சாருவுக்கு உதவி தேவை + வேண்டுகோள்!

November 23, 2009


எழுத்தாளர் சாருநிவேதிதா கடுமையான காய்ச்சலில் வாடி வருகிறார். சென்ற வருடம் போலவெ இந்த வருடமும் லம்பாக நிறைய புத்தகங்களை அடுத்த மாதம் வெளியிடும் நிலையில், அவரது எழுத்துப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அவரது எழுத்துப் பணிகளுக்கு உதவும் நிலையில் யாராவது (சென்னையில்) இருந்தால் உடனடியாக charu.nivedita.india@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். இது தொடர்பான சாருவின் வேண்டுகோள்!

முன்னதாக சாருவின் கைப்பேசி ஆட்டோவில் தொலைந்துவிட்டது. இதனால் தான் அவருக்கு காய்ச்சல் வந்ததா என்றும் தெரியவில்லை. போன் தொலைந்தாலும், அதே எண்ணை கேட்டு வாங்கிவிட்டார். அவருடன் தொலைபேசி தொடர்பில் இருந்த நண்பர்களின் எண்கள் செல்போனோடு கோயிந்தா. எனவே தொடர்பில் இருந்தவர்கள் சாருவின் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியோ அல்லது மின்னஞ்சல் அனுப்பியோ தங்களது எண்களை தெரியப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Read more...

சேவைக்கு ஓர் ஆலயம்!


இளையராஜாவுக்கு ஏழு வயதாக இருந்தபோது, அவரது தந்தை மறைந்துவிட்டார். அம்மா திருநின்றவூர் இரயில் நிலையத்தில் வேர்க்கடலை விற்பவர். வேர்க்கடலை விற்று கிடைக்கும் காசில் மகனின் ஒருவேளை சாப்பாட்டுத் தேவையைக் கூட அந்த தாயால் பூர்த்தி செய்ய இயலவில்லை. அருகிலிருந்த ஆதரவற்றோர் இல்லம் ஒன்றினை நாடினார். மனமகிழ்ச்சியோடு இளையராஜாவை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இளையராஜா அந்த இல்லத்தில் தங்கி தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்தார்.

இது இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த கதை. இன்று இளையராஜா, நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இப்போது தனியாக ஒரு வீடு எடுத்து வயதான தன் தாயை தாங்கிக் கொண்டிருக்கிறார். “என் மகனை வளர்க்க அந்த இல்லம் மட்டும் இல்லையென்றால் அவன் என்னவாகியிருப்பான் என்றே நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஒருவேளை என்னைப் போல அவனும் திருநின்றவூர் ரயில் நிலையத்தில் வேர்க்கடலை விற்றுக் கொண்டிருந்திருக்கலாம்” என்கிறார் அவரது தாய்.

வாராவாரம் தான் வசித்த / படித்த இல்லத்துக்கு வந்து இப்போதிருக்கும் குழந்தைகளிடம் பேசிச்செல்வது இளையராஜாவுக்கு வழக்கம். இன்று தான் வளர்ந்த அந்த இல்லத்தின் அறங்காவலர்களில் ஒருவராகவும் இளையராஜா இருக்கிறார்.

அந்த இல்லம் சேவாலயா. சென்னையிலிருந்து நாற்பத்தி இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில், திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூருக்கு அருகில் கசுவா என்றொரு கிராமத்தில் பிரம்மாண்டமாக விரிந்திருக்கிறது. இருபத்தியோரு ஆண்டுகளுக்கு முன்பாக ஐந்தே ஐந்து குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட சேவாலயா இன்று நூற்றி அறுபது ஆதரவற்ற குழந்தைகளுக்கும், அறுபது முதியவர்களும் வாழும் ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது.

இவர்களால் இந்த வளாகத்தில் நடத்தப்படும் பாரதியார் மேனிலைப்பள்ளியில் ஆயிரத்து ஐம்பது மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். கல்விக்கட்டணம், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடை முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. அக்கம் பக்கம் கிராமங்களிலிருந்து பள்ளிக்கு வந்து செல்லும் குழந்தைகளுக்காக இலவசமாகவே பேருந்து வசதியும் செய்துத் தரப்பட்டிருக்கிறது.

பள்ளியை நமக்கு சுற்றிக் காட்டிக்கொண்டே பேசினார் உடற்கல்வி ஆசிரியர் சண்முகம்.

“மழலையர் வகுப்பில் தொடங்கி, பிளஸ் டூ வரை இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத்தேர்வுகளில் நூறு சதவிகிதத் தேர்ச்சி பெற்று எங்கள் தரத்தை உலகறியச் செய்திருக்கிறார்கள் எங்கள் மாணவர்கள். சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வரும் இம்மாணவர்கள் தங்கள் தலைமுறையிலேயே முதன்முறையாக கல்வி கற்பவர்கள் என்பது முக்கியமான விஷயம்.

இங்கே கல்வி கற்று செல்லும் மாணவர்கள் வறுமையில் உழல்பவர்கள் என்பதால் அவர்களது மேற்படிப்புக்கும் சேவாலயா உதவுகிறது. எங்கள் மாணவர்களுக்கு சர்வமதப் பிரார்த்தனையை கற்றுத் தருகிறோம். எல்லா மதங்களின் விழாக்களையும் இங்கு கொண்டாடுகிறோம். மதச்சார்பற்ற ஒரு ஸ்தாபனமாகவே சேவாலயா வளர்ந்து நிற்கிறது.

கல்விமுறையிலும் எங்கள் நிறுவனர் புதுமைகளைப் புகுத்தியிருக்கிறார். காந்தி, விவேகானந்தர், பாரதியார் மூவரின் சிந்தனைகளையும் எங்கள் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோமேத்ஸ், வேளாண்மைன்னு மூன்று பிரிவுகளில் கல்வி கற்றுத் தருகிறோம்”

“என்னது வேளாண்மையா?” என்று ஆச்சரியமாகக் கேட்டால்,

“ஆமாங்க. வேளாண்மை இங்கே மேல்நிலைப் பள்ளிக் கல்வியில் ஒரு பாடமாகவே இருக்கு. அதுவும் இயற்கை வேளாண்மை. எங்களோட அறிவியல் ஆய்வுக் கூடங்கள் சர்வதேசத் தரம் வாய்ந்தவை.

இங்கே பயிலும் மாணவர்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் தண்டனைகள் எதுவும் கிடையாது. கல்வியை விட ஒழுக்கத்தை போதிப்பதில் அதிகமான ஆர்வம் காட்டுகிறோம். சேவாலயாவில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறோம். இல்லத்தில் தங்கிப் படித்தவர்கள் பலரும் இங்கேயே விருப்பப்பட்டு பணிபுரிகிறார்கள். காந்திய சிந்தனைகளை மாணவர்களுக்கு விதைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஊழியர்கள் வாரத்துக்கு ஒருமுறை கதராடை மட்டுமே அணிகிறோம்” என்றார் தும்பைப்பூ நிறத்தில் கதர் வேட்டி, கதர் சட்டையோடு இருந்த சண்முகம்.

சேவாலயா மாணவர்கள் ‘கொட்டு முரசே!’ என்ற பெயரில் ஒரு கலைக்குழு நடத்துகிறார்கள். விழிப்புணர்வு நாடகம் போன்ற நிகழ்ச்சிகளை அவ்வப்போது மாவட்டம் முழுவதும் நடத்துகிறார்கள். இயற்கை வேளாண்மையின் அவசியம் குறித்த பிரச்சாரத்தையும் செய்கிறார்கள்.

பள்ளிக் கட்டடத்தை விட்டு வெளியே வந்தால் பளிச்சென்றிருக்கிறது சுவாமி விவேகானந்தா இலவச நூலகம். பதினாறாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இங்கே பாதுகாக்கப்படுகிறது. பள்ளி, விடுதி மாணவர்கள் மட்டுமின்றி கிராமத்தவர்களும் இந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இங்கிருக்கும் நூல்களை அவ்வப்போது வண்டிகளில் ஏற்றி சுற்று வட்டார கிராமங்களுக்கு நடமாடும் நூலகமாக எடுத்துச் செல்கிறார்கள். சுமார் இருபது கிராமங்களுக்கு விவேகானந்தா நூலகம் சேவை செய்கிறது.

கஸ்தூரிபாய் தையலகம் கிராமப்புற மகளிருக்காக ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. இலவசமாகவே இங்கே தையல் கற்கலாம். இதற்காக சுமார் இருபத்தைந்து தையல் இயந்திரங்கள் வாங்கப்பட்டிருக்கிறது. வளாகத்தில் கண்ணைக் கவரும் கைவினைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருக்கிறார்கள். இல்லத்தில் இருக்கும் முதியவர்கள் நேரப்போக்குக்காக இவற்றை உருவாக்குகிறார்கள்.

மகாத்மா காந்தியின் பெயரில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மருத்துவ மையம் விடுதியில் வசிப்பவர்களுக்கு மட்டுமின்றி, கசுவா கிராம மக்களுக்கும் முதலுதவி அடிப்படையில் பயன்படுகிறது. அத்தியாவசிய மருந்துகளும், மாத்திரைகளும் இங்கே இலவசம்.

முதியோர் இல்லத்தில் தாத்தா – பாட்டிகளுக்கு பொழுது போக்க தொலைக்காட்சி, ஓய்வெடுக்க படுக்கை, மருத்துவ வசதிகள் உண்டு. அவ்வப்போது மருத்துவர்கள் வந்து உடல்நிலையை பரிசோதித்து செல்கிறார்கள். குழந்தைகள் இல்லாத சரோஜா மாமி ஒன்பது வருடங்களுக்கு முன்பாக தன் கணவரோடு வந்து இந்த இல்லத்தில் சேர்ந்தார். நான்கைந்து வருடங்களுக்கு முன்பாக அவரது கணவர் காலமாகிவிட்டார். இங்கே காலமாகும் முதியவர்களின் இறுதிச்சடங்குகளையும் இவர்களே செய்துவிடுகிறார்கள். “எங்களுக்கு குழந்தைகள் இருந்திருந்தா கூட இவ்வளவு நல்லா கவனிச்சிட்டிருப்பாளான்னு தெரியலை” என்று சொல்லி கண்கலங்குகிறார் சரோஜா மாமி.

