27 பிப்ரவரி, 2008

டோண்டுல்கர்

ஒரு காலத்தில் நான் கருத்துக்களம் ஒன்றில் களமாடிக் கொண்டிருந்தபோது அருண் என்ற நண்பர் ஒரு திரி இட்டிருந்தார். இரட்டைத் தம்ளர் முறை பற்றி சாடி வந்திருந்த பதிவு அது. அதை எழுதியவர் டோண்டு ராகவன் என்று அருண் சொல்லியிருந்தார். அத்திரியில் இருந்த கருத்துக்கள் குறித்த எனது மாறுபாடுகளை மிகக்காரமான மொழியில் எழுதியிருந்தேன். டோண்டு ராகவன் என்ற பெயரை கண்டதுமே ஒரு முப்பது வயது அம்பி என்ற எண்ணம் தான் அப்போது இருந்தது.

அருண் ரொம்ப நாட்களாக என்னை வலைப்பூ ஒன்று தொடங்கச் சொல்லி அப்போது வற்புறுத்தி வந்தார். எனக்கு தொழில்நுட்ப அறிவு இல்லையென்று சொல்லி தள்ளிப் பொட்டு வந்தேன். ஒரு கட்டத்தில் அருணின் டார்ச்சர் தாங்காமல் ஒரு பிளாக்கர் அக்கவுண்ட் தொடங்கிவிட்டேன். தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைப்பதற்கு டெம்ப்ளேட்டில் செய்யவேண்டிய வேலைகளை எல்லாம் அருண் தான் சொல்லிக் கொடுத்தார். ஆனால் பிளாக்கர் அக்கவுண்டை வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. நிறைய பதிவுகளில் பின்னூட்டங்கள் இருந்ததை கண்டேன். அதுபோல எங்காவது பின்னூட்டம் போடவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அருண் டோண்டு சாரின் தீவிர ரசிகர் என்பதால் டோண்டுவின் பதிவை எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.

எனவே நான் பதிவு எழுதத்தொடங்கி பிள்ளையார் சுழியாக டோண்டு சார் அவர்களின் பதிவில் துரதிருஷ்டவசமாக என் முதல் பின்னூட்டம் ஒன்றினை ஆர்வக்கோளாறில் பதிந்தேன். அது என்ன கருமம் என்று எனக்கு இப்போது நினைவில்லை. பின்னூட்டம் ரிலீஸ் ஆனதுமே Luckyluke என்ற பெயரையும், அவதாரையும் கண்ட எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. உடனே என் வலையில் ஒரு அறிமுகப்பதிவு ஒன்றினையும் சும்மா பதிந்து வைத்தேன். கமெண்டு மாடரேஷன் மாதிரியான சங்கதிகள் அப்போது எனக்கு தெரியாது. வலையை சும்மா தொடங்கி விட்டோம், எதுவும் எழுதவெல்லாம் வேண்டாம். தேவைப்பட்டால் ஆங்காங்கே (குறிப்பாக டோண்டு பதிவில்) பின்னூட்டம் மட்டும் போடலாம் என்பதே என்னுடைய அப்போதைய தீர்மானமாக இருந்தது.

மறுநாள் காலை சும்மா டைம் பாஸுக்கு என் வலைப்பூவை திறந்தவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. என்னை அன்பாக ‘டோண்டுவுக்கு பின்னூட்டம் போடவேண்டாம்' என்று கூறி ஒரு பின்னூட்டமும், அதற்கு கீழே பைந்தமிழில் நான்கைந்து பின்னூட்டங்களும் போடப்பட்டிருந்தது. “எவண்டா அது?” என்று பொங்கியெழுந்து என்னை திட்டி பின்னூட்டம் போட்டவர்களை வகுந்தெடுத்து சில பதிவுகள் போட்டேன். அப்படி போடத்தொடங்கிய பதிவுகள் இன்று போயும், போயும் பெயரிலியிடம் எல்லாம் போய் சண்டை போடும் லெவலுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. எனவே நான் பதிவுலகுக்கு வந்ததற்கு டோண்டுவும், போலி டோண்டுவும் சமபங்கு புண்ணியம் கட்டிக் கொள்கிறார்கள்.

