29 அக்டோபர், 2008

இட்லிவடை - இப்போது இத்துப்போன கடை!


இட்லிவடை வலைப்பூ ஆரம்பித்து ஐந்தாண்டுகள் நிறைவு பெறுவதைத் தொடர்ந்து வலைப்பதிவர்களை தன் வலைப்பூவுக்கு விமர்சனம் எழுதச் சொல்லி இட்லிவடை கேட்டுவந்தார். எனக்கு வந்த ஸ்பெஷல் அழைப்பைத் தொடர்ந்து நான் எழுதியிருக்கும் விமர்சனம் இட்லிவடையிலும் வெளிவந்திருக்கிறது. இங்கேயும் வெட்டி ஒட்டுவது வரலாற்று அவசியமென்பதால் ஒட்டிவிடுகிறேன். 2005 வரை வலைப்பதிவுகள் என்றொரு புண்ணிய ஷேத்திரம் இருந்ததே நமக்கு தெரியாது. சிஸ் இண்டியா, தட்ஸ் தமிழ் இணையங்களில் மட்டுமே தமிழர்கள் ஜீவித்திருக்கிறார்கள் என்று நம்பிக்கொண்டிருந்தேன். தட்ஸ் தமிழ் கருத்துக் களத்தில் ரஜினி சார்பாக ஒரு தரப்பு கடுமையாக மோதிக்கொண்டிருக்க, பாமக சார்பாக இன்னொரு தரப்பு மும்முரமாக மோதிக்கொண்டிருந்தது. 2006 சட்டமன்றத் தேர்தல் வரும் நேரத்தில் அங்கிருந்த உறுப்பினர்கள் பலரும் பல கட்டுரைகளை எங்கிருந்தோ சுட்டுப் போட்டுக் கொண்டிருந்தார்கள். சில பேர் நாகரிகமாக சுட்ட சுட்டியை தருவார்கள். அதுபோல ஒருநாள் யதேச்சையாக கிடைத்த சுட்டி தான் இட்லிவடை.பிலாக்ஸ்பாட்.காம்.

எனக்குப் பிடித்த நாஷ்டா இட்லிவடையும், ஜமாவான வடகறியும். ஆட்டுக்கால் பாயாவோடு யாராவது இட்லிவடை சாப்பிட்டிருக்கிறீர்களா? உலகின் எந்த நாட்டு சிற்றூண்டியும் இந்த காம்பினேஷனிடம் பிச்சையெடுக்க வேண்டும். இட்லிவடை பெயரைக் கேட்டதுமே ஏதோ சமையல் குறிப்பு எழுதப்படும் இணையம் என்று உடனடியாக நினைத்தேன். அதில் ஏதோ அரசியல் கட்டுரை வந்ததும் ஆர்வத்தில் எட்டிப் பார்த்தேன். விகடன், குமுதம், தந்தி, தினமலர், துக்ளக், தினமணி என்று தமிழகத்தின் பத்திரிகைகள், நாளேடுகளில் இருந்து முக்கியச் செய்திகளை சுட்டுப் போட்டு வந்தது அப்போது தான் தெரிந்தது. அவ்வப்போது அதிரடி நகைச்சுவைக் கட்டுரைகளும், பதிவர்வட்ட பதிவுகளுமாக பட்டாசாக இருந்தது. உண்மையை சொல்லப்போனால் இட்லிவடை மீது அப்போது எனக்கு நடுநிலையான ஒரு பார்வை இருந்தது. ஆனாலும் இட்லிவடை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல தன்னுடைய அதிமுக - பாஜக - இந்துத்துவ கும்பலுக்கு ஆதரவான சிந்தனைகளை பரப்பி வருகிறதோ என்ற சந்தேகமும் ஒரு புறத்தில் இருந்தது.

தொடர்ந்து இட்லிவடை துக்ளக் மற்றும் தினமணி கார்ட்டூன்களையே தன்னுடைய அடைப்பலகையில் இடம்பெறச் செய்துக் கொண்டிருந்த வேளையில் இட்லிவடைக்கு ஒரு மடல் அனுப்பினேன். முரசொலி கார்ட்டூனெல்லாம் வராதா என்று கேட்டேன். நான் கேட்டதற்காக ஒன்றோ இரண்டோ முரசொலியிலும், தினகரனிலிருந்தும் போட்டிருந்தார். வாசகர் குரலுக்கு அப்போதைக்கு இட்லிவடை நல்ல மதிப்பு கொடுப்பவர்(கள்) என்பதற்கு இது ஒரு சான்று. இட்லிவடையோடு எனக்கு பிரச்சினை ஆரம்பித்தது ஒரு பதிவர் சந்திப்பின் போது. இட்லிவடை ஒரு உளவாளியை அச்சந்திப்புக்கு அனுப்பி போட்டோக்களாக சுட்டுத்தள்ளி சென்சேஷனல் ஆக்கியது. அந்நேரத்தில் பல பதிவர்கள் போலி பிரச்சினை காரணமாக தங்கள் படங்கள் எங்கேயும் வெளிவந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். அச்சந்தர்ப்பத்தில் என்னுடைய புகைப்படத்தை முதன்முறையாக இணையத்தில் இடம்பெறச் செய்ததும் இட்லிவடை தான். அதுவரை தொடர்ந்து இட்லிவடையை வாசித்து பின்னூட்டம் இட்டுக்கொண்டிருந்த நான் அதன்பிறகு இட்லிவடைக்கு பின்னூட்டம் இடுவதை நிறுத்தினேன். அப்பிரச்சினைக்கு பிறகு அனேகமாக ஓரிரண்டு பின்னூட்டங்களை மட்டுமே தவிர்க்க இயலாத நேரங்களில் இட்டிருப்பதாக நினைவு.

இட்லிவடையின் கருத்துக்கணிப்புகள் ஆஹா.. ஓஹோ..வென்று புகழுபவர்கள் நிறைய. என்னைப் பொறுத்தவரை இட்லிவடையின் வாசகர்கள் 95 சதவிகிதம் 'சாம்பார்' பார்ட்டிகள் தான். சாம்பார்கள் மெச்சிக்கொள்ளும் விதமான செய்திகளும், கணிப்புகளும் தான் இட்லிவடையில் வெளிவருகிறது. உதாரணத்துக்கு 2006ல் இட்லிவடை எடுத்திருந்த இந்தக் கருத்துக் கணிப்பை சொல்லலாம் - http://idlyvadai.blogspot.com/2006/01/blog-post_30.html. இக்கணிப்பு எந்தளவுக்கு நடந்தது என்பதை நாமனைவரும் அறிவோம். இட்லிவடையின் கருத்துக் கணிப்புகள் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, நங்கநல்லூர் ஆகிய பகுதிகளின் கணிப்பாக கொள்ளலாம்.

இட்லிவடையின் நகைச்சுவையுணர்வு அபாரமானது. ஒருமுறை பதிவர்களை சினிமாப்படங்களோடு ஒப்பிட்டு எழுதிய பதிவு, உலகம் அழிந்தால் பதிவர்கள் என்ன ஆவார்கள் என்று எழுதிய பதிவெல்லாம் நான் பலமுறை படித்து மகிழ்ந்தது. இட்லிவடையின் ஜிமெயில் ஹாக் செய்யப்பட்ட சம்பவம் ஒரு அட்டகாசமான க்ரைம் நாவலுக்கு உரித்தான மர்ம முடிச்சுகள் நிறைந்தது. யார் ஹாக் செய்தார்கள் என்று கண்டறிந்துவிட்டதாகவும், அதுகுறித்த நடவடிக்கை எடுத்துவருவதாகவும் இட்லிவடையார் சொல்லியிருந்தார். ஆனால் வழக்கம்போல லீஸில் விட்டுவிட்டார்.

இட்லிவடை ஒரு குழு என்றும் அதில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்றும் அவ்வப்போது கிசுகிசுக்கள் கிளம்புவதுண்டு. எனக்கு இந்த கிசுகிசுக்களில் அதிக ஆர்வம். இட்லிவடைக்கு ஓரிரு ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கலாம். பல பதிவர்கள் அனுப்பும் விஷயங்களை தன் பாணியில் இட்லிவடை வெளியிடலாம் என்பது தான் என் கணிப்பு. ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக ஹரன்பிரசன்னா இருக்கலாம் என்று நினைக்கிறேன். இட்லிவடையில் வெளிப்படையாக தெரியும் கருணாநிதி வெறுப்புக்கு அவர் காரணமாக இருக்கலாம். சில நேரங்களில் கலைஞரை பாராட்டிவரும் செய்திகளுக்கு கிருபாஷங்கர் காரணமாக இருக்கலாம். நிச்சயமாக பாஸ்டன் பாலாவுக்கு பங்கிருக்கும் என்று நம்புகிறேன். பெனாத்தல் இருப்பதாக சொல்லப்படுவது அநியாயம்.