தாங்கள் யாருமற்றவர்கள் என்ற உணர்வு இங்கிருப்பவர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். இல்லத்தில் இருக்கும் குழந்தைகளை இங்கே அழைத்துவந்து ஓவ்வொரு தாத்தா பாட்டிக்கும், ஓரிரு குழந்தைகளை தேர்ந்தெடுத்து, “இனிமே இவங்க தான் உங்களோட பேரன், பேத்தி” என்று சொல்லிவிடுகிறார்கள். இதன் மூலமாக புதிய உறவுமுறைகளையும், வாழ்க்கைக்கான பிடிப்பையும் இருதரப்புக்கும் ஏற்படுத்த முடிகிறது.

இந்த இல்லத்தில் சேர்த்துக் கொள்ள வாரிசுகள் இல்லாத முதியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அடுத்ததாக வாரிசுகளால் கைவிடப்பட்டவர்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். ஓய்வூதியம் பெறுபவர்களை சேர்த்துக் கொள்வதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள்.

முதியோர் இல்லம் தொடங்கப்பட்டதிலிருந்தே நாகராஜன் என்பவர் தன் மனைவியோடு தன்னார்வத்தோடு முன்வந்து இங்கே பணிபுரிந்துக் கொண்டிருக்கிறார். இவர் ஐ.சி.எஃப். நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தன்னுடைய ஓய்வுக்காலத்தை சமூகத்துக்கு அர்ப்பணிக்கும் எண்ணத்தோடு இங்கே பணியாற்றுகிறார்.

சேவாலயாவின் நேயம் மனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகளுக்கும் உண்டு. கறவை வற்றிய மாடுகளின் கதி நம்மூரில் என்னவாகும் என்று தெரியுமில்லையா? அடிமாடாக்கி கசாப்பு கடைக்கு அனுப்பி விடுவார்கள். இதுபோன்ற அடிமாடுகளை கொண்டுவந்து ‘வினோபாஜி கோஷாலா’ என்றொரு பண்ணை வைத்திருக்கிறார்கள்.

இந்த மாடுகளின் சாணத்தை கொண்டு ‘பயோ-கேஸ்’ என்ற இயற்கை எரிவாயு உருவாக்கி, தங்களின் எரிவாயுத் தேவையின் ஒரு பகுதியை பூர்த்தி செய்துக் கொள்கிறார்கள். சாணம் வைத்து மண்புழு உரம் என்ற இயற்கை உரத்தை உருவாக்கி விற்பனை செய்கிறார்கள். ஒரு மாட்டினை பராமரிக்கும் செலவையும் தாண்டி, கூடுதல் லாபத்தை இந்த கறவை வற்றிய மாடுகளே தந்துவிடுகிறதாம். தொழுவத்தில் மாடுகளுக்கு மின்விசிறி கூட உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மனிதாபிமானம், சேவை என்பதைத் தாண்டியும் கிராமப் பொருளாதார மேம்பாடு என்ற நிலைக்கு சேவாலயா பயணித்துக் கொண்டிருக்கிறது. நிறுவனர் முரளிதரனும், அவரது மனைவி புவனாவும், சேவாலயா ஊழியர்களின் அர்ப்பணிப்பு உணர்வுமே இந்த வளர்ச்சிகளுக்கு அச்சாணி.

முரளிதரனிடம் பேசும்போது, “பாரதியார், விவேகானந்தர், காந்தி – இந்த மூன்று பேரும்தான் என் ஆதர்சம். எழுத்தறிவித்தலின் முக்கியத்துவத்தை பாரதியிடமும், அன்னதானத்தின் அவசியத்தை விவேகானந்தரிடமும், கிராமங்களின் தேவையை காந்தியிடமும் கற்றேன். இருபத்தேழு வயதில் இந்த அமைப்பை உருவாக்கினேன்.

ஆரம்பத்தில் சின்ன சின்ன தடங்கல்கள். இவ்வளவு பெரிய பொறுப்பை நான் திறம்பட செய்யவேண்டுமே என்று என் பெற்றோர் அஞ்சினார்கள். எங்களது பள்ளிக்கு அங்கீகாரம் கிடைப்பதில் நிறைய சிக்கல்கள் இருந்தது. நன்கு வளர்ந்து இப்போது திரும்பிப் பார்த்தால் கடந்து வந்த பாதை அவ்வளவு சுலபமானது இல்லை என்று தெரிகிறது. எனினும் எதிர்காலம் குறித்த அக்கறையோடும், பொறுப்போடுமே செயல்படுகிறோம்.

திருமணத்துக்குப் பிறகு இப்பணி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதால் சேவை மனப்பான்மை கொண்ட ஒருவரையே வாழ்க்கையில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையோடு இருந்தேன். புவனாவும், நானும் எக்காலத்திலும் சேவைகளிலிருந்து பின்வாங்கக்கூடாது என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டே திருமணமும் செய்துகொண்டோம். திருமணத்துக்கு முன்பாக ஒரு வங்கியில் பணிபுரிந்து வந்த புவனா, வேலையை ராஜினாமா செய்து விட்டு முழுமையாக இப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

டாட்டா கன்சல்டண்ஸி நிறுவனத்தில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகாலமாக பணியாற்றினேன். எனக்கும், என் குடும்பத்துக்கும் சம்பாதித்தது போதும், பொருளாதார ரீதியாக சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தவுடனேயே, வேலையை எழுதிக் கொடுத்துவிட்டு நானும் இப்போது முழுநேர ஊழியனாக இங்கே பணிபுரிய ஆரம்பித்து விட்டேன்” என்றார்.

அரசுகளின் நலத்திட்டங்கள் முழுமையாக மக்களைச் சென்று அடையாத நிலை இருக்கும்போது, சேவாலயா போன்ற அமைப்புகளின் சேவை நம் மனதில் நம்பிக்கை ஒளியை பரவச்செய்கிறது.

(நன்றி : புதிய தலைமுறை)

Read more...

பழசிராஜா - கேரளத்துப் பிரபாகரன்!

November 21, 2009


பழசி, நாட்டை விட்டு காட்டுக்குச் சென்று கொரில்லா முறையில் வெள்ளையர்களை எதிர்த்துப் போரிடுகிறார். அவரது படையில் ஆர்வத்தோடு சேர்பவர்கள் பழங்குடிகள். ஒரு கட்டத்தில் வில்லும், வாளும் மட்டும் போதாது, துப்பாக்கிகளும் வேண்டுமென்று சொல்லி, வெள்ளையர்களை தாக்கி ஆயுதங்களை கைப்பற்றுகிறார் பழசி. நவீன ஆயுதங்களோடு பழசியின் பெரும்படை தாக்கும்போது வெள்ளையர்களால் சமாளிக்க இயலவில்லை. ஒப்பந்தத்துக்கு அழைக்கிறார்கள்.

சில நிபந்தனைகளின் அடிப்படையில் போடப்படும் ஒப்பந்தம் வெள்ளையர்களால் மீறப்பட, மீண்டும் போர்க்கோலம் காண்கிறார். சில அதிரடி வெற்றிகளை ஈட்டுகிறார். வெள்ளையர்கள், பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி கேரள நாட்டைச் சேர்ந்த சிலரை ஆட்காட்டிகளாக பணிக்கு சேர்க்கிறார்கள். பழசியின் ரகசியங்களை அறிந்து, அவரது ஒவ்வொரு சகாக்களாக பிடித்து தூக்கிலிடுகிறார்கள். இறுதியில் தோல்வி உறுதி என்ற நிலையிலும் வீரத்தோடு மோதி இறவாப்புகழ் அடைகிறார் பழசிராஜா.

கடந்த முப்பத்தைந்து ஆண்டுக்கால ஈழநடப்பை வைத்துப் பார்த்தால், பழசிராஜாவையும், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனையும் பலவகைகளில் ஒப்பிடலாம். (ஒரு காட்சியில் பழசிராஜா இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்துகொண்டவர் என்றுகூட வசனக்குறிப்பு இருக்கிறது. அதை பழசியே மறுக்கும் வசனமும் உண்டு)

படத்தின் கதை இவ்வாறு இருக்க, வலைமனை ஒன்றில் வாசித்த பழசிராஜாவின் ஒரிஜினல் கதை சற்று வேறாக இருக்கிறது. பிரெஞ்சுப்படையே படத்தில் வரவில்லை. இறுதியில் பழசிராஜா தற்கொலை செய்துகொண்டதாக கதையில் இருக்கிறது. படத்திலோ வீரமரணம். எம்.டி.வாசுதேவன் மாற்றினாரா அல்லது படத்துக்காக மாற்றினார்களா என்றும் தெரியவில்லை.

‘இந்திய சுதந்திரத்துக்கு போராடிய முதல் வீரன்’ என்றெல்லாம் படம் வெளிவருவதற்கு முன்பாக பத்திரிகைகளில் எழுதப்பட்டது. ஆனால் படத்தில் இடம்பெறும் காலக்கட்டம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி, மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கமாக இருக்கிறது. திப்புசுல்தான் மற்றும் கட்டபொம்மன் வாழ்ந்த காலத்திலேயே பழசியும் வாழ்ந்திருக்கிறார். தென்னிந்தியாவிலிருந்து வெள்ளையர்களை துரத்தியடிக்க திப்பு தலைமையில், குறுநில மன்னர்கள் திரண்டது குறித்த குறிப்புகளையும் படத்தின் வசனங்களில் தெரிந்துகொள்ள முடிகிறது.

ஜெயமோகன் வசனம் எழுதியிருக்கிறார் என்று சொல்லமுடியவில்லை. மொழியாக்கம் செய்திருக்கிறார். கொரில்லாப் போரை ஒளிப்போர் (ஒளிந்துத் தாக்கும் போர்) என்று அழகாக மொழிபெயர்க்கிறார். தமிழ்படம் என்றாலும் சரத்குமாரை தவிர மற்றவர்கள் மூக்காலேயே பேசுவதால் மலையாளத்தில் படம் பார்க்கிறோமா என்று எண்ணத் தோன்றுகிறது.

தசாவதாரம் தொடங்கியது மாதிரியே கமல்ஹாசனின் கம்பீரக்குரலோடு படம் தொடங்கும்போது எதிர்ப்பார்ப்பு இரட்டிப்பு மடங்காகிறது. ஒருவேளை கமல் இப்படத்தை தயாரித்திருந்தால் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டிருக்கலாம். இருபது வருடங்களுக்கு முன்பு ராமனந்த்சாகர் எடுத்த ராமாயணம் மாதிரியிருக்கிறது பழசிராஜா. வெயிட்டான சப்ஜெக்ட்டை, வெயிட்டாக பணமிறக்காமல் கச்சிதமாக எடுத்திருக்கிறார்கள். படத்தில் வரும் வெள்ளைக்கார சிப்பாய்கள் கூட ரொம்ப சீப் ரேட்டில் மாட்டினார்கள் போலிருக்கிறது. காலையில் ஏழு மணிக்கே டாஸ்மாக் வாசலில் நிற்கும் நோஞ்சான்கள் மாதிரி பாவமாக இருக்கிறார்கள். அசிஸ்டெண்ட் கலெக்டராக நடித்திருப்பவர் வெள்ளைக்காரரா என்றே சந்தேகமாக இருக்கிறது.

படத்தின் முதல்பாதி ஓரளவுக்கு விறுவிறுப்பாக இருக்கிறது. பழசிராஜா, ராணியைப் பார்க்கப் போகும்போது கூட முன்னால் நீட்டிய வாளோடே போகிறார். புகுந்து விளையாடப் போகிறார் என்று நினைத்தால், வெறும் ஐடியா மணியாக படையினருக்கு ஐடியா சொல்லியே காலத்தைத் தள்ளுகிறார். ராஜாவுக்கான ஆக்‌ஷன் பிளாக்குகள் ரொம்ப குறைவு. ஆனால் மம்முட்டியின் மெஜஸ்டிக் லுக்கும், ராயல் நடையும் அட்டகாசம். இரண்டாவது ஹீரோவாக வந்தாலும் சரத்குமார், கொடுக்கப்பட்ட வாய்ப்பை கனகச்சிதமாக கவ்விக் கொண்டார். மம்முட்டியோடு வாள்பயிற்சியில் ஈடுபடும்போது சரத்குமார் நான்கைந்து செண்டிமீட்டர் முந்துகிறார். சுமனுடனான மோதலிலும் அனல் பறக்கிறது.

கனிகா எவ்வளவு அழகாக நிஜமான ராணியைப் போலவே இருக்கிறார். பச்சைத் தமிழச்சியான இவரை ஏன் தமிழ் திரையுலகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு பாடலுக்கான லீடிங் காட்சியில் குளத்தில் குளித்துவிட்டு முண்டோடு படிக்கட்டில் ஓடி வருகிறார். டாப் ஆங்கிள் கோணத்தில் எடுக்கப்பட்ட அட்டகாசமான காட்சி. விரிந்த திரையில் கண்கள் நிறைகிறது. இதற்கு இணையான ஒரு காட்சியை சொல்ல வேண்டுமானால், பம்பாய் படத்தின் உயிரே பாடலில் மனிஷா ஓடிவரும் காட்சியை சொல்லலாம். அழகான ராணியை ராஜா எப்போதும் அழவைத்துக்கொண்டே இருப்பது எரிச்சல்.

படத்தின் ஒரிஜினல் ஹீரோ இளையராஜா. பழசிராஜாவுக்கான இசையை எடுத்துச் சொல்ல வார்த்தைகளே இல்லை. ஆஸ்கர் என்ன, நோபல் பரிசு கூட இளையராஜாவின் இசைக்கு தூசு. இளம் இசையமைப்பாளர்கள் பின்னணி இசை அமைக்க பழசிராஜாவை பாடமாக எடுத்துக் கொள்ளலாம்.

உளியின் ஓசை தரத்தில் இருப்பதால் இப்படம் கலைஞருக்கு பிடித்திருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. மருதநாயகம் ரேஞ்சுக்கு வரவேண்டிய பழசிராஜா, பட்ஜெட் குறைவால் கொஞ்சம் சூம்பிப்போயிருக்கிறார். படத்தின் க்ளைமேக்ஸ் என்னவாக இருக்குமென்பது படம் ஆரம்பித்த நான்காவது ரீலிலேயே யூகித்துவிட முடிகிறது. ஆகையால் இரண்டாம் பாதி இழுவையை சகித்துக் கொள்ள முடியவில்லை. இரண்டேமுக்கால் மணிநேரம் ஒரு சரித்திரப் படத்தை பார்த்துக்கொண்டு தமிழனால் பொறுமையாக ஒரு இடத்தில் இன்று அமரமுடியுமா என்பது சந்தேகமே.

Read more...

நக்சல்பாரிகள் - இன்றைய நிலை!

November 20, 2009

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!
ஐந்தாம் பாகம் : பீகார் ஜெயில் தகர்ப்பு!
ஆறாம் பாகம் : அழித்தொழிப்பு!
ஏழாவது பாகம் : தமிழ் நக்சலைட்டுகள்!
எட்டாவது பாகம் : நக்சல் தரப்பு நியாயங்கள்!
ஒன்பதாவது பாகம் :நக்சல்கள் - அரசுத் தரப்பு நிலை!


எமர்ஜென்ஸி யாரை பாதித்ததோ இல்லையோ, நக்சல்பாரிகளையும், அவர்கள் இயக்க வளர்ச்சிகளையும் மிகக்கடுமையாக மட்டுப்படுத்தியது. எமர்ஜென்ஸிக்கு பிறகான ஜனதா கட்சியின் கூட்டு அரசாங்கம் விசாரணையின்றி நாடெங்கும் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த நக்சல்பாரிகளை விடுதலை செய்தது. இந்த விடுதலைக்குப் பின்னணியில் பல்வேறு மனித உரிமை குழுக்களின் குரல் இருந்தது.

கடந்த கால கசப்பான அனுபவங்கள் நக்சல்பாரிகளை புடம் போட்டிருந்தது. பல்வேறு இயக்கங்களும், இயக்கத் தலைவர்களும் ஒன்று கூடி தாங்கள் ஏற்கனவே சென்று கொண்டிருந்த பாதையை மறுபரிசீலனை செய்தனர். ஒரு சில கட்சிகள் தாங்கள் ஏற்கனவே மேற்கொண்டிருந்த அழித்தொழிப்பு முதலான நடவடிக்கைகளிலிருந்து தடம்மாறி பாராளுமன்றத்தில் மக்கள் ஆதரவோடு பிரதிநிதித்துவம் செய்ய முடிவெடுத்தார்கள். பீகாரில் இன்றும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) போன்றவர்கள் இவர்கள்.

இன்னொரு தரப்போ தங்களது வழக்கமான கொரில்லா போர்முறையை தொடர முடிவெடுத்தது. ஆந்திராவில் பிரபலமான மக்கள் போர்க்குழு, பீகாரின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பு ஆகிய குழுக்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நக்சல்பாரிகள் இருவேறு பாதையை தேர்ந்தெடுத்து பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இரு தரப்புமே அவ்வப்போது அமையும் அரசுகளை எதிர்த்தே அரசியல் செய்து வந்தாலும், வழிமுறைகள் வேறு வேறு. இரு தரப்பும் கூட பல பிரச்சினைகளில் மூர்க்கமாக மோதிக்கொள்வதுண்டு.

ஆனாலும், கடந்த கால் நூற்றாண்டில் பார்க்கப் போனால் ஆயுதம் தாங்கிய நக்சல்பாரி குழுக்களே பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றன என்பது தான் யதார்த்தம். இந்த குழுக்கள் தான் இந்தியாவின் மத்திய, மாநில அரசுகளுக்கு பெரிய அளவில் தலைவலியை தந்து வருகிறார்கள். எழுபதுகளில் மேற்கு வங்காளம், பீகார், ஆந்திரப்பிரதேசம் என்று சில மாநிலங்களில் மட்டுமே பெரியளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த இவர்கள் இன்று ஒரிஸ்ஸா, மஹாராஷ்டிரம், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வலுவாக காலூன்றியிருக்கிறார்கள். ஏற்கனவே குறிப்பிட்டது போல ஏழைகளும், ஒடுக்கப்பட்டவர்களும் அதிகம் இருக்கும் பகுதிகளில் மிக சுலபமாக நக்சல்பாரிகளால் காலூன்ற முடிகிறது. புதிய தொழில் திட்டங்களால் தங்கள் விளைநிலங்களை இழக்கும் விவசாயிகள், காடுகளை இழக்கும் பழங்குடியினரும் அடைக்கலமாகும் குழுக்கள் நக்சல்பாரி குழுக்களாக இருக்கின்றன.

இன்றைய நிலையில் நக்சல்பாரி குழுக்களின் தாய்வீடான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்துவதில்லை. ஆனால் மக்களை ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கு தயார் படுத்தும் விதமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆந்திராவின் மக்கள் போர்க்குழு மற்றும் பீகாரின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பு ஆகிய நக்சல்பாரி குழுக்கள் தான் வலுவான ஆயுதவழிப் போராட்ட குழுக்களாக வளர்ந்திருக்கின்றன.

மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பு பீகாரிலும், ஜார்க்கண்டிலும் தடைசெய்யப்பட்டிருக்கிறது. அதுபோலவே மக்கள் போர்க்குழு ஒரிஸ்ஸாவிலும், ஆந்திரப் பிரதேசத்திலும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இதுபோல பல மாநிலங்களிலும் பல நக்சல் குழுக்கள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இந்த தடையை உடைத்தெறிய இக்குழுக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற பெயரில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. மாநில அரசுகளின் தடையே கொரில்லா போர்க்குழுக்களை ஒன்றிணைய வைத்து விட்டது.

கட்சியாக உருவெடுத்தப் பின் முன்பை விட மூர்க்கமாக நக்சல் குழுக்கள் செயல்படுகின்றன. மேற்கு வங்காளம், பீகார், ஆந்திரப்பிரதேசம், ஒரிஸ்ஸா, மஹாராஷ்டிரம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முழு பலத்தோடு இப்போது இருக்கிறார்கள். கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்களில் காலூன்றும் பணிகளையும் சமீபகாலமாக செய்துவருகிறார்கள்.

நக்சல் குழுக்கள் அடிக்கடி தங்களது கட்சி பெயர்களை மாற்றியோ அல்லது குழுக்களை ஒன்றோடு ஒன்றாகவோ இணைத்துக் கொள்வது காவல்துறையையும், ஆட்சியாளர்களையும் குழப்பி வருகிறது. புதிய பெயர்களில், புதிய குழுக்களில் நக்சல் குழுக்களுக்கு போராளிகளை சேர்த்து மொத்தமாகப் போய் மீண்டும் பழைய குழுவில் இணைந்துகொள்வது அவர்கள் வழக்கம். நக்சல்குழுக்களுக்கு போராளிகளும், செய்தித் தொடர்பாளர்களும் மாதச்சம்பளம் வாங்கி பணியாற்றுகிறார்கள் என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும்.

ஒரு போராளிக்கு இப்போது ஆறாயிரம் ரூபாய் முதல் எட்டாயிரம் ரூபாய் வரை நக்சல் குழுவில் பணியாற்ற ஊதியமாக வழங்கப்படுகிறது. தொழில்நுட்பத்தில் தேர்ந்தவர்களுக்கு ரூபாய் எட்டாயிரம் முதல் ரூபாய் பதினாறாயிரம் வரை வழங்கப்படுகிறது. இந்தியாவில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு இணையான அல்லது உயர்ந்த சம்பளத்தையே நக்சல்பாரிகள் தங்கள் போராளிகளுக்கு வழங்குகிறார்கள். குழந்தைகளையும், பெண்களையும் கூட செய்தி சேகரிக்க இன்•பார்மர்களாக பணிக்கு அமர்த்துகிறார்கள் என்று காவல்துறையினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

நாடுகளுக்கிடையே இருக்கும் தீவிரவாதக் குழுக்களை பற்றிய அமெரிக்க ஆய்வறிக்கை நக்சல்பாரிகளின் வளர்ச்சி குறித்து கவலை தெரிவிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) நிறைய பெண்களையும் ஈர்த்திருக்கிறது என்பதை அவ்வறிக்கை ஒப்புக் கொள்கிறது. இக்கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை சரியாக கணக்கிடமுடியவில்லை. ஆனாலும் குறைந்தபட்சம் 31,000 பேர் இருக்கலாம் என்று அவ்வறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கை 2006ஆம் ஆண்டு வந்தது. அதன் பின்னர் இருமடங்காகவும் ஆகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஆயுதம் தாங்கிய நக்சல் குழுக்கள் ஒருங்கிணைந்து 2004ல் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்த பிறகு, ஒரு அரசியல் கட்சிக்கேயுரிய கட்டமைப்போடு பிராந்திய கமிட்டிகளை உருவாக்கினார்கள். ஆந்திரா - ஒரிஸ்ஸா எல்லை சிறப்புக் கமிட்டி, ஜார்கண்ட் - பீகார் - ஒரிஸ்ஸா சிறப்புக் கமிட்டி, டாண்டகரன்யா சிறப்புக் கமிட்டி என்று தேசிய கட்சிகளுக்கு மாநில கமிட்டிகள் இருப்பது போல நக்சல்கள் செயல்படும் மாநிலங்களுக்கு கமிட்டிகள் அமைக்கப்பட்டன. கமிட்டிகள் செயல்பட நிர்வாகிகளை நியமித்தார்கள். குழுக்களின் நிர்வாகம் சீர்பட்டது.

கட்சியின் கட்டமைப்பு உறுதியாக இருப்பதால் திட்டமிட்ட தாக்குதல்களை இப்போது மிகத்துல்லியமாக நிகழ்த்தி வருகிறார்கள். சமீபத்தில் நடந்த டிரெயின் ஹைஜாக்கிங்கையும் கூட இதற்கு உதாரணமாக சொல்லலாம். இப்போது இந்தியாவின் 18 மாநிலங்களில் 194 மாவட்டங்களில் நக்சல்பாரி குழுக்கள் காலூன்றியிருக்கின்றன. இவைகளில் 62 மாவட்டங்களில் மிகுந்த செல்வாக்காடு இருக்கின்றனர். வெளிப்படையாகவே காவல்துறைக்கும், ஆட்சி நிர்வாகத்துக்கும் சவால் விடும் அளவுக்கு நக்சல்பாரிகளின் வளர்ச்சி இருக்கிறது.

(முற்றும்)


பின்குறிப்பு :

1. நக்சல்கள் குறித்து வாசிக்க நினைத்தபோது தமிழில் மட்டுமன்றி, ஆங்கிலத்திலும் கூட மிகக்குறைவான தரவுகளே வாசிக்க கிடைத்தது. அச்சுபாணி பிரச்சாரம் நக்சல்களுக்கு ஏற்புடையது அல்ல என்று தோன்றுகிறது.

2. இத்தொடரில் சிறுசிறு தகவல் பிழைகள் நிறைய இருக்கலாம். எனக்கு வாசிக்க கிடைத்த தரவுகளின் அடிப்படையிலேயே எழுதியிருக்கிறேன். எப்பிழையும் என்னால் வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்காது என்று நிச்சயமாக கூறமுடியும்.

3. நக்சல்கள் குறித்த விரிவான வாசிப்புக்கு போதுமான புத்தகங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இத்தொடர் எழுதிய தினத்திலிருந்து இன்று வரை குறைந்தது பத்து தொலைபேசி அழைப்புகளாவது தொடர் குறித்து பேசும் நோக்கத்தோடே எனக்கு வந்துகொண்டே இருக்கிறது.

4. இந்த நிமிடம் வரை நான் நக்சல்களின் ஆதரவாளனோ அல்லது எதிர்ப்பாளனோ அல்ல. வேண்டுமானால் அனுதாபி என்று சொல்லிக் கொள்ளலாம். இத்தொடர் என் பார்வையில் எழுதப்பட்டது என்பதால் அரைவேக்காடாகவும் சிலருக்கு தோன்றலாம்.

5. இறுதியாக, என் புரிதலில் பணக்காரர்களால் ஆனது தேசம் என்று அரசும், தேசமென்பது ஏழைகளுக்கானது என்று நக்சல்பாரிகளும் புரிந்துகொண்டதாலேயே இப்பிரச்சினைகள் என்பதாக எடுத்துக் கொள்கிறேன். இரண்டுக்கும் இடைப்பட்ட சிந்தனைகளோடு கூடிய ஒரு அமைப்பே இந்தியாவின் இன்றைய தேவை என்றும் கருதுகிறேன்.

Read more...

சூரிய(க்) கதிர்!

November 18, 2009

சில காலமாக தமிழில் பத்திரிகைகள் அதிகம் விற்கப்படுகிறது. அல்லது விற்கப்படுவது மாதிரியான ஒரு மாயையாவது இருக்கிறது. ஆனந்த விகடன் புதிய அளவுக்கு மாறியதற்குப் பிறகாக புதிய பத்திரிகைகளின் படையெடுப்பு அதிகமாகியிருப்பதை உணரமுடிகிறது. பழைய வாசகர்களை விகடன் இழந்துவிட்டது, அவர்களை கைப்பற்றிவிடலாம் என்றொரு நம்பிக்கை நிறைய பேருக்கு ஏற்பட்டிருப்பதாக ஒரு பத்திரிகையாளரோடு பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார்.

எனக்கென்னவோ, புதிய வாசகர்கள் சொல்லிக்கொள்ளும்படி பெருகாவிட்டாலும், விகடன் தன் பழைய வாசகர்களை இழந்ததாக தெரியவில்லை. என்னைப் போன்ற ஓரிருவர் புத்தகத்தின் விலையேற்றம் காரணமாக வாங்குவதை நிறுத்திவிட்டு ஓசியில் படித்துக் கொண்டிருக்கலாம். வடக்கு வாசல் என்றொரு பத்திரிகையை பார்த்தேன். தொண்ணூறுகளில் வந்த விகடன், குமுதம் கலவை. பத்து ரூபாய் விலையென்று நினைக்கிறேன். வாசிக்க நன்றாகவே இருக்கிறது. காலச்சுவடு, உயிர்மை போன்றவை இடைநிலை அந்தஸ்தை எட்டிவிட அகநாழிகை மாதிரி சிற்றிதழ்களும் கூட கொஞ்சம் தெம்பாக களத்தில் குதித்திருக்கிறார்கள்.

ஐந்து ரூபாய்க்கு அதிரடியாக களமிறங்கியிருக்கும் புதிய தலைமுறையும் ஆரம்பத்திலேயே ஒரு லட்சத்தை தாண்டிய பிரதிகளை விற்றுக் கொண்டிருக்கிறது. விலை, விளம்பர வெளிச்சத்தின் அடிப்படையில் பார்த்தாலும் கூட, தமிழகத்தில் சன் குழுமத்தைத் தவிர வேறெவரும் எட்டமுடியாத சாதனையை புதிய தலைமுறை எட்டியிருக்கிறது. “சினிமா இல்லை. நடப்புச் செய்திகள் இல்லை, தகவல் களஞ்சியமாக இருக்கிறது” என்று சிலர் விமர்சிக்கிறார்கள். இது விமர்சனம் அல்ல பாராட்டு. ரீடர்ஸ் டைஜஸ்ட் மாதிரியான ஜாம்பவான்கள் மற்றுமே பெற்ற பாராட்டு இது. “இளைஞர் மலர் மாதிரியிருக்கிறது” என்பது இன்னொரு விமர்சனம். ‘இளைஞர் இதழ்’ என்று விளம்பரங்களில் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் இதழ் இளைஞர் மலர் மாதிரி தானிருக்கும். எப்படியிருப்பினும், பத்திரிகையுலகத்தின் இவ்வருட வரவுகளில் தவிர்க்க முடியாத சக்தியாக ‘புதிய தலைமுறை’ மலர்ந்திருக்கிறது.