ஆரம்பத்தில் டோண்டு சாரை நக்கல் அடித்து ஏதாவது பதிவு போட எண்ணினால் அவருக்கு தொலைபேசி அனுமதி கேட்பேன். “அதனால என்ன கண்ணா? பதிவு தானே போட்டுக்கோ!” என்பார். தொடர்ந்து இரண்டு மூன்று முறை அதுபோல கேட்டபின்னர், “இதுக்கெல்லாம் எதுக்கு அனுமதி? என்னை பத்தி உன் மனசுலே என்ன நினைச்சுருக்கியோ அதை எழுதப்போறே? வேணாம்னு சொன்னாலும் பதிவிலே இல்லாட்டியும், மனசுலே இருக்கும் இல்லியா?” என்று ஒருமுறை கேட்டார். அதன் பின்னர் அவரை பற்றி நல்லவிதமாக எழுதவும் சரி, நக்கலடிக்கவும் சரி அனுமதி கேட்பதில்லை.

அதர் ஆப்ஷன் கமெண்டு பற்றியெல்லாம் எனக்கு அவ்வளவாக அறிவில்லாத காலத்தில் யாராவது குறும்பு டீம் நண்பர் யார் பெயரிலாவது ஏதாவது ஏடாகூட கமெண்டு போட்டுவிடுவார். அந்த கமெண்டு டோண்டு சாருக்கு சம்பந்தமில்லாததாக இருந்தாலும் கூட போன் செய்து அது ஒரு போலி கமெண்டு, நீக்கிவிடு என்பார். அப்போதெல்லாம் டோண்டு சாருக்கு அதர்-ஆப்ஷன் கமெண்டுகள் மீது அப்படி ஒரு கொலைவெறி!

அவருக்கு பிடித்தமாதிரி அல்லது அவர் ரசிக்கும்வகையில் யார் பதிவெழுதி இருந்தாலும் உடனடியாக ஆஜராகி ஒரு பின்னூட்டம் போட்டுவிடுவது அவர் வாடிக்கை. அதுபோலவே அவருக்கு பிடிக்காத பதிவெழுதுபவர்களுக்கு அவரது பின்னூட்டம் கேரண்டி. அவர் தொடர்பிலிருக்கும் பதிவராக இருந்தால் உடனடியாக தொலைபேசி பாராட்டு தெரிவிப்பார்.

ரவி, நான், கிழுமாத்தூர், வரவனை, பொட்டீக்கடை உள்ளிட்ட கொலைவெறிக்குழு ஒன்று வெயிட்டாக அப்போது ஃபார்ம் ஆகி இருந்தது. எந்த பதிவாக இருந்தாலும் மொத்தமாக கும்மி நூறு, நூற்றி ஐம்பது பின்னூட்டங்களாவது போட்டுவிடுவது எங்கள் வாடிக்கை. துரதிருஷ்டவசமாக டோண்டு சாரின் பதிவில் அதர்-அனானி ஆப்ஷன்களை டிஸேபிள் செய்திருந்ததால் அவரது பதிவுகளில் எங்களால் கும்மி அடிக்க முடியவில்லை. ஒரு வலைப்பதிவர் சந்திப்பில் நேரில் சந்தித்து அதர்-அனானிகளுக்கு அவரது பதிவில் இடமளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். காமராஜர் பாணியில் ”ஆகட்டும், பார்க்கலாம்!” என்றவர் மறுநாளே அதர்-அனானி ஆப்ஷனை திறந்துவைத்து இன்ப அதிர்ச்சி அளித்தார்.

