்பதால் என்ன பயன்? 80 லட்சத்தில் எடுக்கப்பட்ட திருடா திருடி பதினைந்து கோடி வசூலித்துக் கொடுத்தது என்றால் அந்த படம் நன்றாக இருந்தது, மக்களுக்குப் பிடித்தது என்று பொருள். அது தனுஷ் நடித்ததால் மட்டுமே ஓடிவிடவில்லை. இவர்கள் பங்குபெறும் படங்கள் நன்றாக இருந்தால் மட்டுமே கடந்த காலங்களில் ஓடியிருக்கிறது என்பதை கூட அறியமுடியாத அளவுக்கு நம் சினிமாக்காரர்களுக்கு மூளை மழுங்கிவிட்டதா? இனியாவது சினிமாக்காரர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். போடும் முதலீட்டுக்கேற்ப நியாயமான லாபம் கிடைத்தால் போதுமென்ற மனத்துக்கு தயாராக வேண்டும். நட்சத்திரங்களை நம்பி நட்டாற்றில் இறங்கக் கூடாது. குறைந்த முதலீட்டில் தரமான படங்களை தயாரிக்க முயற்சிக்க வேண்டும். திரையரங்குகளில் கட்டணங்களை குறைத்தாலே திருட்டு விசிடியை ஒழித்துவிட முடியும். இன்னமும் தங்கள் தொடர்தோல்விக்கு திருட்டு விசிடி தான் காரணமென்று கூறி தங்கள் தரப்பு தவறுகளை தொடர்ந்து மூடி மறைத்துக் கொண்டிருந்தால், பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகத்தை பார்த்த கதையாகிவிடும். அடுத்த தீபாவளியாவது தமிழ் சினிமாவுக்கு உருப்படியான தீபாவளியாக அமையுமென்று எதிர்பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக