October 18, 2008

ஹாய்.. ஹாய்.. ஹாய்..

சில நாட்களாக பதிவெழுத முடியவில்லை என்றில்லை, பதிவெழுத பிடிக்கவில்லை. இதுவரை எழுதிய நானூற்றி சொச்சம் பதிவுகளை அபவுட் டர்ன் எடுத்து திரும்பிப் பார்த்தபின், அங்கு கொட்டிய குப்பைகளை வேறு வேறு தினுசில் தான் புதியதாக கொட்டப்போகிறேன் என்று தோன்றியது. புதிய வார்த்தைகளோடு, புதிய நடையில் எழுத எல்லோரையும் போல ஆசையாக இருப்பதால் கொஞ்சம் விரல்களுக்கு ஓய்வு கொடுக்கலாம் என்று எண்ணம். சங்க காலத்திலிருந்தே வாசி, வாசி என்று கூறி சில ஆபாச வார்த்தைகளில் தொடர்ந்து திட்டி வருகிறார் பாலா அண்ணா.

கடந்த ஒரு ஆண்டாக படுக்கையறை லைப்ரரியில் சேர்ந்துவிட்ட புத்தகங்களை ஒட்டுமொத்தமாக வாசிக்க முடியாவிட்டாலும், கொஞ்சம் கொஞ்சமாகவாவது வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்று வருகிறது. அதுவுமில்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சிக்கொள்ளத்தக்க நிறைய பிரமோஷன்கள். அடுத்த ஆண்டு மே மாதம் இறுதியிலோ, அல்லது ஜூன் ஆரம்பத்திலோ கிடைக்கப் போகும் பெரிய பிரமோஷனுக்காக தவம் இருந்துகொண்டிருக்கிறேன்.

இந்த ஒருவாரமாக தொடர்ச்சியாக பதிவெழுதாததால் என்னென்ன மாற்றங்கள் விளைந்திருக்கிறது என்று பார்த்தோமானால்...

- உலகம் வழக்கம் போலவே சூரியனை சுற்றி வருகிறது. ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

- ரேஷன் கடையில் அரிசி ஒரு ரூபாய்க்கு தான் இன்னமும் கிடைக்கிறது.

- பங்குச்சந்தை தொடர்ந்து வீழ்ந்து வருகிறது.

- ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருக்கும் கடிகாரம் சரியான நேரத்தையே காட்டுகிறது.

- ராஜபக்‌ஷே திருந்திவிடவில்லை.

- அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

- பருவமழை தீவிரமடைந்திருக்கிறது.

- தமிழ்மணத்தில் 'பெருசு' பதிவரால் வழக்கம்போல உயர்சாதியுணர்வு ஊட்டி வளர்க்கப்படுகிறது.

- நந்தனம் சிக்னலில் டிராபிக் ஜாம் குறைந்தபாடில்லை.

- ரங்கநாதன் தெருவில் வழக்கத்தை விட அதிகமாக தீபாவளிக்கூட்டம்.

எல்லாமே வழக்கப்படிதான் நடந்து வருகிறது. 'நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாம்' ரேஞ்சுக்கு எதுவும் நடந்துவிடவில்லை என்பதால் நான் எழுதாவிட்டால் யாருக்கும் நஷ்டமுமில்லை, லாபமுமில்லை. பிரபுசங்கர் என்ற நம்பர் எஸ்.எம்.எஸ். மூலமாக ஏன் எழுதவில்லை என்று கேட்டார். பெங்களூரிலிருந்து ஒரு வாசகியும் (நிஜமாத்தான்) தொடர்ந்து எழுதச்சொல்லி வற்புறுத்தினார். அவர்களுக்காக மட்டும் இந்தப் பதிவு...

பின்னூட்டத்தை வெளியிட முடியாத அளவுக்கு சோம்பேறித்தனமாக இருப்பதால் நண்பர் ஒருவரிடம் பாஸ்வேர்டு கொடுத்து பின்னூட்டங்களை வெளியிட சொல்லப்போகிறேன். எனவே இங்கு பின்னூட்டம் போடுபவர்கள் லக்கிலுக் பின்னூட்டத்தை வெளியிடாமல் ஆணவமாக செயல்படுகிறார் என்று தனிப்பதிவு போட்டு திட்டிக்கொள்ள முழு சுதந்திரத்தையும் மனமுவந்து அளிக்கிறேன்.


* - * - * - * - * - * - * - * - * - *

அக்டோபர் 16, நள்ளிரவு 11:59 மணிக்கு ஒரு அனானி நண்பர் மின்னஞ்சலில் அனுப்பிய கேள்வி :

தோழர்! அவ்வப்போது 'தானே கேள்வி தானே பதில்' எழுதி வருகிறீர்கள். மற்றவர்களை கேள்வி கேட்க சொல்லி வாரம் ஒருமுறை பதில் சொல்லலாமே?