தனிமனித ஆளுமை மேம்பாடு (பர்சனாலிட்டி டெவலப்மெண்ட்) குறித்து அவரது அனுபவங்கள் வாயிலாக மிக அற்புதமாக எழுதக்கூடிய எழுத்தாளர் அவர். துக்ளக், அரசியல், கேள்வி-பதில் என்று மொக்கை போடாமல் அவரது அனுபவங்களை பிரதானமாக அவரது வலையில் பதிந்தால் எதிர்காலத்தில் வலையுலக வரலாற்றில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பெயர் அவருக்கு இருக்கும். அவரது முரட்டு வைத்தியம் தொடர்களின் தீவிர ரசிகன் நான். குறிப்பாக IDPLல் பணிபுரியும்போது அவர் சைக்கிளில் அலுவலகத்துக்கு சென்றது குறித்த பதிவு நான் அடிக்கடி வாசிக்கும் பதிவுகளில் ஒன்று.

முரளிமனோகராக அவரை எல்லோரோடும் சேர்ந்து கும்மியப்பிறகு ஏனோ அவரிடம் தொலைபேசவும், நேரில் பார்க்கவும் எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. ஆனால் அவரோ அதுகுறித்த எந்த கோபமுமின்றி “ஹல்லோ.. லக்கிலூக்!” என்று பேச ஆரம்பித்தார். அது தான் டோண்டு சார். காண்டு கஜேந்திரன் தொடர்பதிவுகளை நான் எழுதித்தள்ளுவதை யார் வாசிக்கிறார்களோ இல்லையோ, டோண்டு சார் வாசித்து முதலில் பாராட்டி விடுகிறார். அவரது தலையை டெண்டுல்கர் உடலோடு ஒட்டிப் போட்ட “டோண்டுல்கர்” கிராபிக்ஸ் படத்தை நிரம்பவும் ரசித்தார். பதிவுலக மோதல்களையெல்லாம் ஒருபுறம் தள்ளிவைத்து தன்னை எதிர்த்து எழுதுபவர்களிடமும் நல்ல முறையில் நட்பு பாராட்டுவார். பதிவுலகை தவிர்த்து தனிப்பட்ட முறையிலும் என்னோடு நட்பாக இருப்பவர்களில் டோண்டு சாரும் ஒருவர்.

அவரது மத-சாத வெறியை தவிர்த்துப் பார்த்தோமானால் (அது கூட நேரில் பழகும்போது தெரியாது) தனிப்பட்ட முறையில் எல்லோரும் நேசிக்கக்கூடிய, நட்பு பாராட்டக்கூடிய ஒரு நல்ல மனிதர் டோண்டு ராகவன்!!

6 பிப்ரவரி, 2008

ஜெயமோகன் வணக்கம்!

முன்பெல்லாம் சுஜாதா, பாலகுமாரன், ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் என்று தான் வாசித்துக் கொண்டிருந்தேன். சுஜாதாவை இந்த வரிசையில் சேர்த்ததற்கு யாராவது என்னை கும்மகூடத் தோன்றும். பரவாயில்லை, எழுதும்போது மட்டுமாவது உண்மையை சொல்ல வேண்டியதிருக்கிறது.

இதுபோல ஒழுங்காக இருந்த என்னை நண்பர் ஒருவர் சில காலம் முன்பு கெடுத்தார். புதுமைப்பித்தனின் சிறுகதைகளை கொடுத்து படித்துப் பார் என்று சொல்ல, படித்து இலக்கிய தாகம் ஏற்பட்டு, சோடா குடித்தும் தாகம் அடங்காத நிலையில் அதுவரை நான் அறிந்திராத ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களையெல்லாம் அவ்வப்போது வாசிக்க ஆரம்பித்தேன். என்னுடைய குடும்பச்சூழல் குமுதம், விகடன், பாக்கெட் நாவல் என்று வெகுஜன வாசிப்புக்காகவே கட்டமைக்கப்பட்டு இருந்ததால் இலக்கிய தாக விபத்து எனக்கு கொஞ்சம் தாமதமாகவே ஏற்பட்டது.

என்னை ஒரு தீவிர வாசிப்பாளனாக, இலக்கிய ஆர்வலனாக காட்டிக் கொள்ள வேண்டிய எந்த அவசியமும் இல்லாததால் இப்பதிவு சிறுபிள்ளைத்தனமாக, அரைவேக்காட்டுத்தனமாகவும் புரிந்துக்கொள்ளப் படலாம். அது உண்மையாகவும் இருக்கலாம்.

அப்போதெல்லாம் சிறுபத்திரிகை, தீவிர இலக்கியம் பேசுபவர்களெல்லாம் குடிகாரர்களாகவும், மனநிலை பிறழ்ந்தவர்களாகவுமே அந்துமணியின் பா.கே.ப புண்ணியத்தில் அறிந்திருந்தேன் என்பதையும் இவ்விடத்தில் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. நான்கு சிறுபத்திரியாளர்கள் சந்தித்தால் குடித்துவிட்டு ஐரோப்பிய, ஆப்பிரிக்க இலக்கியம் பேசி ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வார்கள் என்ற எண்ணமே எனக்கு மேலோங்கியிருந்தது.

இலக்கியதாக விபத்துக்கு பின்னர் ஓரளவுக்கு அந்த எண்ணங்கள் குறைபட ஆரம்பித்தது. கலகக் குரல்களின் பின்னர் இருக்கும் நியாயமும், தீவிரமும் கொஞ்சம் கொஞ்சமாக புரிபட ஆரம்பித்தது. ஆயினும் அவ்வப்போது நேரும் குட்டிரேவதி - எஸ்.ரா பிரச்சினை, சாருநிவேதிதாவுக்கு பல்லு உடைந்தது போன்றவற்றை வாசிக்கும்போது (கொஞ்சம் கேலியாகவே) சிரித்துக் கொள்வேன்.

சிறுபத்திரிகையில் எழுதுபவர்கள், தீவிர இலக்கியவாதிகளுக்கு ஒருவேளை வெகுஜன பத்திரிகைகளில் இடஒதுக்கீடு இல்லையோ.. இல்லை இவர்கள் ‘சீச்சி.. இந்தப் பழம் புளிக்கும்' ரேஞ்சில் வெகுஜன பத்திரிகைகளில் எழுதுவதில்லையோ என்ற எண்ணம் கூட இருந்தது. கடந்த ஐந்தாண்டுகளாக ஓரளவுக்கு வெகுஜனபத்திரிகைகளில் இவர்களது எழுத்தும் வர ஆரம்பித்திருக்கிறது. பல லட்சம் வாசகர்களின் டவுசரும் கிழிய ஆரம்பித்திருக்கிறது என்பது தமிழ் இலக்கிய உலகில் நிகழ்ந்திருக்கும் ஒரு மாபெரும் புரட்சியாக என்னால் எடுத்துக் கொள்ள முடிகிறது.

ஓக்கே, கம்மிங் டூ த பாயிண்ட்...

‘கலைஞர் ஒரு நவீன இலக்கியவாதி இல்லை' என்றொரு தீவிர இலக்கிய படைப்பாளி சொன்னதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்னால் வாசித்தேன். அப்போது தான் எனக்கு ஜெயமோகன் என்ற பெயரே தெரிய வந்தது. க.நா.சு முதல் சுந்தரராமசாமி வரை ஐம்பதாண்டுகாலமாக உருவாக்கப்பட்டு வந்த எல்லா இலக்கிய மதிப்பீடுகளும் என்னையும், பல லட்சம் தமிழர்களையும் இன்னமும் கூட சேரவே இல்லை என்பது கூட ஜெயமோகன் பெயரை நான் கொஞ்சம் தாமதமாக அறிந்துகொள்ள காரணமாக இருந்திருக்கலாம்.

சுஜாதா படைப்பதே இலக்கியம் என்று நம்பிக்கொண்டிருந்த என்னைப் போன்றவர்களுக்கு அந்த சுஜாதாவே ஒப்புக்கொண்ட இலக்கியவாதியான கலைஞரை, ஜெயமோகன் என்பவர் 'அவர் இலக்கியவாதியே இல்லை, நவீன இலக்கியத்தில் அவருக்கு இடமில்லை' என்று சொன்னபோது அதிர்ச்சியும், ஆத்திரமும், கோபமும் இயல்பாகவே வந்தது. அப்போது தான் ஜெயமோகனை வாசிக்க வேண்டும் என்ற ஒரு வைராக்கியமும் பிறந்தது. ஜெயமோகனின் குறுநாவல் தொகுப்பு ஒன்றினை வாங்கி பிள்ளையார் சுழி போட்டேன்.