இதெல்லாம் எனது கணிப்புதான். உறுதியாக சொல்ல இயலவில்லை. ஆனால் இட்லிவடை மெயிலை ஹாக் செய்தவராக நம்பப்படுபவர் தேசிகன் தான் இட்லிவடை என்று சொல்லுவதை நம்பாமலும் இருக்கமுடியவில்லை. பத்ரி கூட இட்லிவடை குழுவில் இருப்பதாக சொல்லப்படுவது நல்ல நகைச்சுவை. வேண்டுமானால் பாரா இருக்கலாம் என்று நம்புகிறேன். நான் கூட இட்லிவடைக்கு அவ்வப்போது செய்திகளை பார்வேர்டு செய்திருக்கிறேன். இதனால் நானும் இட்லிவடை குழுவில் ஒருவனா என்று தெரியவில்லை. ஆனால் இக்குழுவில் இணைய எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் ‘இட்லிவடையிலும் திராவிடக்குரல்' எழும்பும். என்றாவது இட்லிவடையில் கருணாநிதி வாழ்க என்று கோஷம் கேட்டால் லக்கியும் இட்லிவடைக் குழுவில் இருப்பதாக நீங்கள் நம்ப ஆரம்பிக்கலாம்.

இட்லிவடையின் முகமூடி (பதிவர் அல்ல) நிஜமாக கிழிந்தது என்றால் அது 2006 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பாக என்று சொல்லலாம். கலைஞர் மீண்டும் அரியணை ஏறிய எரிச்சல் அதன்பிறகு தொடர்ந்து இட்லிவடை பதிவுகளில் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது. தன்னை வெளிப்படையாக இந்துத்துவா ஆதரவோடு இட்லிவடை வெளிப்படுத்திய காலமென்று 2008ஐ சொல்லலாம். திரட்டிகளில் இருந்து விலகுவது என்று இட்லிவடை எடுத்த முடிவு மிகச்சரியானது. ஆனால் அதற்கு பின்னால் என்ன என்ன காரணத்தை இட்லிவடைக்குழு வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. முன்பெல்லாம் தினமும் எனக்கு இட்லிவடை பார்க்கும் வழக்கம் இருந்தது. இப்போதெல்லாம் பார்ப்பதில்லை. ஒவ்வொரு பிரச்சினையின் போதும் இட்லிவடை என்ன சொல்லுவார் என்பதை யூகிக்க முடிவதால் சுவாரஸ்யம் இருப்பதில்லை. இட்லிவடை ஒரு வெப் போர்ட்டலாக இன்னமும் மாறாதது ஆச்சரியம். ஆனால் இப்போதைய பாணியையே இட்லிவடை தொடர்ந்து கொண்டிருந்தால் வர வர மாமியார் கதை தான் ஆகும். உடனடியாக இட்லிவடைக்குழுவில் பழைய ஆட்களை தூக்கிவிட்டு வேறு ஆட்களை போடவேண்டும். ஈழப்போராட்டத்தைப் பற்றிய இட்லிவடையின் ஒருதலைபட்சப் பார்வை கடுமையாக கண்டிக்கத்தக்கது மட்டுமல்லாமல் விஷமமும் நிறைந்தது.

ஐந்தாண்டுகளை ஒரு வலைப்பூ துடிப்புடன் நிறைவு செய்வது என்பது இன்றைய தமிழ் வலையுலகைப் பொறுத்தவரை பெருத்த சாதனை. இவ்வகையில் திமுகவோடு இட்லிவடையை ஒப்பிட்டுப் பார்க்கிறேன். ஒரு பிராந்தியக்கட்சி உலகளவில் அரைநூற்றாண்டை கடந்தது ஒரு சாதனை என்பதால். இட்லிவடை கால்நூற்றாண்டு காலத்தையாவது நிறைவு செய்ய இந்த ஐந்தாண்டு நிறைவு காலத்தில் ஒரு எதிர்விமர்சகனாக வாழ்த்துகிறேன்.

28 அக்டோபர், 2008

ஆணாதிக்கம்!