பதில் : தங்கள் ஆலோசனைக்கு நன்றி தோழர். வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் என்னிடம் கேள்வி கேட்பதைத் தவிர்த்து நிறைய உருப்படியான வேலைகள் இருக்குமென நம்புகிறேன். நீங்கள் கேட்டதைப் போல ஒரு கேள்வி பதில் பகுதியை அறிவித்துவிட்டு யாரும் கேள்வி கேட்காமல் நானே பதினைந்து, இருபது ஐடி கிரியேட் செய்து, அதோடு அனானியாகவும் நானே என்னை கேள்வி கேட்டு நானே பதில் சொல்ல நான் என்ன செஃல்ப் எடுக்காத வயாகரா கேஸா?

வீரத்தோடும், தீரத்தோடும் நாமே நம்மை கேள்வி கேட்டு, நாமே பதிலையும் சொல்லிவிடுவோம் தோழர்...

* - * - * - * - * - * - * - * - * - *

ஆர்னிகா நாசர் ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளர் என்று எங்கோ எழுதியிருந்ததை படித்தேன். ஆர்னிகா நாசர் ஒரு நல்ல Pulp Fiction எழுத்தாளர் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். தினமலர் டி.வி.ஆர் நினைவுப்போட்டியில் பரிசுபெற்ற அவரது முதல் கதையில் இருந்து, தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது விட்டு விட்டு அவரை தொடர்ந்து வாசித்து வருகிறேன். சில விஞ்ஞான சிறுகதைகள் மற்றும் நாவல்கள் கூட முயற்சித்திருக்கிறார். புதிய புதிய வார்த்தைகளை (உதா : கையளித்து) போட்டு சுவாரஸ்யமாக எழுதுவார். ஆனால் அவர் மேஜிக்கல் ரியலிஸம் எழுதினார், அதனால் அவர் போஸ்ட் மார்டனிஸ்ட் என்று சொல்லியிருந்தது மாதிரி அபத்தமான ஸ்டேட்மெண்ட் எதுவுமே இல்லை. போஸ்ட் மார்டனிஸமும் நூற்றுச் சொச்சம் இஸங்களில் ஒரு இஸம் தான். இஸம் எல்லாமே போஸ்ட் மார்டனிஸம் என்று யாராவது புரிந்துகொண்டிருந்தால் அவர்கள் கன்பூசியஸத்தையும் போஸ்ட் மார்டனிஸம் லிஸ்டில் சேர்த்துத் தொலைத்துக் கொள்ளலாம்.

போஸ்ட் மார்டனிஸம் என்பது ஒரு சூழல். இதை புரிந்துகொண்டால் யாராவது ஒரு கோடி ரூபாய் பரிசோ, புரிந்துகொள்ளாவிட்டால் மரணத்தண்டனையோ கிடைக்கப்போவதில்லை. ரொம்ப புரிந்துகொண்டது மாதிரி எக்ஸ்பிரஷனிஸம், இம்ப்ரெஸனிஸம் கந்தாயங்களை விக்கிபீடியாவில் படித்து, தானே சிந்தித்தது மாதிரி அதையெல்லாம் கொடூரமாக தமிழாக்கம் செய்து, "இதெல்லாம் போஸ்ட் மார்டனிஸம்" என்று எழுதி தன்னை அறிவுஜீவி என்று காட்டிக்கொள்ள யாராவது முயற்சித்தால் அவர்களை விட பெரிய காமெடியன்கள் தமிழ் வலையுலகில் வேறு யாரும் இருந்துவிட முடியாது. எம்.ஜி.சுரேஷ் எழுதிய பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள் தொடர் வரிசை புத்தகங்களை கூட இன்னும் வாசிக்காததால் இதைப்பற்றியெல்லாம் சிந்திக்கக்கூட எனக்கு
அருகதையில்லை என்று நினைக்கிறேன்.

போஸ்ட் மார்டனிஸம் குறித்து வலையில் வளர்மதி விளக்கமாக எழுதியிருக்கிறார். ஓரிருமுறை அப்பதிவுகளை வாசித்தால் புரியும். பைத்தியக்காரனும் கொஞ்சம் எளிமைப்படுத்தி உதாரணங்களோடு எழுதியிருக்கிறார். பைத்தியக்காரன் பதிவுகளை புரியும்படி எழுதினாலும், பின்னூட்டங்களை மட்டும் டவுசர் கிழிக்கும் வகையில் எழுதுவார். மண்ணுக்கேற்ற மார்க்ஸியம் என்பது மாதிரி சுகுணாதிவாகரும், ஜ்யோவ்ராம் சுந்தரும் மண்வாசனையோடும், தண்ணி வாசனையோடும் அவ்வப்போது எழுதிவருகிறார்கள். ஜமாலன், நாகார்ஜூனன் போன்றவர்கள் எழுதுவதை தமிழ் அகராதி வைத்துக்கொண்டு வாசிக்கலாம். என்னைப் பொறுத்தவரை செந்தழல் ரவி தான் சூப்பர் டூப்பர் போஸ்ட் மார்டனிஸ்ட். கொடுமை என்னவென்றால் அவர் ஒரு போஸ்ட் மார்டனிஸ்ட் என்பது அவருக்கே தெரியாது.

No comments:

Post a Comment