குழந்தைகள் தினமன்று ஒரு குஜாலான புதியப் பத்திரிகையை வாங்க முடிந்தது. ‘சூரிய கதிர்’ (க்-கன்னா மிஸ்ஸிங்) என்று பெயருக்காகவே, பதினைந்து ரூபாய் கொடுத்து வாங்கினேன். இன்று பல பத்திரிகைகளில் பணிபுரியும் பல்வேறு பத்திரிகையாளர்களும் எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் மூத்த பத்திரிகையாளர் ராவ் அவர்களால் பட்டை தீட்டப்பட்டவர்களே. ஒரு பத்திரிகையாளத் தலைமுறையை உருவாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர். ‘ஆசிரியர் : ராவ்’ என்பதே சூரிய கதிரின் மிகப்பெரிய பலம்.

ஆசிரியர் குழுவில் வாசுதேவின் பெயரை பார்த்ததும் இரட்டிப்பு மகிழ்ச்சி. குமுதத்தில் அவர் கலாட்டா அடித்த பக்கங்கள் என்னுடைய பள்ளிநாட்களை சுவாரஸ்யமாக்கிய விஷயங்கள். குறும்புக்காக பெண் வேடத்தில் ஆண்களை அணுகி, அவரது கற்பு ஜஸ்ட்டில் தப்பியதெல்லாம் நினைவுக்கு வருகிறது. நீண்ட வருடங்கள் கழித்து ஒரு பத்திரிகையின் இம்ப்ரிண்டில் எனக்குப் பிடித்த வாசுதேவ். நமீதா, இலீயானா என்று ஜொள்ளு எழுத்துகளால் விகடன் பக்கங்களை ஈரமாக்கிய தோழர் மை.பாரதிராஜா, கோவக்காரப் பொண்ணு மு.வி.நந்தினி, சென்னைத் தமிழில் கொஞ்சும் பாண்டிச்சேரி நண்பர் மரக்காணம் பாலா என்று என்னுடைய நண்பர்களும் ஆசிரியர் குழுவில் இருப்பது பத்திரிகையை கொஞ்சம் மனசுக்கு நெருக்கமாக்கியது.

2004 தீபாவளிக்குப் பிறகு முதன்முறையாக ஜெயேந்திரரின் பிரத்யேகப் பேட்டி, எழுத்தாளர் ரங்கராஜனின் மனைவி சுஜாதாவின் நினைவுகள், அரசியல் குறைவான வைகோவின் அதிரடி, சின்னக்குத்தூசியின் கட்டுரை, இச்சுக்கு இலியானா, லொள்ளுக்கு விவேக் என்று உள்ளடக்க அளவில் முதல் இதழிலேயே சிகரம் தொட்டிருக்கிறது சூரிய கதிர். பாலகுமாரனின் தொடர் ஒன்று கூடுதல் அட்ராக்‌ஷன். எல்லா அம்சங்களும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் இப்பத்திரிகையில் ஒரு சிறுகதை கூட இல்லை என்பது சற்றே நெருடல். பார்த்திபனும் கடைசிப் பக்கத்தில் ஒருபக்கத் தொடர் ஒன்றை தொடங்கியிருப்பதாக தெரிகிறது. வழக்கம்போல என்ன எழுதியிருக்கிறார் என்பது நான்குமுறை வாசித்தும் புரியவில்லை. கடைசிப் பக்கம் கச்சிதமாக இருக்க வேண்டியது தற்கால பத்திரிகைச் சூழலில் அவசியம்.

வெகுஜன இதழாக மலர்ந்துவிட்டப் பிறகு விகடன், குமுதம், குங்குமம் மட்டுமன்றி வாரமலர், ராணி ஆகியவற்றிலும் இருந்தும் கூட மாறுபட்டு தெரியவேண்டிய சவால் சூரிய கதிருக்கு இருக்கிறது. முதல் இதழ் தீபாவளி சிறப்பிதழ் போல ஜூகல்பந்தியாக அமைந்துவிட்டது. அடுத்தடுத்த இதழ்கள் முதல் இதழைவிட சிறப்பாக அமையவேண்டியது கட்டாயம். அரசியல் – சினிமா – சமூகம் – கலை என்று சூரிய கதிருக்கான வெளி பரந்ததாக இருப்பதால், சிறந்தவர்களை கொண்ட ஆசிரியர் குழு சிறப்பாகவே இயங்கும் என்று நம்புகிறேன்.

லே-அவுட் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பது பெரியக்குறை. ராவ் சார் ஜூ.வி. ஆரம்பித்தபோது ஏதாவது க்ரிட்டிகலான டாபிக்கல் மேட்டர்களுக்கு கம்பிவேலி கட்டி லே-அவுட் போட்டிருக்கலாம். கம்ப்யூட்டரில் லே-அவுட் செய்யும் இந்தக் காலத்திலும் அந்த கம்பிகளையே பிடித்து வாசகன் தொங்கிக் கொண்டிருக்க முடியாது இல்லையா? அட்டைப்படமும் ரொம்ப சுமார், இலியானா அழகாகவே இல்லை. ஆர்ட் பேப்பரில் இல்லாமல் சாதாரண நியூஸ் பிரிண்டில் 80 பக்கங்கள். பதினைந்து ரூபாய் என்பது கொஞ்சம் அதிகம் என்று வாசகர்கள் அணுக அஞ்சுவார்கள். எனினும் மாதமிருமுறை இதழ் என்பதால் விலை ரெகுலர் வாசகர்களுக்கு பெரிய பொருட்டாக இருக்காது என்று நினைக்கிறேன்.

பத்திரிகை தொடக்கத்துக்கான விளம்பரங்கள் போதுமானவையாக இல்லை என்பது என் அவதானிப்பு. சென்னை நகரில் சொற்ப இடங்களிலேயே சூரிய கதிர் சுவரொட்டிகளை கண்டேன். டிவி விளம்பரங்களும் போதுமானவையாக இல்லை. சன் நியூஸ், கலைஞர் நியூஸ் போன்ற உப்புமா சேனல்களில் விளம்பரம் செய்தால் மட்டும் பத்தவே பத்தாது. அதுபோலவே வினியோகமும் சரியாக இருப்பதாக தெரியவில்லை. லயன் காமிக்ஸ் கூட கிடைக்கும் தி.நகர் ஏரியாவிலேயே கூட சூரிய கதிர் சரிவர கிடைக்கவில்லை.

சூரிய கதிர் – எனக்குப் பிடித்திருக்கிறது, வாசித்துப் பார்த்தால் எல்லோருக்குமே பிடிக்கும் என்று நம்புகிறேன்.

Read more...

திரும்பிப் பாருடி!

November 16, 2009


தூக்கம் கண்ணை சுழற்றிக் கொண்டிருந்த ஒரு சோம்பலான, சோர்வான மதியப் பொழுதில் தமிழய்யா அந்த வகுப்பை எடுத்துக் கொண்டிருந்தார். கைக்கிளை, பெருந்திணை, பசலை என்று எங்களுக்கு புரியாத ஏதேதோ வார்த்தைகளை அடிக்கடி அவர் உச்சரித்துக் கொண்டிருக்க, என் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த செந்திலின் வாய் “ஆ”வென்று பிளந்து கிடந்தது. இரண்டு “ஈ”க்கள் அவன் வாய்க்குள் அடிக்கடி புகுந்து ஓட்டப் பந்தயம் நடத்தி விளையாடிக் கொண்டிருந்தது. கண்களை திறந்துகொண்டே தூங்க செந்திலிடம் தான் பயிற்சி எடுக்க வேண்டும்.

அடிக்கடி தலைவன், தலைவி என்றும் அய்யா சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். எனக்குத் தெரிந்த தலைவன் கலைஞர் தான், தலைவி என்றால் அது புரட்சித்தலைவி மட்டுமே. அவர் சொன்ன தலைவன், தலைவி சங்க இலக்கியத்தில் வருபவர்களாம். வகுப்பில் பாதிப்பேர் அரைத்தூக்கத்திலும், மீதி பேர் முழுத்தூக்கத்திலும் ஆழ்ந்திருந்ததை தமிழய்யா கவனித்திருக்க வேண்டும். சட்டென்று Gear மாற்றி, ஸ்டியரிங்கை இப்படியும் அப்படியுமாக சுழற்றி மெதுமெதுவாக சுவாரஸ்யத்தை ஏற்றத் தொடங்கினார். தமிழய்யா எப்போதுமே இப்படித்தான், எருமை மாட்டுக்கு வாழைப்பழத்துக்கு நடுவில் மாத்திரை வைத்து தருவது போல.. பொண்ணு, சினிமா என்று அவ்வப்போது சூடேத்தி பாடம் நடத்துவார்.

“எலேய் கிருட்டிணகுமார். உன்னை ஒரு பொண்ணுக்கு புடிச்சிருந்தா, அவளுக்கு உன்னை புடிச்சிருக்குன்னு எப்படிய்யா கண்டுபுடிப்பே?”

பாதித்தூக்கத்தில் இருந்த நான் என் பெயர் உச்சரிக்கப்பட்டதுமே திடுதிப்பென்று கையை காலை உதறி சப்தமெழுப்பியவாறு எழுந்தேன். பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த செந்தில் திடுக்கிட்டு முழித்ததில் அவன் வாய் சடாரென்று மூடிக்கொள்ள, ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டிருந்த ஒரு ஈ அந்த நேரம் பார்த்து அவன் வாயில் மாட்டிக் கொள்ள, இன்னொரு ஈயோ தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று தலைதெறிக்க ஓடியது. ஈ வாய்க்குள் மாட்டிக் கொண்டதால் ஒரு மாதிரியாக இருமினான். கண்களில் நீர் முட்டியது. வாய்க்குள் ஏதோ மாட்டிக் கொண்டது அவனுக்கு தெரிந்திருந்தாலும், எது மாட்டியது என்று தெரியாமல் விழித்தான்.

“ம்ம்... அய்யா... அது வந்து” வெட்கத்தோடு நின்றபடியே காலால் கோலம் போட்டேன்.

“ஆம்புளைப் புள்ளே தானே? என்னல்லே வெட்கம்?”

“வந்து.. வந்து.. என்னை புடிச்சிருக்கான்னு கேட்பேன். அவளுக்கு புடிச்சிருந்தா ‘புடிச்சிருக்கு'ன்னு சொல்லுவா...”