'ஆணாதிக்கம்' என்ற சொல் பயன்படுத்த எளியதாக இருக்கிறது. யாரையாவது திட்டவேண்டுமானால் என்னைப் போன்ற விளிம்புநிலைவாதிகள் (இப்படி ஒரு சொல் இருக்கிறதா?) சென்னைப் பாஷையில் திட்டப்பட வேண்டியவனின் அம்மாவை திட்டிவிடுவோம். அறிவுஜீவிகள் வட்டாரத்திலோ 'அவன் ஒரு ஆணாதிக்கவாதி' என்று சொன்னால் போதும். திட்டப்பட்டவரின் தரம் பாதாளத்துக்கு கீழே போய்விடும். பெண்களை மலரென்றும், நிலவென்றும் வர்ணிப்பவனெல்லாம் ஆணாதிக்கவாதியென்றால் உலகின் ஒரு கவிஞனும் இந்த பட்டியலில் இருந்து தப்பிக்க முடியாது. சங்ககால புலவனிடமெல்லாம் சண்டைபோட வேண்டிவரும். விமனைசர் என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய ஒரு சொல் இருக்கிறது. காணும் பெண்களிடமெல்லாம் காமம் கொள்ளுபவனை சொல்லுவார்கள். அவன் ஆணாதிக்கவாதியா? விவாதம் செய்தால் அவன் கூட பெண்களை ஆராதிப்பவன் என்று விவாதிக்க முடியும். இரண்டு மூன்று பெண்களை திருமணம் செய்துகொண்டவர்களை ஆணாதிக்கவாதி என்று சொல்லலாமா? ம்ஹூம்.. இரண்டு மூன்று பெண்களுக்கு வாழ்வு கொடுத்தவர் என்றும் சொல்லலாம். ஆணாதிக்கவாதிகள் என்ற சொல்லுக்கு எதிர்ப்பதம் பெண்ணியவாதிகளா என்பது உறுதியாகத் தெரியவில்லை. பெண்ணியவாதிகள் பெரும்பாலும் பெண்களாக இருப்பது பெருங்கொடுமை. எனக்குத் தெரிந்த பெண்ணியவாதிகள் பலரும் வரதட்சணைக்கு எதிராக குமுதத்தில் கதை எழுதுகிறார்கள். நான்கைந்து பேராக சேர்ந்துக் கொண்டு சேரிக்குழந்தைகளுக்கு முடிவெட்டுகிறார்கள். மங்கையர் மலரிலும், அவள் விகடனிலும் சமையல் குறிப்பு வரைகிறார்கள். ஆண்களை விலங்குகளாக சித்தரித்து ஓவியக்கண்காட்சி நடத்துகிறார்கள். அவ்வப்போது கூடி காபியோடு, ஜாங்கிரி சாப்பிட்டு ஆணாதிக்கத்தை ஒழிக்க திட்டம் தீட்டுகிறார்கள். மாதர்சங்கங்களில் 'ஆண்கள் ஒழிக!' முழக்கமிட்டுவிட்டு மாமனாருக்கு மாத்திரை கொடுக்க ஐந்தரை மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போய்விடுகிறார்கள். யாரெல்லாம் பெண்ணியவாதிகள் என்பதிலேயே எனக்கு குழப்பம் இருக்கிறது. பாருங்கள், ஆணாதிக்கம் - பெண்ணியம் போன்ற சொற்களுக்கு சரியான பொருள்கூட தெரியாத நானெல்லாம் இதைப்பற்றி கிறுக்கிக் கிழிக்க வேண்டியிருக்கிறது, அதையும் நீங்கள் படித்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. என்ன கொடுமை சார் இதெல்லாம்? காலத்தின் கோலம். தேவ அடியாள் - தெய்வங்களுக்கு அடியாள் என்று வியாக்கியானம் சொன்னார்கள். தாசி இனத்தைச் சேர்ந்தப் பெண்களை நம் சமூகத்தில் இவ்வார்த்தைகளில் அழைத்தார்கள். இது பின்னர் கொச்சையாக 'தேவடியா' ஆக்கப்பட்டது. ஊர்ப் பண்ணையார்கள், கோயில் அர்ச்சகர்கள், சமூகத்தின் பெரிய மனிதர்களின் காமப்பசியை போக்க வற்புறுத்தப்பட்டவர்கள் தெய்வங்களுக்கு அடியார்களாம். தமிழில் ஒருவனை மிகத்தரக்குறைவாக திட்டுவதென்றால் 'தேவடியா மகனே!' என்று திட்டுகிறார்கள். தமிழ்சமூகத்தின் அப்பட்டமான ஆணாதிக்கத்துக்கு இது தக்க உதாரணம். திட்டவேண்டியவனை கூட திட்டாமல் அவனது தாயை திட்டச்சொல்லி நம்மை மொழி வற்புறுத்துகிறது. பல பேருக்கு முந்தி விரித்தவளின் மகனே என்பது அச்சொல்லுக்கு சரியான பொருள். தேவடியா என்ற சொல் பெண்பாலை இழிவுபடுத்துகிறதே? இதற்கு இணையாக ஆண்பாலில் திட்ட ஏதாவது சொல்லிருக்கிறதா? ஒரு மொழியே ஆணாதிக்கத்தை வற்புறுத்துகிறது என்றால் அந்த மொழியைப் பேசும் சமூகம் எவ்வளவு கீழ்த்தரமானதாக இருக்க வேண்டும்? பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதில் என்ன தவறு? சரி, மற்ற மொழிகளில் இதுபோன்ற குறைபாடுகள் இல்லையா? உதாரணத்துக்கு ஆங்கிலத்தில் 'Bastard' என்ற சொல்லும் இருக்கிறதே என்று எதிர்வினைக்காக யாராவது கேட்கலாம். Bastard என்ற சொல்லுக்கு ஆங்கில அகராதிகள் 'The illegitimate offspring of unmarried parents' என்ற பொருளைத் தருகிறது. தேவடியா மகனுக்கும், Bastardக்கும் இடையில் இருக்கும் பெரிய வித்தியாசம் தெரிகிறதா? Bastard என்ற சொல் திட்டப்படுபவனின் தாயை மட்டுமன்றி, தந்தையையும் சேர்த்து குறிக்கிறது இல்லையா? உடனே யாராவது Bitch என்ற சொல்லை நினைவுறுத்தலாம். Bitch என்ற சொல்லுக்கும் Female of any member of the dog family என்றே பொருள் இருக்கிறது. அதாவது பெண்ணை திட்டமட்டும் இச்சொல்லை பயன்படுத்தலாம். நாயே என்று திட்டுகிறோம் இல்லையா? பெண்ணை நாய் என்று திட்ட Bitch என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலம் தமிழைவிட உயர்ந்தது என்று சொல்லுவதற்காக இந்த உதாரணங்களை இங்கே பட்டியலிடவில்லை. ஆங்கிலம் பேசி வளர்ந்த சமூகம் திட்டுவதில் கூட ஆண்-பெண் சமநிலையை கடைப்பிடித்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவது மட்டுமே நம் நோக்கம். நம் சமூகமும், மொழியும் ஆணாதிக்கவாதிகளாகவே நம்மை வளர்த்தெடுத்து வருகிறது. இங்கே 'நம்மை' என்று சொல்லுவது பெண்களையும் சேர்த்தே. பெண்களும் ஆணாதிக்கவாதிகளாக தான் வளருகிறார்கள், வாழ்கிறார்கள். தங்கள் தந்தைக்கும், கணவனுக்கும், மகனுக்கும் வக்காலத்து வாங்கியே காலத்தை ஓட்டுகிறார்கள். அம்மாவை, தங்கையை, மகளை கேவலப்படுத்துகிறார்கள். 'ஆம்பளைப்புள்ள மாதிரி என்னடி ஆட்டம்?' என்று மகளை மிரட்டுபவர்கள் அம்மாக்கள் தான். குழந்தை பிறந்தால் 'பொட்டப்புள்ள பொறந்திருக்கு' என்று வருத்தத்தோடு பேசிக்கொள்ளுபவர்கள் வீட்டில் இருக்கும் கிழவிகள் தான். 'பொட்ட' என்ற பெண்பால் சொல் கூட ஆண் ஒருவனை கேவலப்படுத்தச் சொல்லப்படும் சொல்லாக மாறிவிட்டது. என்ன கொடுமை பாருங்கள். இக்கட்டுரையில் அடிக்கடி 'திட்டுவது' பற்றியே பேசிக்கொண்டிருப்பது ஏன் என்று நீங்கள் கேட்கக்கூடும். திட்டுவது மாதிரியான லுச்சா மேட்டரில் கூட இவ்வளவு ஆணாதிக்கம் இருக்கிறதென்றால், மற்ற விஷயங்களில் எவ்வளவு இருக்கும் என்று நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்பதற்காகத் தான் இவ்வளவு மெனக்கெடுகிறேன். கணவனை இழந்தவளை விதவை என்கிறோம். விதவைக்கு ஆண் பாலென்ன? மனைவியை இழந்தவனை என்ன சொல்லி கூப்பிடுவது? அடப்பாவிகளா.. ஆண்களுக்கு இதில் கூடவா சலுகை தருவீர்கள்? கணவனை இழந்தவள் பொட்டு வைக்கக்கூடாது, பூவைக்கக் கூடாது, சிங்காரித்துக் கொள்ளக்கூடாது. மறுமணமா? அதைப்பற்றி நினைத்தாலே அடுத்த ஜென்மத்தில் சோறு கூட கிடைக்காது. மனைவியை இழந்தவனோ எப்போதும் போல இருக்கலாம், தன் குழந்தைக்கொரு தாய் தேவையென்று இன்னொருவளை கட்டிக் கொள்ளலாம். அவளை சல்லாபித்துக் கொள்ளலாம். இங்கே பிறந்த ஒவ்வொருவரும் "த்தூ.." என்று மல்லாக்கப் படுத்துக் கொண்டு, எச்சிலைக் கூட்டி, கொத்தாக காறியுமிழுங்கள். நம் முகத்திலேயே எச்சில் தெறிக்கட்டும். பராசக்தி சிவாஜி மாதிரி பத்தி பத்தியாக பேசுகிறாயே, நீ மட்டும் பெண்ணியவாதியா என்று யாராவது கேட்பீர்கள். இல்லை. குறைந்தபட்சம் நான் ஒரு ஆணாதிக்கவாதி என்பதை மட்டுமாவது உணர்ந்திருக்கிறேன். நான் ஒரு மொள்ளமாறியாக, முடிச்சவிக்கியாக வாழ்கிறேன் என்றால் 'நான் ஒரு மொள்ளமாறி, முடிச்சவிக்கி' என்பதை உணர்ந்திட வேண்டும். என் அப்பாவுக்கு இந்த உணர்தல் கூட இருந்ததில்லை. அவர் வாழ்ந்த வாழ்க்கை இயல்பானது, சமமானது என்று தீவிரமாக நம்பியே செத்துப்போனார். என் தலைமுறையில் சிலர் ஓரளவுக்கு 'நாம் ஆணாதிக்கவாதிகள்' என்றாவது உணர்ந்திருக்கிறோம். பெண்களும் கூட தாங்கள் ஆணாதிக்கவாதிகளாக வளர்த்தெடுக்கப்படுகிறோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பெண்ணாக பிறந்துவிட்டால் மட்டும் பெண்ணியவாதியாகி விட முடியாது. அடுத்தடுத்த தலைமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாகவாவது மேம்பட்டு இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகளிலோ, இரண்டாயிரம் ஆண்டுகளிலோ தமிழ் குமுகாயம் ஆண் - பெண் சமநிலையை அடைந்துவிடும் என்று ஆணித்தரமாக நம்புவோம். பண்புடன் குழுமம் நட்சத்திரவாரத்துக்காக எழுதியது

சேவல்! - திரை விமர்சனம்!!