சும்மா சொல்லக்கூடாது மனிதர் ஒரு எழுத்து சிங்கம். எழுத்தினையே தவமாக மேற்கொள்பவர்களால் மட்டுமே ஜெயமோகன் போல எழுத இயலும். இயற்கையின் மீதான பிரமிப்பும், நேசிப்பும் அவருக்கு உண்டு என்பதை அவரது எழுத்துகளே கட்டியம் கூறுகிறது. குறிப்பாக அவரது ‘டார்த்தீனியம்' ஒரு மாஸ்டர் பீஸ் என்பது என் எண்ணம். மேஜிக்கல் ரியலிஸம் வகையில் எழுதப்பட்ட படைப்புகளில் புதுமைப்பித்தனின் கபாடபுரத்தை மிக அருகில் மொழித் தரத்திலும், அதீத கற்பனையிலும் நெருங்கிவந்த படைப்பு அது.

புனைவுகளில் என்னைப் போன்ற அறிவிலிகளை கூட பிரமிக்க வைக்கும் ஜெயமோகன் புனைவு தவிர்த்த அவரது சிந்தனைகள் மற்றும் பேச்சுக்களால் எரிச்சலடைய வைக்கிறார். கவிஞர் கனிமொழி குறித்த அவரது தற்போதைய சிந்தனைகள் அவற்றில் ஒன்று.

கவிஞர் கனிமொழி கருணாநிதி, தமிழச்சி போன்றவர்களுக்கு கிடைத்திருக்கும் பிரபலம் இவரை எரிச்சலடையச் செய்திருக்கிறது என்ற நிலையையும் மீறி பொறாமையடையச் செய்திருக்கிறது எனலாம். கருணாநிதியின் மகள் என்பதால் கனிமொழியை தூக்கிவைத்துக் கொண்டு ஆடுவதாக புலம்பியிருக்கிறார். ஜெயமோகன் கூட வாஜ்பாயின் மகனாகவோ, சுந்தரராமசாமியின் மகனாகவோ பிறந்திருந்தால் இதே போல தான் சமூகம் தூக்கிவைத்து ஆடியிருக்கும். தமிழ்ச்சூழல் மட்டுமல்லாமல் பிரபஞ்ச சூழல் முழுவதுமாகவே பிரபலங்களின் வாரிசுகளும் பிரபலங்களாக தான் பிறக்கிறார்கள். அவர்களுக்கு ஓரளவே திறமை இருந்தால் கூட தந்தையின், தாயின் பிரபலத்தை கொண்டு மிக சுலபமாக ஊடகங்களில் இடம்பிடிக்கிறார்கள்.

டயானாவின் மகன்கள் சப்பைகளாக இருந்தாலும் இங்கிலாந்து நாட்டு ஊடகங்கள் அவர்களை தொடர்ந்து உயர்த்திப் பிடித்து எழுதிவருவதையும், க்ளிண்டன் - ஹிலாரி க்ளிண்டனின் மகள் குறித்த செய்திகள் அதிகம் வருவதையும் இதற்கு மிக சுலபமான உதாரணங்களாக காட்டலாம். இத்தனைக்கும் அவர்களுக்கு தங்களது பெற்றொரின் திறனில் எதுவுமேயில்லை. அவர்களையெல்லாம் கூட உயர்த்திப் பிடிக்கும் ஊடகங்களை தான் ஜெயமோகன் சாடவேண்டுமே தவிர, அவர்களை அல்ல.