“தூத்தேறி.. புடிக்கலைன்னா செருப்பால அடிப்பாளா?” கேட்டுவிட்டு வினோதமாக சிரித்தார். தமிழய்யா நல்ல திராவிட நிறம். பல் மட்டும் பளீரென்று மல்லிப்பூ மாதிரி வெள்ளை வெளேரென்று இருக்கும். வகுப்பறை மெதுவாக சோம்பல் முறிக்கத் தொடங்கியது. 'பொண்ணு, புடிச்சிருக்கு' வார்த்தைகளை கேட்டதுமே அவனவன் கண்ணில் எச்சில் தொட்டு, தூக்கத்தை விரட்டி ரெஃப்ரெஷ் ஆனான்கள்.

“தெரியலை அய்யா.. எப்படி கண்டுபுடிக்கிறது?” தமிழய்யாவுக்கு நான் செல்லமான சீடன் என்பதால் அவரிடம் அதிக உரிமையை இயல்பாகவே எடுத்துக் கொள்வேன்.

“மூதி.. நாஞ்சொல்றதை கேளு.. ஒரு தெருவோட இந்த முனையிலேருந்து நீ நடந்துப் போறே.. இன்னொரு முனையிலேருந்து ஒரு வயசுப்பொண்ணு நடந்து வர்றா.. அந்தப் பொண்ணை உனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.. ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் க்ராஸ் பண்ணுறீங்க.. வெட்கங்கெட்ட ஆம்பளைப் பய நீ நிமிர்ந்து அவளை பாத்திடுவே. அவ பொண்ணு இல்லையா? அவளுக்கு புடிச்சிருந்தாலும் உன்னை நிமிர்ந்து பார்க்க மாட்டா.. உனக்கு தெரியாமலேயே உன்னை ஓரக்கண்ணாலே எப்படியோ பார்த்துடுவா.. தெருவோட அந்த முனைக்கு அவளை திரும்பி, திரும்பி பார்த்துக்கிட்டே நீ நடந்து போயிடுவே. இந்த முனைக்கு வந்தவளுக்கு உன்னை புடிச்சிருந்தா கட்டாயம் ஒரு தடவை திரும்பிப் பார்ப்பா.. மனசுக்கு பிடிச்சவனை மட்டும் தான் ஒரு பொண்ணு திரும்பிப் பார்ப்பா.. ஆம்பளைப் பயலுக தான் வெறிநாய்ங்க மாதிரி வத்தலோ, தொத்தலோ.. பொண்ணுன்னு இருந்தா எல்லாத்தையும் பார்ப்பான்.. இதைப் பத்தி தான் இலக்கியத்துலே சொல்லியிருக்கான்....”

தமிழய்யா பாடத்தை தொடர, ஜிவ்வென்று என் மனம் இறக்கை கட்டி விண்வெளியில் ராக்கெட் மாதிரி பறக்கத் தொடங்கியது.


குப்பு முடிந்து டியூஷனுக்கு செல்ல வேண்டும். செந்திலும் என்னோடு தான் டியூஷன் படித்தான். சைக்கிள் ஸ்டேண்டுக்கு வரும் வரையில் அவனிடம் எதுவும் பேசவில்லை.

“மச்சான். தமிழய்யா என்ன சொன்னாருன்னு கேட்டியா?” அவனுக்கு இதைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் ஏதாவது தெரியுமா என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் கேட்டேன்.

“மசுர சொன்னாரு. அந்த ஆளு போடுற ப்ளேடு வர வர தாங்க முடியலை” ஒரு ஈயை முழுங்கிய சோகம் அனலாக அவன் வாயில் இருந்து வெளிவந்தது.

“நான் ட்ரை பண்ணி பார்க்கப் போறேண்டா”

கொஞ்சம் ஆவலோடு “யார் கிட்டே?”

“வேற யாரு. குமுதா கிட்டே தான்! என்னாம்மா சிரிக்கிறா. சுத்தமா ஃப்ளாட் ஆயிட்டேண்டா!”. அப்போது குமுதா மீது கடலளவு காதல்வசப்பட்டிருந்தேன். மீடியம் சைஸ் மெரூன் ஸ்டிக்கர் பொட்டு ஒட்டி அதற்கு கீழும், இரு பக்க வாட்டிலும் சிறிய அளவில் வெள்ளை சாந்து வைத்து டக்கராக இருப்பாள். சிகப்பு என்று சொல்லமுடியாத மாநிறம். அவளுடன் படித்த மற்ற பெண்கள் பாவாடைத் தாவணியில் வரும்போது, கொஞ்சம் புஷ்டியாக இருந்தாலும் அவள் மட்டும் பாவாடைச் சட்டை தான் போட்டிருப்பாள். அது ஏன் என்று அப்போது எனக்கு விளங்கவில்லை. சில காலம் கழித்தே அதற்கு காரணம் தெரிந்தது.

“மச்சி. சொல்றேனேன்னு தப்பா நெனைச்சிக்காதே. அது திம்சு கட்டை மாதிரி இருக்கு. நீயோ கிரிக்கெட் ஸ்டெம்பு மாதிரி இருக்கே. வேலைக்கு ஆவுமாடா!” என் பர்சனாலிட்டியை நினைத்து எனக்கே கோபம் வந்தது. இருந்தாலும் கண்ணாடியில் பார்க்கும் போதெல்லாம் என் முகம் அழகாகவே எனக்கு தெரிந்து வருகிறது. லைட்டாக டொக்கு விழுந்திருப்பதால் அழகு இல்லைன்னு ஆயிடுமா என்ன? அர்னால்டுக்கு கூடத்தான் டொக்கு இருக்கு.

“இல்லை மாமா. எனக்கு நம்பிக்கையிருக்கு. ட்யூஷன்லே கூட ஒருமுறை என்னைப் பார்த்து சிரிச்சிருக்கா!”

“சரி மச்சான். உன் நம்பிக்கைய நான் கெடுப்பானேன். அவளும் ட்யூஷனுக்கு சைக்கிள் எடுக்க வருவா இல்லே. அப்போ உன்னை திரும்பிப் பார்க்குறாளான்னு டெஸ்ட் பண்ணிப்போம். அதுக்கப்புறமா என்ன செய்யணுமோ அதை செஞ்சிப்போம்” நல்லவேளையாக ஒவ்வொரு ஹீரோவுக்கும் சின்னிஜெயந்த், விவேக் மாதிரி இதுபோல ஒரு நண்பன் அமைந்துவிடுகிறான்.

சிறிது நேரம் காத்திருந்தோம். லேடிஸ் செக்‌ஷன் கேர்ள்ஸை, பாய்ஸ் செக்‌ஷன் விட்டபிறகு ஒரு பத்துநிமிட இடைவெளி கழித்தே பாதுகாப்பு காரணங்களுக்காக அனுப்புவார்கள். புஷ்பவல்லி மேடம் இந்த விஷயத்தில் ரொம்பவும் ஸ்ட்ரிக்ட். புஷ்பவல்லி மேடத்தின் இந்த கண்டிஷன்களால் வெறுப்பானவர்கள் சில நேரங்களில் வெறுத்துப் போய் அந்த மேடத்தையே சைட் அடிப்பதும் உண்டு.

டென்ஷனில் பத்துவிரல்களில் இருந்த நகத்தையெல்லாம் கடித்தேன். கட்டைவிரலில் லேசாக இரத்தம் எட்டிப் பார்த்தது. கடிக்க நகம் இல்லாமல் வெறுப்பாக இருந்தது. கால் நகத்தை தூக்கி வைத்து கடிக்கலாமா என்று நான் எண்ணியிருந்த வேளையில் நிறைய பச்சைத் தாவணிகள் சைக்கிள் ஸ்டேண்ட் நோக்கி வந்தார்கள். என்னோட ஆளைத் தவிர எல்லா மொக்கை பிகர்களும் வந்து சைக்கிளை உருட்டிக் கொண்டு போனார்கள்.

தூரத்தில் என்னோட ஆளு ஸ்டைலாக நடந்து வந்து கொண்டிருக்கிறாள். புத்தகப்பையை மார்போடு அணைத்துக் கொண்டு.. கண்ணில் பட்டையாக மை வைப்பது அவளது ஸ்பெஷாலிட்டி. புருவம் ட்ரிம் செய்யப்பட்டிருந்தது. இமைகளுக்கு இருபுறமும் லேசாக மையை இழுத்து விட்டிருந்தாள். நேராக வந்து சைக்கிளை எடுத்தவள் இரண்டு பேர் அவளுக்காக நின்று கொண்டிருந்ததை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. தமிழய்யா சொன்னது நினைவுக்கு வந்தது

“அவளுக்கு புடிச்சிருந்தாலும் உன்னை நிமிர்ந்து பார்க்க மாட்டா.. உனக்கு தெரியாமலேயே உன்னை ஓரக்கண்ணாலே எப்படியோ பார்த்துடுவா.. ”

சைக்கிளை ரிவர்ஸ் எடுத்தவள், அப்படியே சீட்டில் உட்கார்ந்து ஃபெடலை மிதிக்க ஆரம்பித்தாள். கொஞ்சம், கொஞ்சமாக என்னை விட்டு விலகிச் சென்றவள் திரும்பிப் பார்ப்பாளா என்று ஏக்கத்தோடு அவளையே இமைகொட்டாது பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் சில அடிகளில் திருப்பம் வந்து விடும். திரும்பி விட்டால் தீர்ந்தது.. செந்தில் வேறு கிண்டல் செய்வான். வெறுப்பில் சட்டென்று என் சைக்கிள் பெல்லை இருமுறை அடித்தேன்.

திருப்பத்தில் திரும்புவதற்கு முன்பாக குமுதா சட்டென்று ஒரே ஒரு நொடி என்னை திரும்பிப் பார்த்து மறைந்தாள். அந்த ஒர் நொடியில் அவள் என்னைப் பார்த்து புன்னகைத்தது போல எனக்குப் பட்டது. ”ஆஹா.. இதற்காகத்தானே காத்திருந்தாய் திருக்குமரா” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு, “மச்சான்.. பார்த்துட்டாடா... சக்ஸஸ்!! சக்ஸஸ்!!” என்று கத்தினேன்.