புள்ளையாண்டான் பரத் மொதல்லே எம்பெருமான் ஷேத்திரமான 'பழநி' பேருலே நடிச்சாரு. இப்போ முருகப் பெருமானோட வாகனமான சேவலா மாறி கொண்டையை சிலிர்த்துக்கிட்டு தீபாவளிக்கு வந்திருக்காரு. டைரக்டரோட பேரு ஹரி. பேரைப் பார்த்தா நம்மவா மாதிரி தெரியுது. ஆனா படத்துலே ஏகப்பட்ட சேட்டை செஞ்சிருக்காப்பல. ஹரி தனக்குன்னு ஒரு சக்ஸஸ் பார்முலா வெச்சுண்டிருப்பா போலிருக்கு. ஒரு பொறுக்கி ஹீரோ. வயசுக்கும், வளர்ச்சிக்கும் மீறி தாவணி போட்ட ஹீரோயினு. ரெண்டு பேர் ஃபேமிலிக்கும் சம் ட்ரெடிஷனல் வேல்யூஸ். இண்டர்-கல்ச்சர் லவ். வில்லன். ப்ராப்ளம்ஸ். க்ளைமேக்ஸ்லே எல்லாம் சால்வ். இதுதான் ஹரியோட பார்முலா. இதுவரைக்கும் தோத்ததில்லைன்னு அதையே இப்பவும் ஃபாலோ பண்ணியிருக்கா.
படம் 2008க்கும் 1989க்கும் அடிக்கடி ஜம்ப் ஆவுது. ஆயுள் தண்டனை முடிச்சிண்டு 2008லே பரத் ரிலீஸ் ஆவுறான். ஏன் ஜெயிலுக்கு போனான்னு பிளாஷ்பேக் தான் கதை. ஹரி இன்னும் 1980ஸ்லேயே வாழ்ந்துண்டுருக்கார். பூக்கார பொறுக்கிப் பையனுக்கு அக்ரஹாரத்து பொண்ணு மேலே லவ்வு வந்துடுது. கருமம். கருமம். இவன் தங்கையை லவ்வு பண்ணுறது தெரியாம கல்யாணம் ஆகி மாட்டுப்பொண்ணா வேறிடத்துக்குப் போன அக்காளை தான் லவ்வு பண்ணுறான்னு அக்கா நெனைச்சி, அவ கனவுலே ப்ளாக் & ஒயிட்லே "அதிசய ராகம்னு" பாட்டு பாடறா. கேவலம். கேவலம். ஹீரோயினுக்கு அக்காவா சிம்ரன். மாமி வேஷத்துக்கு நல்ல பொருத்தம். ஜெயா டிவி சீரியல்லே வந்தமாதிரியே அச்சு அசல் அக்ரஹாரத்து மாமி. பேஷ், பேஷ்.. ரொம்ப நன்னாருக்கா.. இந்த ரெண்டு பொண்ணுக்கும் அப்பாவா அப்பாவி பிராமணனா ஒய்.ஜி.மஹேந்திரன் அருமையா நடிச்சிருக்கர்.
சிம்ரன் ஒரு குழந்தையை பெத்துப் போட்டுட்டு புத்துநோய்லே செத்துப்போக, ஹீரோயினை சிம்ரனோட ஆம்படையானுக்கு ரெண்டாந்தாரமா கட்டி வைக்க, அவனும் வில்லனோட சதியிலே அசந்தர்ப்பமா மண்டையப் போட, ஹீரோயின் விதவையா நிக்க, ஹீரோ அவளை மறுமணம் கட்டிக்க வற்புறுத்த, பெரியவா எல்லாம் சேர்ந்து அவளுக்கு மொட்டை அடிச்சி மூலையிலே உட்கார வைக்க.. அய்யய்யோ.. எடையிலே ஒரு காமாந்தக வில்லன். அவனுக்கு ஹெல்ப் பண்ண ஒரு அக்ரஹாரத்து அம்பி. ரெண்டாவது ஹாஃப் செம இழுப்பு இழுத்திருக்கா. ஆனா தியேட்டர்லே படம் பார்த்த மொத்த மாமிங்களும் தாரைதாரையா கண்ணீர் வடிக்கிறா. ரெண்டே கால் மணி நேரப் படத்துக்கு இருநூறு, இருநூத்தம்பது சீன். டைரக்டரும், அவாளோட டீமும் மொத்தமா ரூம் போட்டு யோசிச்சிருப்பாளோ?
ஹீரோயின் மதமதன்னு வளர்ந்துருக்கா. ரெட்டை ஜடை, ஒத்தை ரோஜா, தாவணி - இதெல்லாம் ஹரியோட ரெகுலர் டேஸ்ட் போலிருக்கு. பரத் துரத்துக்கிட்டு ஓட ஆத்து மணல்லே அவ விழுந்து அவ பாவாடையும், தாவணியும் முழங்காலுக்கு மேலே தூக்குறப்போ.. ச்சீ.. எனக்கே வெட்கமா போயிடுத்து. ஆளு அழகா அம்சமா இருக்காளேன்னு பார்த்தா ஆக்டிங்லே சொதப்பிட்டா. ஹீரோவைப் பத்தி சொல்லணுமா? அதான் படத்தோட டைட்டிலே சொல்றதே? படத்தோட பர்ஸ்ட் சீனுலேர்ந்து கொண்டையை சிலிர்த்துக்கிட்டு ஓடிண்டிருக்கான். மத்தவாளோட அடிவாங்குறதே காமெடின்னு ஆயிப்போச்சி வடிவேலுக்கு. பரவால்லை. அவர் நடிக்க கொஞ்சம் சீன் கொடுத்திருக்கா. நல்லாதான் நடிச்சிருக்கார். ராஜேஷ், யுவஸ்ரீ ஹீரோவோட பேரண்ட்ஸா நடிச்சிருக்கா. படத்தோட பல கேரக்டர்ஸை பல படங்கள்லே ஏற்கனவே பார்த்துண்டதால அடுத்தடுத்து அவா அவா என்ன பேசப்போறா, என்ன சீன் வரப்போவுதுன்னு ஈஸியா கெஸ் பண்ண முடியுது.
பாட்டெல்லாம் படுமோசம். ஜி.வி.பிரகாஷ் இதுக்கு முன்னாடி மியூசிக் போட்ட குசேலனே பரவால்லைன்னு தோணுது. சேவல்னு படத்துக்கு பேரை வெச்சிட்டு ரெண்டே ரெண்டு சண்டை சீனு தான். ஆனா படம் முழுக்க இரத்தம் தெறிக்குறாப்புலே ஒரு ஃபீலிங். என்னன்னே தெரியலை. அக்ரஹாரத்து அம்பிங்க இருவது பேரை மொரடன் மாதிரி இருக்குற ஹீரோ பந்தாடுறான். அம்பிங்களை காமெடி ஃபைட்டுக்கு யூஸ் பண்ணிண்டிருக்கா மாபாவிகள். டோண்டு சார் இந்த சீனை பார்த்திருந்தா மனசு சங்கடப்பட்டிருப்பர். படம் ஃபுல்லா கமர்சியல் ஆட்டு ஆட்டிண்டு க்ளைமேக்ஸ்லே பெரியாரோட மெசேஜை கையில் எடுத்துண்டா, மறுமணம், பெண் விடுதலைன்ட்டு. வெறுத்துப் போயிட்டேன். இந்த சினிமாக்காராளுக்கு நம்ம கல்ச்சரை கிண்டலடிக்குறதே வழக்கமா போச்சி. க்ளைமேக்ஸ் பார்த்த பாவத்தோட தீட்டுக்கழிய வீட்டுக்கு வந்து ரெண்டு சொம்பு ஜலம் எடுத்து தலையில் ஊத்திண்டேன்.
சேவல் - புலிப்பாய்ச்சல்!

27 அக்டோபர், 2008

ஏகன்!