உயிர்மை கனிமொழியின் அட்டைப்படத்தோடு வருகிறதாம். புத்தகக் கண்காட்சியில் கனிமொழியின் படங்கள் பல பதிப்பகங்களில் காணப்படுகிறதாம். ஏன்? ஜெயமோகன் படத்தை கூட தான் புத்தகக் கண்காட்சியில் ரெண்டு, மூன்று இடங்களில் பார்த்தேன். என் படத்தை வைக்க வேண்டாம் என்று அவர்களிடம் ஜெயமோகன் கேட்டுக் கொண்டாரா என்ன? ஜெயமோகன் படத்தை வைத்து விற்பனை செய்தால் புத்தகம் விற்கிறது என்று தானே அவரது படத்தை அட்டையில் போடுகிறார்கள்? கனிமொழி படத்தை போட்டு விற்பனை செய்ய வக்கிருக்கும் பதிப்பகங்கள் விற்றுக் கொண்டு போகின்றன. அவரவர் விருப்பம், அவரவர் காசு. இதில் எங்கிருந்து வருகிறது பிரச்சினை?

”தன் மொழியின் படைப்புத் திறனின் திறனால் மட்டுமே கவனிக்கப்பட விரும்புதலே படைப்பாளிகளின் அடிப்படை இயல்பு” என்பவர் தன்னுடைய இணைய வலைப்பூ முழுக்க தன் படங்களை நிரப்பி வைத்திருப்பது எந்த இயல்பில் சேர்த்தி? ஒருவேளை தன்னுடைய தோற்றத்தால் தன் படைப்புத் திறனை வெளிப்படுத்துகிறாரோ?

ரஜினிகாந்தை திட்டினால் உடனடியாக பிரபலமாக முடியும் என்பதால் வேலுபிரபாகரன்களும், மன்சூர் அலிகான்களும் திட்டித் தீர்த்து சேர்த்துக் கொள்ளும் விளம்பரமலிவு யுக்தியே இப்பொது ஜெமோ தமிழச்சியையும், கனிமொழியையும் விமர்சித்து தேடிக்கொள்ளும் யுக்தி என்று எண்ணத் தோன்றுகிறது. இப்பதிவும் மலிவான விளம்பர யுக்தியில் சேர்த்துக் கொள்ளப்படுவதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனக்கு விளம்பரம் இப்போது தேவையாகவே இருக்கிறது.

பகுத்தறிவு, திராவிடம் போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே குதத்தில் மிளகாய் வைத்தது போல எரிந்து விழுபவர்களிடம் இருக்கும் அதே மனோபாவத்தை ஜெயமோகனிடமும் காணமுடிவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. கனிமொழியோ, தமிழச்சியோ திமுக தொடர்பில்லாத குடும்பங்களில் இருந்து வந்திருந்தால், உதாரணத்துக்கு கனிமொழி சுராவின் மகளாக இருந்திருந்தால் ஜெயமோகன் விமர்சித்திருக்க மாட்டார், பாராட்டி பத்தி பத்தியாக எழுதியிருப்பார் என்று முழுமையாக நம்புகிறேன்.

கடைசியாக, எஸ்.ராமகிருஷ்ணான் காலச்சுவடு இதழினில் முன்பு ஜெயமோகன் குறித்து எழுதிய விமர்சனம் ஒன்றினை இங்கே இலவச இணைப்பாக தருகிறேன் :

"விமர்சனம் என்ற பெயரில் பல வருடங்களாக ஜெயமோகன் உளறிக்கொண்டு வருவதைச் சகித்துகொண்டிருப்பது மிகுந்த அருவருப்புத் தருவதாகவேயிருக்கிறது. ஊர் ஊராகச் சென்று எழுத்தாளர்களின் சாதிப்பட்டியல்களைச் சேகரித்து வருவதும், வாரந்தோறும் சிலருக்குத் தனது பரிசுத்த ஆவியால் அருள் வழங்கி தனது இலக்கிய மிஷனரிக்குள் கன்வெர்ட் செய்வதும், போஸ்ட்கார்டு போட்டுத் தனது புத்தகத்தினைப் படிக்கச் சொல்லி ஆள் பிடிப்பதும், ஒரு பக்கம் மூப்பனாரோடு ஒரே மேடையில் கல்கி துதி, மறுபக்கம் புனித உருவம் கொள்வதுமான பச்சோந்திக் கலையின் மொத்த உருவமாகிவருகிறார்" (எஸ். ராமகிருஷ்ணன், காலச்சுவடு, இதழ் 29)