“போடாங்.. பெல் அடிச்சா பொண்ணு என்னா, கிழவி, எருமை, ஆடு, நாயி எல்லாம் தாண்டா திரும்பிப் பார்க்கும்” மேலே இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்த நான் திடீரென்று இறக்கைகள் மறைந்து போனதை போல தடாலென்று கீழே விழுந்தேன்.


தன்பின் பல சந்தர்ப்பங்களில்.. டியூஷனில், ஐயப்பன் கோயிலில், கிரவுண்டில், மாணவர் தேர்தலுக்கு ஓட்டு கேட்க சென்ற நேரத்தில் என்று பல இடங்களில் அவளை பார்த்து, அவள் என்னை திரும்பிப் பார்க்கிறாளா என்று ஏங்கி, ஏங்கி ஏமாற்றம் அடைந்தேன். ஒருவேளை ஸ்கூல் யூனிபார்மில் என் பர்சனாலிட்டி கம்மியாக இருப்பதால் தான் அவள் என்னைப் பார்க்கவில்லையோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது.

செந்தில் உட்பட யாருக்கும் சொல்லாமல் ஒரு விடுமுறை நாளில் அவளை அவள் வீட்டருகே பார்த்து, என்னை திரும்பிப் பார்க்க செய்ய வேண்டுமென்று திட்டமிட்டேன். நான் முகூர்த்தம் குறித்து வைத்திருந்த ஒரு ஞாயிறும் வந்தது. டார்க் ப்ளூ ஜீன்ஸ் பேண்ட், பூனை படம் போட்ட ஒரு ஸ்கை ப்ளூ டீஷர்ட், பச்சைக்கலர் கூலிங் கிளாஸ் சகிதமாக அன்று காலை சீக்கிரமே சுறுசுறுப்பாகிவிட்டேன். ட்யூஷனுக்கு கிளம்புவதாக சொல்லி, சும்மா ஃபிலிமுக்காக ஒரு ரஃப் நோட்டை கையில் எடுத்துக் கொண்டு, என் பி.எஸ்.ஏ. சைக்கிளை கிளப்பினேன்.

அவளை பல மாதங்களாக பின் தொடர்ந்ததில் நான் அறிந்துகொண்ட விஷயங்கள் பல. விடுமுறை நாட்களில் காலை பத்து மணி வாக்கில் அவள் தெருமுனையில் இருந்த கைப்பம்பில் தண்ணீர் இறைத்துப் போக வருவாள். எனவே ஒன்பதே முக்காலுக்கெல்லாம் அந்த கைப்பம்புக்கு இருபத்தி ஐந்து அடி தூரத்தில் நான் ஆஜர். வேண்டுமென்றே சைக்கிள் செயினை கழட்டிவிட்டு, அதை மாட்டுவது போல நடித்துக் கொண்டிருந்தேன். இதைத்தவிர வேறு டெக்னிக் எதுவும் எனக்குத் தெரியாது. வெட்டியாக சைக்கிளோடு நின்று கொண்டிருந்தால் போவோர், வருவோர் தவறாக நினைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. இமேஜ் ரொம்ப முக்கியம்!!

பத்துமணிக்கு ஐந்து நிமிடங்கள் முன்பாகவோ அல்லது பின்பாகவோ குமுதா குடத்துடன் வந்தாள். எப்போதும் யூனிஃபார்மில் பார்த்தவளை வண்ண ஆடையில் பார்த்தபோது, இன்னமும் கூட கொஞ்சம் கவர்ச்சியாக, அழகாக தெரிந்தாள். பாவாடை சட்டையில் பார்த்தவளை சுடிதாரில் பார்த்ததுமே என் காதலின் அளவு சென்னை வெயிலை போல எல்லை தாண்டிப் போனது. குமுதாவுடன் அச்சு அசலாக அவள் போலவே, அவளை மினியேச்சர் செய்து வைத்தது போல இன்னொரு பெண்ணும் வந்தாள். அவளுடைய தங்கையாக இருக்கலாம். ம்ம்... மச்சினிச்சியும் சூப்பரா தான் இருக்கா!

அவள் தண்ணி அடித்துக் கொண்டிருக்க, என் மனமோ கூட்ஸ் வண்டி மாதிரி தடதடவென அடித்துக் கொண்டிருந்தது. சைக்கிள் செயினை மாட்டி சும்மாவாச்சுக்கும் பெடலை சுற்றி சுற்றி விளையாடிக் கொண்டிருந்தேன். குமுதா என்னை கண்டுகொண்டது போல தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்தேன்.

தண்ணீர் பிடித்தவுடன் இருவரும் கிளம்பினார்கள்.

“திரும்பிப் பாருடி.. திரும்பிப் பாருடி.. திரும்பிப் பாருடி.. திரும்பிப் பாருடி..“ ஸ்ரீராமஜெயம் மாதிரி நூற்றியெட்டு முறை எனக்கு மட்டும் கேட்பது போன்ற சன்னமான குரலில் சொல்லிக் கொண்டே இருந்தேன். ம்ஹூம்..

தெருமுனைக்கு அவள் போய்விட்டாள். இதுக்கு மேல சான்ஸே இல்லை என்று நொந்துப்போய் கடைசியாக ஒரு முறை அவளைப் பார்த்தபோது.. அட திரும்பிப் பார்த்தாள்(கள்)! கண்களை கசக்கி, கையை கிள்ளி விட்டு மீண்டும் பார்த்தேன். மெய்தான்!! பார்த்தது மட்டுமல்ல, அக்கா - தங்கை ரெண்டு பேரும் காதலோடு (!) லைட்டாக சிரித்ததுபோலவும் இருந்தது. “சண்டேன்னா ரெண்டு!” என்பது இதுதானோ? கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு ரெட்டிப்பா கொடுக்கும்ணு சொல்வாங்களே? அய்யோ.. அய்யோ.. சொக்கா.. சொக்கா.. என்ன சொல்றதுன்னே தெரியலையே!! தமிழய்யா வாழ்க!!

“உன்னை புடிச்சிருந்தா கட்டாயம் திரும்பிப் பார்ப்பா.. மனசுக்கு பிடிச்சவனை மட்டும் தான் ஒரு பொண்ணு திரும்பிப் பார்ப்பா..”

Read more...

நக்சல்கள் - அரசுத் தரப்பு நிலை!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!
ஐந்தாம் பாகம் : பீகார் ஜெயில் தகர்ப்பு!
ஆறாம் பாகம் : அழித்தொழிப்பு!
ஏழாவது பாகம் : தமிழ் நக்சலைட்டுகள்!
எட்டாவது பாகம் : நக்சல் தரப்பு நியாயங்கள்!

நக்சல்களை ஒரேயடியாக அரசாங்கம் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. நக்சல்பாரிகளும் மக்களுக்காக தான் போராடுகிறார்கள். ஆனால் அவர்களது அழித்தொழிப்பு வகையிலான வன்முறைகளை சட்டத்தின் பேரில் நாட்டை ஆளும் அரசாங்கத்தால் எந்நாளும் ஏற்றுக் கொள்ள இயலாது. மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தான் நக்சல்கள் மீது அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்க முடிகிறது. நக்சல் பிரச்சினையை முள் மீது விழுந்த சேலையாக அரசாங்கம் பார்க்கிறது.

நக்சல் குழுக்கள் குறிப்பாக நிலம் மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை கையில் எடுத்துக்கொண்டே தங்கள் வழியில் போராடுவதாக சொல்லிக் கொள்கிறார்கள். நக்சல்களின் கோரிக்கையான ஒரு திட்டத்தை நாங்கள் செயல்படுத்தினாலும் கூட நக்சல்கள் அதை எதிர்பார்ப்பார்கள் என்று அரசு சொல்கிறது. அதாவது அரசு எதை செய்தாலும் அதை எதிர்ப்பதே நக்சல்பாரிகளின் கொள்கையாக மாறிவிட்டது என்பது அரசு தரப்பு பேசும் நியாயம்.

சமத்துவம், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி, சுதந்திரம், வேலைவாய்ப்பு, மக்களின் தனிப்பட்ட மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு என்று அரசு தினம் தினம் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம். இத்துறைகளில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களால் ஒட்டுமொத்த நூற்றி இருபது கோடி இந்தியர்களையும் திருப்தி படுத்துவது மிகக்கடினம். இப்படிப்பட்ட நிலையில் நக்சல்களையும் சமாளிப்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது.

மக்கள் பணத்தை மக்களுக்காக செல்வழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் வரியாக பெறப்படும் பகுதியை ஏழைமக்களுக்கான திட்டங்களுக்காக தான் அரசு பெரும்பாலும் செலவழித்து வருகிறது. உதாரணத்துக்கு சமீபத்தில் கூட மத்திய அரசு ரூபாய் 2,475 கோடியை நக்சல்கள் ஆதிக்கத்திலிருக்கும் பின் தங்கிய 55 மாவட்டங்களுக்கு ஒதுக்கியிருக்கிறது. இப்பணம் ராஷ்டிரிய சாம்விகாஸ் யோஜனா திட்டத்தின் மூலமாக இம்மாவட்டங்களுக்கு ஆண்டுக்கு 15 கோடி என்ற அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.

இது போன்ற திட்டங்கள் மூலமாக பின் தங்கிவிட்ட பகுதிகளில் வாழும் மக்களிடையே சமூகரீதியான வளர்ச்சியை ஏற்படுத்த அரசு தொடர்ந்து பணியாற்றிக் கொண்டுதானிருக்கிறது. நக்சல்களின் வன்முறைப் போராட்டங்கள் இல்லாவிட்டால் எந்த இடையூறுமின்றி மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி வளர்ச்சியடையச் செய்ய முடியும். நக்சல்கள் மக்களுக்காக போராடுபவர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் வன்முறை தான் ஆயுதம் என்று சட்டத்தை அவரவர் வசதிக்கு கையில் எடுத்துக்கொண்டால் பாதிக்கப்படப்போவது மக்கள் தான்.