'அட்டகாசம்' படத்துக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்கு அப்புறம் தலைக்கு தீபாவளி களைகட்டியிருக்கிறது. தாடி, லைட்டான தொந்தி, மங்கி கேப் என்று அதகள கெட்டப்பில் அன்புமணிக்கு சவால் விட்டவாறே தம்மோடு ஹாங்காங்கில் அதிரடி ஓபனிங் டென் தவுசண்ட் வாலா. அடுத்தடுத்த காட்சிகளில் திடீரென ஸ்லிம்மாகி, ஸ்மார்ட்டாகி ஸ்டூடண்ட் ஆவது வான வேடிக்கை. நயனைப் பார்த்த முதல் காட்சியிலேயே ‘உன்னைப் பார்த்த பின்பு நான்' என்று ஆடிப்பாடி மகிழ்வதைப் பார்த்தால் காதல் மன்னன் காலத்து ஆட்டம் பாம். நகைச்சுவையில் ஆங்காங்கே சரம் வெடிக்கிறார். தல தல தான். சோகம் என்னவென்றால் 'தல' ரசிகர்களைத் தவிர வேறு யாருமே சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு படத்தின் ரிசல்ட் வந்திருப்பதுதான். ‘மே ஹூ நா' என்ற இந்திப்படத்தின் தழுவல் அல்ல இது. இது சுத்தமான தமிழ் படம்' என்று படம் வருவதற்கு முன்பாக அறிக்கை விட்டார் இயக்குனர் ராஜூ சுந்தரம். பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது. இதுபோல அட்டு படம் எடுக்கும் இயக்குனர்களையெல்லாம் ஆப்கானிஸ்தானுக்கு கடத்தினால் என்ன? எட்டு ரீல் படத்தில் ஆறு பாட்டு, நாலு ஃபைட்டு இருந்தால் படமெடுத்த படக்குழுவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு முன்பாக வெளிவந்திருந்த ‘மே ஹூ நா' சூப்பராக இல்லாவிட்டாலும் சுமாராக இருந்தது. அதை கொத்துப்பரோட்டா போடுகிறோம் என்ற பெயரில் கைமா ஆக்கியிருக்கிறார்கள். ஒரிஜினல் படத்தின் செண்டிமெண்ட், ஆக்‌ஷன், காமெடி சுத்தமாக ஏகனில் மிஸ்ஸிங். யுவன்ஷங்கர் ராஜா ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. சரக்கில் தரம் குறைகிறது. உஷார் மே தேகோ. குழப்படியான ஆரம்பக்கட்ட காட்சிகளில் எடிட்டர் தானும் குழம்பி படம் பார்ப்பவர்களையும் குழப்பித் தள்ளியிருக்கிறார். வில்லன் கொடூரமானவனா காமெடியனா என்பது இயக்குனருக்கும் தெரிந்திருக்காது போலிருக்கிறது. சுமன் பாவம். சுமனின் அல்லக்கையாக வரும் ஸ்ரீமன் ரொம்ப பாவம். படத்தில் ஹீரோயின் தேவைப்படுமே என்று நயன்தாராவின் கால்ஷீட் வாங்கியிருக்கிறார்கள். ராசாத்தி நைட்டி மாடல் மாதிரி வந்துப் போகிறார். நாளுக்கு நாள் நயன்தாராவின் முதுகு சிக்ஸ் பேக் பாடி மாதிரி செம்ம ஷேப்புக்கு மாறிக்கொண்டிருக்கிறது. நாசரை இப்படியா வீணடிக்க வேண்டும். இவ்வளவு பெரிய மூக்கு அவருக்கு இருக்கிறது. இதுபோல மொக்கை கேரக்டர் கொடுப்பவர்கள் மீது மூக்குக்கு மேல் கோபம் வரவேண்டாமா? நல்ல நடிகரான ஜெயராமை கூட கோமாளி ஆக்கியிருக்கிறார்கள். கொடுமை. ஜான் சின்னப்பா ஒரு பெரிய டான். அவருடன் இருந்த ராம்பிரசாத் போலிஸ் அப்ரூவராக மாறிவிடுகிறார். ராம்பிரசாத்தை போலிஸ் கஸ்டடியிலேயே தீர்த்துக்கட்ட ஜான் சின்னப்பா முயற்சிக்கிறார். ராம்பிரசாத் எஸ்கேப். ராம்பிரசாத்தின் பெண் ஊட்டிக் கல்லூரியில் படிக்கிறார். அப்பெண்ணை பார்க்க ராம்பிரசாத் எப்படியும் வருவார். அவரைப் பிடித்துவிடலாம் என்று போலிஸ் கமிஷனர் திட்டம் தீட்டுகிறார். அப்பெண் படிக்கும் கல்லூரிக்கு ஸ்டூடண்டாக சிபிசிஐடி இன்ஸ்பெக்டரும், தன்னுடைய மகனுமான சிவாவை அனுப்புகிறார். ராம்பிரசாத்தை பிடிக்கும் சிவா ஜான் சின்னப்பாவையும் தீர்த்துக் கட்டுகிறார். இடையில் ஒரு அம்மா - தம்பி செண்டிமெண்ட். ப்ரொபஸரை காதலிக்கும் ஸ்டூடண்ட் என்று ஆங்காங்கே மசாலா தூவல். இதுதான் கதை. சில பல கோடிகள் செலவழித்து, ராஜூ சுந்தரத்தை இயக்குனராக்கி தில்லாக இந்த கதையை ஐங்கரன் இண்டர்நேஷனல் படமாக்கியிருக்கிறது. பில்லா ஸ்டைலை அப்படியே கொண்டுவந்து ஸ்டைலான மேக்கிங் கொடுத்திருக்கிறார்கள் என்றாலும் படத்துக்கு அவசியமான கதை, திரைக்கதை, இத்யாதிகளில் சூப்பர் கோட்டை விட்டிருக்கிறார்கள். தலைக்கு மட்டும் ஏனிப்படியெல்லாம் கொடுமை நடக்கிறதோ தெரியவில்லை. ஒரு படம் சுமாராக ஓடினால் அடுத்தடுத்து பத்துப்படம் ஆப்பு அடித்துவிடுகிறது. ஏகன் - சோகன்!

20 அக்டோபர், 2008

சாரு டிகிரி - வேற்றுக்கிரக வாசி!


அன்பில்லாத வாசுகி!

வா சுகி என்று உன்னை அழைக்க ஆசைதான், செருப்பால் அடிப்பாயோ என்று பயந்து 'வா'வுக்கும் 'சு'வுக்கும் இடைவெளி விடாமல் வாசுகி என்றே அழைக்கிறேன். நீ இப்பிரதியை வாசித்துக் கொண்டிருக்கும் வேளையில் என்னை கட்டியணைத்து உதடுகளில் முத்தமழை பொழிய நினைத்திருக்கலாம். முதுகில் கத்தியால் குத்த நினைத்திருக்கலாம். உன்மத்தம் பிடித்து என் தலைமுடியை உலுக்கி தவடையில் அறைய நினைத்திருக்கலாம். நீ தோழியா இல்லை காதலியா என்று பாட்டுப்பாடி பெண்ணிடம் தன் உள்ளத்தினை திறந்தவனை காவல்துறை கைது செய்திருக்கிறது. எக்சிஸ்டெண்சியலிஸ்ட் முனியாண்டியின் பிரதிகளை ஒன்பதாவது நூற்றாண்டு செத்த மூளை கலைத்துப் போட்டதைப் போல என்னுடைய பிரதிகளையும் பதினெட்டாம் நூற்றாண்டின் பழுதடைந்த கிட்னி சீட்டுக்கட்டின் சீட்டுகளைப் போல சிதறவிட்டிருக்கிறது. சரியாக ஒன்பது சீட்டுகள். மீதி எங்கே? நல்லவேளை பூக்கோ அயல்நாட்டில் பிறந்து, வாழ்ந்து, மடிந்துவிட்டார். பூக்களே பூக்களே என்று மரத்தை சுற்றி டூயட் பாடும் தமிழ்பட கதாநாயகன்களை பார்த்து ஏன் தெலுங்குகாரர்கள் சிரிக்கிறார்கள். பூக்கு என்ற வார்த்தைக்கு தெலுங்கில் என்ன பொருள் என்று யாராவது அழகிய இளம் தெலுங்குப் பெண்ணிடம் கேட்டுப்பார்த்தால் நாணுவாளா? சினம் கொள்ளுவாளா? சிணுங்குவாளா?. இவ்வார்த்தைக்கு என்ன பொருளென்று பொதுவெளியில் தமிழில் எழுதினால் என்னை தமிழர்கள் கல்லெடித்து அடிப்பார்களா? பூவால் வருடுவார்களா? நான் ஏன் மனநோயாளியாக படைக்கப்படவில்லை? உலக மகிழ்ச்சியையெல்லாம் ஒரு கோப்பை மதுவில் அடக்கி ஒரே மூச்சில் குடித்து கள்வெறி கிளர்த்தெழ ஆனந்த தாண்டவம் ஆடியிருக்கலாமே? எல்லாம் சரி. எழுத்துக்களை எழுத்துக்களால் எழுத்தாய் எழுத முயற்சித்து எழுத இயலாமல் எழுத்தை பயிற்சித்து எழுத்தை பரிட்சீத்து எழுத்துக்களாய் நானே மாறினாலும் எழுத முடியாமல் தோற்று வெட்கி தலைகுனிந்து எழுதி எழுதி செத்துக்கொண்டிருக்கிறேன். நான் சோம்பேறி. யாராவது எழுத்தாய் மாறி எழுத்துக்களை எழுதுங்கள். வாசிக்க மட்டும் செய்கிறேன்.


* - * - * - * - * - * - * - *


சாருவை நான் பதிவர் சந்திப்புக்கு சாட்டிங் மூலமாக அழைத்திருந்ததால் ஏற்பட்ட சர்ச்சையின் போது சாருவே போன் செய்திருந்தார். 'நான் அழைத்ததில் என்ன தவறென்று' நான் கேட்டிருந்ததை பார்த்து ரொம்ப பாவமாகிவிட்டது என்று சொல்லியிருந்தார். 'அழைப்பு' குறித்த மரபுகள் குறித்தும் போதித்தார். அவர் வாழ்வில் நடந்த சில பல உதாரணங்களை சுட்டியும் காட்டினார். நான் உங்களை எதற்காகவாவது அழைப்பதாக இருந்தால் நான் கடைப்பிடிக்கும் தார்மீக மரபுகளை கடைப்பிடிப்பேன் என்றும் சொல்லியிருந்தார். அதன்படியே கடந்த சனிக்கிழமை நடந்த ஜீரோ டிகிரி ஆங்கில பதிப்பின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு தொலைபேசி அழைத்தார். நிகழ்ச்சிக்கு இருதினம் முன்பாக தொலைபேசி இன்னொரு முறை நினைவுறுத்தவும் செய்தார். ஒரு வாசகனுக்கு எழுத்தாளன் தரும் உயர்ந்தபட்ச கவுரவம் இதுவென்றாலும் அவரை பதிவர் சந்திப்புக்கு அழைத்தபோது நான் செய்த தவறு எதுவென்பதை அவரது செயலால் செருப்பால் அடித்தது மாதிரி சுட்டிக்காட்டியிருக்கிறார். ஏற்கனவே அவரது எழுத்துக்களுக்கு ரசிகன். இப்போது அவருக்கும் தீவிர ரசிகன் ஆகிவிட்டேன், ஆத்திகம் - திராவிடம் மாதிரியான விஷயங்களில் அவரது கருத்துக்கள் பிடிக்கவில்லையென்றாலும் கூட.


ஒரு காலத்தில் டிகிரி என்ற சொல்லைக் கேட்டதுமே டிகிரி காப்பி தான் நினைவுக்கு வரும். அம்மாவழி சின்னப் பாட்டனார் சிறுவயதில், சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த ஒரு அய்யர் மெஸ்ஸில் டிகிரி காப்பி வாங்கித் தருவார். அவரும் அனுபவித்துக் குடிப்பார். தஞ்சையில் பிறக்கவேண்டிய உல்லாசவாசி. தப்பித்தவறி உத்திரமேரூருக்கு அருகில் பிறந்து தொலைத்தார். அவரால் நானும் காஃபி பிரியனானேன். வீட்டில் அனைவருக்கும் தேநீர் பிடித்தாலும், எனக்கு மட்டும் எப்போதும் காஃபி தான். காஃபியை குடிக்கும்போது கசப்பாக உணரவேண்டும். குடித்து முடித்தபின் உதடுகளை நாக்கால் தடவினால் லேசாக தித்திக்க வேண்டும். எனக்குப் பிடித்த காஃபிக்கான இலக்கணம் இது. எனக்காகவென்று அம்மா ஸ்பெஷலாக ஃபில்டர் கூட வாங்கி வைத்திருந்தார். இப்போது இன்ஸ்டண்ட் காஃபிக்கு மாறி சில ஆண்டுகளாகிறது.


எனவே இப்போதெல்லாம் டிகிரி என்ற வார்த்தையைக் கேட்டால் காஃபிக்குப் பதிலாக சாரு நினைவுக்கு வருகிறார். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் சாருவின் ஸீரோ டிகிரியை முதல்முறை வாசித்தபோது மனநிலை சில வாரங்களுக்கு பாதிக்கப்பட்டது. மூளை லட்சம் தடவை கிறுகிறுத்தது. ஒரு கோடி அபின் வில்லைகள் தரக்கூடிய போதையை அப்பிரதி தந்தது. இதன் ஆங்கில மொழியாக்கமும் அதே வாசனையோடு, அதே போதையோடு, அதே கிறுகிறுப்பை அட்சரம் பிசகாமல் தருகிறது. சமீபத்தில் ஒரு நண்பர் ஸீரோ டிகிரியை வாசித்து தலைமுடியை பிய்த்துக் கொண்டு அலைகிறேன் என்று சொன்னார். சாருவை புதியதாக வாசிக்க நினைப்பவர்கள் ராஸலீலாவை முடித்துவிட்டு ஸீரோ டிகிரிக்கு வருவது நலம். மனதளவில் யதார்த்த அதிர்ச்சி மதிப்பீடுகளுக்கு தயாராக முடியும். அதிர்ச்சி = ஷாக். புத்தகம் ஷாக்கடிக்குமா என்று கேட்டால் ஸீரோ டிகிரி ஷாக்கடிக்கும் என்றே சொல்லுவேன். அப்போது ராஸலீலா? சில சமயம் தலையை தடவிக் கொடுக்கும். சில சமயம் தலையை நீருக்கடியில் அழுத்தி மூச்சு திணறவைக்கும்.


ஸீரோ டிகிரியை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கும் பிளாஃப்ட் பப்ளிகேஷன்ஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அது. ஸீரோவும் சூன்யம் தான். சூன்யத்தின் நிறம் கருப்பு. அதனாலோ என்னவோ நிகழ்ச்சியின் தீமும் கருப்பு. மேடையில் 'நெப்போலியன்' பாட்டிலில் செடியோடு மலர்ந்திருந்த ரோஜாவின் நிறமும் கருப்பு. மேடையின் பேக்டிராப் கருப்பு. சாரு அணிந்திருந்த சட்டையும் கருப்பு. ஐம்பத்தி நான்கு வயதான கமலஹாசனின் இளமைத்தோற்றத்துக்கு சிலிர்க்கிறோம். அவரை விட மூன்று வயது அதிகமான சாரு கமலை விட இளமையாக தெரிகிறார். இன்னும் ஏன் இவரை சினிமாக்காரர்கள் விட்டுவைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அஞ்சாதே படத்தில் பாண்டியராஜன் நடித்த பாத்திரத்தைப் போன்ற பாத்திரங்களில் சாரு நடித்தால் அள்ளிக்கொண்டுப் போகும்.
புத்தகத்தின் சில அத்தியாயங்களை தமிழில் எழுதிய சாருவும், மலையாளத்தில் எழுதியவரும், ஆங்கிலத்தில் எழுதியவர்களும் வாசித்துக் காட்டினார்கள். மொழிமாற்றமாக (Translation) இல்லாமல் மொழியாக்கமாக (Transcreation) செய்யப்பட்டிருப்பதாக விழாவுக்கு வந்திருந்த மொழிப்பெயர்ப்பாளர்கள் சிலர் குறிப்பிட்டார்கள். கலாஸ்ரீ, நிலாஸ்ரீ அத்தியாயத்தை வாசிக்கும்போதெல்லாம் சாரு சரியான பிக்கப்பில் இல்லை. சாருவின் கம்பீரத் தோற்றத்துக்கு ஏற்ற சிம்மக்குரல் அவருக்கு இல்லையோ என்ற தோற்றம் எழுந்தது. மனிதர் மென்மையாக, மெதுவாகப் வாசித்தார். சாரு ரசிகர்கள் பட்டா போட்டு அடிக்கடி வாசிக்கும் அந்த 'எலக்ட்ரிக் சுடுகாடு' அத்தியாயம் வந்தபோது குரலை உயர்த்தி ஏற்ற இறக்கத்தோடு தமிழின் புனிதவார்த்தைகளை சாரு உச்சஸ்தாயியில் வாசித்தபோது அப்ளாஸ் அள்ளிக்கொண்டு போனது. அந்த அத்தியாயத்தை மலையாளத்தில் மொழியாக்கம் செய்தது ஆச்சரியமல்ல. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய ரொம்பவும் மெனக்கெட வேண்டியிருந்தது என்று குறிப்பிட்டார்கள். Pussy, Bastard, pitch, fuck, மானே, தேனே போட்டு எப்படியோ அசல் பிரதியில் இருந்த அம்சங்களை கொண்டுவந்துவிட்டிருக்கிறார்கள். அந்த அத்தியாயத்துக்கு மட்டும் மூன்று பாட்டில் ரம் செலவாகியிருக்கும் என்று தெரிகிறது. அதுபோலவே 1930களின் பிராமண குடும்பத்து தமிழை மலையாளம் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்வதற்குள் டவுசர் கிழிந்திருக்கிறது.


ஸீரோ டிகிரியின் ஆங்கிலப் பதிப்பை மட்டும் லத்தின் அமெரிக்க எழுத்தாளர் கேத் ஆக்கருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார். தமிழ் பதிப்பை அவரது 'அம்முவுக்கு' சமர்ப்பித்திருந்தார் என்பதாக நினைவு. கேத் ஆக்கர் தன் உடலையே பரிசோதனையாக்கி, விளைவுகளை எழுத்தாக்கியவர் என்று சாரு குறிப்பிட்டார். ராஸலீலா படித்தவர்கள் சாருவும் அத்தகைய எழுத்தாளர் தான் என்பதை உணர முடியும். ஸீரோ டிகிரி ஆங்கிலப் பிரதியை வாசித்த அமெரிக்கர்கள் சிலர் சாரு நிவேதிதா ஒரு பெண் எழுத்தாளர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களாம். இப்பிரதி மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளில் தமிழில் இருந்து மலையாளத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்கள் நூற்றி சில்லறை தான் இருந்ததாம். ஸீரோ டிகிரி மலையாளத்தில் வந்தபின் தீவிர இலக்கிய வெறி கொண்ட மலையாளிகள் தமிழிலும் தீவிர இலக்கியம் குறித்த சில முயற்சிகள் நடந்து வருவதாக அறிந்தார்களாம். ஸீரோ டிகிரிக்கு பின்னர் தமிழில் இருந்து மலையாளத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்களின் எண்ணிக்கை கடந்த ஒன்றரை நூற்றாண்டு கால மொழிமாற்ற நூல்களை விட அதிகம் என்று மலையாள எழுத்தாளர் சக்காரியா குறிப்பிட்டார். தமிழிலக்கியத்தில் சாருவுக்கான இடம் எதுவென்பதை சக்காரியாவின் அந்த கருத்து திடமாக வெளிப்படுத்தியது.

18 அக்டோபர், 2008

ஹாய்.. ஹாய்.. ஹாய்..

சில நாட்களாக பதிவெழுத முடியவில்லை என்றில்லை, பதிவெழுத பிடிக்கவில்லை. இதுவரை எழுதிய நானூற்றி சொச்சம் பதிவுகளை அபவுட் டர்ன் எடுத்து திரும்பிப் பார்த்தபின், அங்கு கொட்டிய குப்பைகளை வேறு வேறு தினுசில் தான் புதியதாக கொட்டப்போகிறேன் என்று தோன்றியது. புதிய வார்த்தைகளோடு, புதிய நடையில் எழுத எல்லோரையும் போல ஆசையாக இருப்பதால் கொஞ்சம் விரல்களுக்கு ஓய்வு கொடுக்கலாம் என்று எண்ணம். சங்க காலத்திலிருந்தே வாசி, வாசி என்று கூறி சில ஆபாச வார்த்தைகளில் தொடர்ந்து திட்டி வருகிறார் பாலா அண்ணா.

கடந்த ஒரு ஆண்டாக படுக்கையறை லைப்ரரியில் சேர்ந்துவிட்ட புத்தகங்களை ஒட்டுமொத்தமாக வாசிக்க முடியாவிட்டாலும், கொஞ்சம் கொஞ்சமாகவாவது வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்று வருகிறது. அதுவுமில்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சிக்கொள்ளத்தக்க நிறைய பிரமோஷன்கள். அடுத்த ஆண்டு மே மாதம் இறுதியிலோ, அல்லது ஜூன் ஆரம்பத்திலோ கிடைக்கப் போகும் பெரிய பிரமோஷனுக்காக தவம் இருந்துகொண்டிருக்கிறேன்.

இந்த ஒருவாரமாக தொடர்ச்சியாக பதிவெழுதாததால் என்னென்ன மாற்றங்கள் விளைந்திருக்கிறது என்று பார்த்தோமானால்...

- உலகம் வழக்கம் போலவே சூரியனை சுற்றி வருகிறது. ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

- ரேஷன் கடையில் அரிசி ஒரு ரூபாய்க்கு தான் இன்னமும் கிடைக்கிறது.

- பங்குச்சந்தை தொடர்ந்து வீழ்ந்து வருகிறது.

- ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருக்கும் கடிகாரம் சரியான நேரத்தையே காட்டுகிறது.

- ராஜபக்‌ஷே திருந்திவிடவில்லை.

- அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

- பருவமழை தீவிரமடைந்திருக்கிறது.

- தமிழ்மணத்தில் 'பெருசு' பதிவரால் வழக்கம்போல உயர்சாதியுணர்வு ஊட்டி வளர்க்கப்படுகிறது.

- நந்தனம் சிக்னலில் டிராபிக் ஜாம் குறைந்தபாடில்லை.

- ரங்கநாதன் தெருவில் வழக்கத்தை விட அதிகமாக தீபாவளிக்கூட்டம்.

எல்லாமே வழக்கப்படிதான் நடந்து வருகிறது. 'நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாம்' ரேஞ்சுக்கு எதுவும் நடந்துவிடவில்லை என்பதால் நான் எழுதாவிட்டால் யாருக்கும் நஷ்டமுமில்லை, லாபமுமில்லை. பிரபுசங்கர் என்ற நம்பர் எஸ்.எம்.எஸ். மூலமாக ஏன் எழுதவில்லை என்று கேட்டார். பெங்களூரிலிருந்து ஒரு வாசகியும் (நிஜமாத்தான்) தொடர்ந்து எழுதச்சொல்லி வற்புறுத்தினார். அவர்களுக்காக மட்டும் இந்தப் பதிவு...

பின்னூட்டத்தை வெளியிட முடியாத அளவுக்கு சோம்பேறித்தனமாக இருப்பதால் நண்பர் ஒருவரிடம் பாஸ்வேர்டு கொடுத்து பின்னூட்டங்களை வெளியிட சொல்லப்போகிறேன். எனவே இங்கு பின்னூட்டம் போடுபவர்கள் லக்கிலுக் பின்னூட்டத்தை வெளியிடாமல் ஆணவமாக செயல்படுகிறார் என்று தனிப்பதிவு போட்டு திட்டிக்கொள்ள முழு சுதந்திரத்தையும் மனமுவந்து அளிக்கிறேன்.


* - * - * - * - * - * - * - * - * - *

அக்டோபர் 16, நள்ளிரவு 11:59 மணிக்கு ஒரு அனானி நண்பர் மின்னஞ்சலில் அனுப்பிய கேள்வி :

தோழர்! அவ்வப்போது 'தானே கேள்வி தானே பதில்' எழுதி வருகிறீர்கள். மற்றவர்களை கேள்வி கேட்க சொல்லி வாரம் ஒருமுறை பதில் சொல்லலாமே?

பதில் : தங்கள் ஆலோசனைக்கு நன்றி தோழர். வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் என்னிடம் கேள்வி கேட்பதைத் தவிர்த்து நிறைய உருப்படியான வேலைகள் இருக்குமென நம்புகிறேன். நீங்கள் கேட்டதைப் போல ஒரு கேள்வி பதில் பகுதியை அறிவித்துவிட்டு யாரும் கேள்வி கேட்காமல் நானே பதினைந்து, இருபது ஐடி கிரியேட் செய்து, அதோடு அனானியாகவும் நானே என்னை கேள்வி கேட்டு நானே பதில் சொல்ல நான் என்ன செஃல்ப் எடுக்காத வயாகரா கேஸா?

வீரத்தோடும், தீரத்தோடும் நாமே நம்மை கேள்வி கேட்டு, நாமே பதிலையும் சொல்லிவிடுவோம் தோழர்...

* - * - * - * - * - * - * - * - * - *

ஆர்னிகா நாசர் ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளர் என்று எங்கோ எழுதியிருந்ததை படித்தேன். ஆர்னிகா நாசர் ஒரு நல்ல Pulp Fiction எழுத்தாளர் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். தினமலர் டி.வி.ஆர் நினைவுப்போட்டியில் பரிசுபெற்ற அவரது முதல் கதையில் இருந்து, தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது விட்டு விட்டு அவரை தொடர்ந்து வாசித்து வருகிறேன். சில விஞ்ஞான சிறுகதைகள் மற்றும் நாவல்கள் கூட முயற்சித்திருக்கிறார். புதிய புதிய வார்த்தைகளை (உதா : கையளித்து) போட்டு சுவாரஸ்யமாக எழுதுவார். ஆனால் அவர் மேஜிக்கல் ரியலிஸம் எழுதினார், அதனால் அவர் போஸ்ட் மார்டனிஸ்ட் என்று சொல்லியிருந்தது மாதிரி அபத்தமான ஸ்டேட்மெண்ட் எதுவுமே இல்லை. போஸ்ட் மார்டனிஸமும் நூற்றுச் சொச்சம் இஸங்களில் ஒரு இஸம் தான். இஸம் எல்லாமே போஸ்ட் மார்டனிஸம் என்று யாராவது புரிந்துகொண்டிருந்தால் அவர்கள் கன்பூசியஸத்தையும் போஸ்ட் மார்டனிஸம் லிஸ்டில் சேர்த்துத் தொலைத்துக் கொள்ளலாம்.

போஸ்ட் மார்டனிஸம் என்பது ஒரு சூழல். இதை புரிந்துகொண்டால் யாராவது ஒரு கோடி ரூபாய் பரிசோ, புரிந்துகொள்ளாவிட்டால் மரணத்தண்டனையோ கிடைக்கப்போவதில்லை. ரொம்ப புரிந்துகொண்டது மாதிரி எக்ஸ்பிரஷனிஸம், இம்ப்ரெஸனிஸம் கந்தாயங்களை விக்கிபீடியாவில் படித்து, தானே சிந்தித்தது மாதிரி அதையெல்லாம் கொடூரமாக தமிழாக்கம் செய்து, "இதெல்லாம் போஸ்ட் மார்டனிஸம்" என்று எழுதி தன்னை அறிவுஜீவி என்று காட்டிக்கொள்ள யாராவது முயற்சித்தால் அவர்களை விட பெரிய காமெடியன்கள் தமிழ் வலையுலகில் வேறு யாரும் இருந்துவிட முடியாது. எம்.ஜி.சுரேஷ் எழுதிய பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள் தொடர் வரிசை புத்தகங்களை கூட இன்னும் வாசிக்காததால் இதைப்பற்றியெல்லாம் சிந்திக்கக்கூட எனக்கு
அருகதையில்லை என்று நினைக்கிறேன்.

போஸ்ட் மார்டனிஸம் குறித்து வலையில் வளர்மதி விளக்கமாக எழுதியிருக்கிறார். ஓரிருமுறை அப்பதிவுகளை வாசித்தால் புரியும். பைத்தியக்காரனும் கொஞ்சம் எளிமைப்படுத்தி உதாரணங்களோடு எழுதியிருக்கிறார். பைத்தியக்காரன் பதிவுகளை புரியும்படி எழுதினாலும், பின்னூட்டங்களை மட்டும் டவுசர் கிழிக்கும் வகையில் எழுதுவார். மண்ணுக்கேற்ற மார்க்ஸியம் என்பது மாதிரி சுகுணாதிவாகரும், ஜ்யோவ்ராம் சுந்தரும் மண்வாசனையோடும், தண்ணி வாசனையோடும் அவ்வப்போது எழுதிவருகிறார்கள். ஜமாலன், நாகார்ஜூனன் போன்றவர்கள் எழுதுவதை தமிழ் அகராதி வைத்துக்கொண்டு வாசிக்கலாம். என்னைப் பொறுத்தவரை செந்தழல் ரவி தான் சூப்பர் டூப்பர் போஸ்ட் மார்டனிஸ்ட். கொடுமை என்னவென்றால் அவர் ஒரு போஸ்ட் மார்டனிஸ்ட் என்பது அவருக்கே தெரியாது.

14 அக்டோபர், 2008

உண்மையாரின் புனிதப்போர்!

கன்னிராசி படத்தில் ஒரு காட்சி.

ஜனகராஜ் ஒரு பாடகர். தூர்தர்ஷனில் மிக அருமையாக ஒரு நிகழ்ச்சியில் பாடியிருப்பார்.

மறுநாள் தெருவில் நடந்து செல்லும்போது ஒருவன் உடைந்துப் போன அவனது டிவியை சைக்கிளில் வைத்து எடுத்து வருவான். அவனிடம் ஜனகராஜ் கேட்பார்.

“என்னய்யா ஆச்சி? டிவி உடைஞ்சிப் போயிருக்கு!”

“நேத்து எவனோ ஒருத்தன் டிவியிலே பாடியிருக்கான். அதைப் பார்த்து டென்ஷன் ஆயி என் பொண்டாட்டி டிவியை போட்டு உடைச்சிட்டா. பாட்டு பாடுனவன் மட்டும் நேர்லே கிடைச்சான்னா...” என்று சைக்கிள்காரர் பல்லை நறநறத்துக் கொண்டே போவார்.

* - * - * - * - * - * - * - * - * -இதுவரை எப்படியெல்லாமோ டவுசர் கிழிந்து தாவூ தீர்ந்திருக்கிறது.. ஆனால் இந்த லெவலுக்கு ஆனதில்லை :-(

உலகத் திரைப்படங்கள் குறித்து ஐம்பது, அறுபது பக்கங்களுக்கு மிகாமல் விமர்சனம் எழுதுபவர், பல திரையுலக ஆட்களோடு நட்பு கொண்டவர், நீண்ட ஆண்டுகளாக கலைத்துறையோடு தொடர்புடையவர்.. இப்படிப்பட்டவர் எடுத்திருக்கும் படம் என்பதால் அமர்க்களமாக இருக்கும் என்று நினைத்தேன், நினைப்பில் மண்ணை வாரி போட்டுவிட்டார் உண்மையார்.

ரொம்ப சிக்கனமாக எடுத்திருந்ததால் கொஞ்சம் சுமாராக வந்திருக்கும் என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் கான்செப்டே இல்லாமல் பண்ணிரண்டு நிமிடமும் வெறும் வாய்கள் மட்டும் பேசிக்கொண்டேயிருக்கும் கொடுமையை என்னவென்று சொல்ல? க்ளைமேக்ஸை நச்சென்று முடிக்க உண்மையார் நினைத்திருக்கலாம், ஆனால் பார்ப்பவர்களுக்கு 'நச்சு'வாக தான் முடிகிறது.

ஒளிப்பதிவை சுமார் என்று கூட சொல்லமுடியாத வகையில் மொக்கையாக வந்திருக்கிறது. இருபது வருடங்களுக்கு முன்பு என் சித்திக்கு கல்யாணம் நடந்தபோதே இதைவிட சூப்பரான ஒளிப்பதிவை அந்த காலத்து வீடியோ கேமிராமேன் எடுத்திருந்தார். வாய்களை மட்டுமே காட்டுவது ஒரு நவீன யுக்தி என்று உண்மையாருக்கு யாரோ தவறாக சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது. சில வாய்களை குளோசப்பில் பார்க்க ரொம்ப கண்ணறாவியாக இருக்கிறது.

கொக்கோ கோலா, பெப்ஸி, இளநீர் என்று ஒவ்வொரு குளிர்பானத்தையும் ஒரு குளோசப் அடித்து காட்டும்போது பெரியதாக ஏதோ இதைவைத்து கும்மியடிக்கப் போகிறார் என்று நினைத்தால் க்ளைமேக்ஸில் ஆஸிட்டை காட்டுவதற்கான முன்னோட்ட காட்சிகளாம். என்ன கொடுமை சார் இது?

மொக்கை கான்செப்ட், மோசமான ஒளிப்பதிவு, உணர்ச்சியே இல்லாத ஒலிப்பதிவு, நாடகத்தனமான நடிகர்கள் என்று எல்லாவற்றையும் கூட மன்னித்துவிடலாம், முழம் முழமாக உண்மையார் எழுதிய வசனங்களை மட்டும் மன்னிக்கவே முடியாது. பண்ணிரண்டு நிமிடமும் கொடூரமாக நாலு பேர் பேசிக்கொண்டேயிருப்பதை குறும்படம் என்று சொன்னால் குறும்படங்களை எல்லாம் என்னவென்று சொல்வது? :-(

க்ளைமேக்ஸில் பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தவரைப் பார்த்து இயக்குனர் உண்மையாரின் குரல் சொல்கிறது, “மவனே, உனக்கு ஆசிட்டு தாண்டா!”. நியாயமாக பார்க்கப் போனால் இந்த குறும்படத்தை எடுத்த இயக்குனர் மீது தான் பார்வையாளர்கள் ஆசிட் வீச்சு நடத்த வேண்டும்.

குறும்படத்தின் தலைப்பை ‘புனிதப்போர்' என்று வைத்து பெண்களுக்கு எதிரான மனோபாவம் கொண்ட கதாபாத்திரங்களை சித்தரித்திருப்பதின் மூலம் உண்மையாரின் முகமூடி கிழிந்து, உண்மையான அவரது இந்துத்துவா கோரமுகம் பல்லிளிக்கிறது. எது எதற்கோ நுண்ணரசியலை கண்டறிந்து கண்டிப்பவர்கள் இன்னமும் உண்மையாரின் சிறுபான்மையினருக்கு எதிரான நுண்ணரசியலை கண்டிக்காதது வெட்கக்கேடு மட்டுமல்ல, வேதனையானதும் கூட.

* - * - * - * - * - * - * - * - * -

நல்லவேளை, உண்மையாரின் புனிதப்போரை இன்றுதான் அவரது வலையில் பார்த்தேன். டிவியில் பார்த்திருந்தால் கன்னிராசி கதை தான் ஆகியிருக்கும், என் வீட்டு டிவி தப்பித்தது :-)