இந்தியாவில் 9 மாநிலங்களில் ஏறத்தாழ 76 மாவட்டங்களில் நக்சல்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இம்மாநிலங்களில் ஏழை மற்றும் பழங்குடி மக்களை மூளைச்சலவை செய்து ஆயுதமேந்த வைக்கிறார்கள். எந்த தொடர்பும் இல்லாவிட்டாலும் கூட நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் மாவோயிஸ்டுகளை சொந்தம் கொண்டாடுகிறார்கள். அரசு மற்றும் சட்டங்களை மதிக்காமல் எதற்கெடுத்தாலும் ஆயுதங்களை தூக்குகிறார்கள். ஆயினும் அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இல்லை. நக்சல்பாரிகளின் தாக்குதல் பொதுவாக காவல்துறை மீதே அதிகமாக இருக்கிறது.

நக்சல்பாரிகளின் பிரச்சினைகளை அந்தந்த பிராந்திய சூழலுக்கேற்பவே கையாள வேண்டியிருக்கிறது. மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான சரியான புரிந்துணர்வு இப்பிரச்சினையை வென்றெடுக்க அவசியமாகிறது. பல பிராந்தியங்களின் கூட்டமைப்பு ஒரே அமைப்பாக இயங்கிவரும் நம் நாட்டில் சட்டத்தை காப்பது இன்றியமையாததாக இருக்கிறது. தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரனாகி சட்டமீறல்கள் ஆங்காங்கே நடைபெறுமென்றால் இந்தியாவின் ஒற்றுமை, நிலைத்தன்மை, ஜனநாயகம் ஆகியவை கேலிக்கூத்தாகி விடும். நக்சல்பாரிகளை அடக்க இந்திய மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

1) மாநில காவல்துறையை நவீனமயமாக்க வேண்டியது நக்சல்களை ஒடுக்க அவசியமாகிறது. கட்டமைப்பு, தொலைத்தொடர்பு, நவீனரக ஆயுதங்கள் என்று காவல்துறைக்கு அரசு வழங்கி வருகிறது.

2) உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை அவ்வப்போது கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

3) மத்திய பாரா ராணுவவீரர்களை நக்சல் பாதிப்பு பகுதிகளில் ரோந்து சுற்ற வைக்கிறது.

4) மத்திய ரிசர்வ் போலிசார் பணிக்கு நிறைய ஆட்களை தேர்ந்தெடுத்து அவர்களை நவீன ஆயுதங்களோடு நக்சல் பாதிப்பு பகுதிகளுக்கு பணிக்கு அனுப்புகிறது.

இவையெல்லாம் பாதுகாப்புரீதியாக மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள். சமூகநீதி, சமூக பொருளாதார வளர்ச்சி போன்ற ரீதியில் பார்க்கப் போனால் கீழ்க்கண்ட சில நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.

1) நிலச்சீர்த்திருத்தங்களை கண்டிப்பான முறையில் அமல்படுத்துதல்

2) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை நிறுவுதல்

3) உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக ஊழலற்ற, மக்கள்நல நிர்வாகம்

4) மத்திய - மாநில அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக அடித்தட்டு மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்துதல்

மக்களை மட்டுமன்றி இல்லாமல் நக்சல்பாரிகளையும் கருணைப்பார்வையோடு தான் அரசுகள் பார்க்கின்றன. மத்திய உள்துறை அமைச்சகம் நக்சல்பாரி போராளிகளுக்காக அறிவித்திருக்கும் ‘சரணடைதல் மற்றும் மறுவாழ்வு’ திட்டம் மூலமாக போராளிகளும் திருந்தி சராசரி குடிமகன்களாக வாழும் வாய்ப்பிருக்கிறது. இத்திட்டம் மாநில அரசுகள் மூலமாக நக்சல்பாரி குழுக்களில் இருந்து வெளிவருபவர்களுக்காக செயல்படுத்தப்படுகிறது.

சமீபத்தில் கூட ஜார்க்கண்ட் மாநில அரசாங்கம் இத்திட்டத்தின் மூலமாக சில சலுகைகளை முன்னாள் நக்சல்பாரிகளுக்கு வழங்கியது. மாத உதவித்தொகை ரூ.2000, ரூ.10 லட்சத்துக்கான ஆயுள் காப்பீடு, இரண்டாண்டு தொழிற்கல்வி, ஒரு ஏக்கர் விவசாய நிலம், போராளிகளின் குடும்ப குழந்தைகளுக்கு இலவசக்கல்வி என்று ஏராளமான சலுகைகள் குழுக்களில் இருந்து வெளிபவர்களுக்கு அள்ளித் தெளித்தது.

இதுபோன்ற திட்டங்கள் மூலமாக நக்சல் பிரச்சினையை அடக்கிவிட முடியும் என்று அரசு நம்புகிறது. நக்சல்களின் தீவிரம் குறைந்திருப்பதாகவே அரசு தெரிவிக்கிறது. கடந்த காலங்களில் நாடெங்கும் 510 காவல் நிலையங்கள் நக்சல் அபாயத்தில் இருந்ததாகவும், கடந்தாண்டு அது 372 ஆக குறைந்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. சரணடைய விரும்பும் நக்சல்பாரி போராளிகளை கருணையோடு நடத்துவதால் நக்சல் குழுக்கள் பலவீனமடைந்து போராளிகள் சராசரி வாழ்வுக்கு திரும்புவார்கள் என்று அரசு நம்புகிறது.

(அடுத்த பாகத்தோடு முடிகிறது)

Read more...

அடிக்கடி தொலையும் ‘அந்த’ மேட்டர்!

November 13, 2009


கந்தனுக்கு ரயிலுக்கு நேரம் ஆகிக்கொண்டே போகிறது. தேடிக்கொண்டேயிருக்கிறான். எங்கேதான் போயிருக்கும்? ச்சே.. தம்மாத்தூண்டு மேட்டரு, இதைப் போயி அடிக்கடி தொலைக்கிறோமே என்று அவனை அவனே நொந்துகொண்டான். அவன் குட்டிப்பையனாக இருந்தபோது அடிக்கடி இதை தொலைத்துவிட்டு அம்மாவிடம் அடிவாங்குவானாம். இன்னும் கூட வீட்டுக்கு வரும் சொந்தக்காரர்களிடம் சொல்லி சிரித்து மானத்தை வாங்குகிறார் அம்மா.

”போனமாசம் தான் வாங்கியது. புத்தம்புதுசு. அதைப் போய் தொலைத்துவிட்டேனே? எனக்கு பொறுப்பேயில்லை” மனதுக்குள் பேசியவாறே தேட ஆரம்பித்தான். இது அடிக்கடி தொலைந்து போகிறது என்று நண்பர்களிடம் சொன்னால் வாய்விட்டு சிரிப்பார்கள். “இதைப்போயி ஏண்டா கழட்டுறே? அப்படியே போட்டுக்கிட்டிருக்க வேண்டியது தானே?” என்பார்கள். அவர்களுக்கென்ன தெரியும்?

24 மணி நேரமும் அதை போட்டுக் கொண்டிருந்தால் அரிக்காதா? சொறிந்து சொறிந்து சிவந்து விடுகிறது. சில நேரங்களில் புண்ணும் ஆகிவிடுகிறது. சூரிய வெளிச்சம் படாமல் அந்தப் பகுதியின் நிறமே வெளிர்நிறமாய் மாறிவிடுகிறது. காற்றாவது படட்டும் என்றுதான் இரவுவேளைகளில் மட்டும் கழட்டிவிடுகிறான் கந்தன். அதுபோல கழட்டுவது பிரச்சினையில்லை, காலையில் எழுந்ததுமே அதை எங்கே கழட்டி வைத்தோம் என்பதை மறந்துவிடுவது தான் அவனது பிரச்சினை.

அய்யோ. ரயிலுக்கு நேரம் ஆகிறது. இன்னும் ஐந்து நிமிடத்தில் கிளம்பிவிட வேண்டும். அதற்குள் கிடைத்துவிடாதா?

நேற்று இரவு 12 மணிக்கு அறைக்கு வந்தேன். லைட்டுக்கு ஸ்விட்ச் போட்டேன். சட்டையை கழட்டினேன். பேண்டை கழட்டினேன். லுங்கி எடுத்து மாட்டிக் கொண்டேன். அதன்பிறகு தான் ‘அதை' கழட்டி இருக்க வேண்டும். வழக்கமாக அதுதான் நடக்கும். கழட்டி பொதுவாக எங்கே வைப்பேன்? டேபிள் மேல் வைப்பேன்? இல்லை தம் அடிக்க அந்த வேளையில் பாத்ரூமுக்கு போனால் பாத்ரூமில் சோப்பு பெட்டி வைக்கும் இடத்துக்கு அருகில் ஓரமாக வைத்திருப்பேன். அங்கேயும் காணோமே? எங்குதான் போயிருக்கும். சரி நேரம் ஆகிவிட்டது. ஊருக்கு போகவேண்டியதுதான். ஒரு வாரம் கழித்து வந்து ஓய்வாக தேடிக்கொள்ளலாம். பையை எடுத்துக் கொண்டு கந்தன் கதவை சாத்திக் கொண்டு அவசர அவசரமாக கிளம்பினான்.

கந்தன் தேடிக்கொண்டிருந்த அந்த சிகப்புக்கல் மோதிரம் கட்டிலுக்கு கீழே கிடந்தது.

Read more...

ஓட்டம்னா ஓட்டம், அப்படி ஒரு ஓட்டம்!

November 12, 2009

எச்சரிக்கை : இப்பதிவின் தலைப்பை யாரும் எம்.ஜி.ஆர் பாணியில் படித்துத் தொலைத்துவிட வேண்டாம்.

பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. அப்போது +2 படித்துக் கொண்டிருந்ததாக நினைவு. எங்கள் வீடு மெயின்ரோட்டில் இருந்து சிறிய சந்துக்குள் அமைந்திருந்தது. மெயின்ரோட்டில் எங்கள் வீட்டுக்கு முன்பாக ஒரு கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் அலுவலகம். அதற்கு பக்கத்தில் பூசாரிவீடு. பூசாரி வீட்டுக்கு அடுத்ததாக மிஷின்காரம்மா வீடு. அவர்கள் வீட்டுக்கு முன்பாக கடையில் வாடகைக்கு ஒரு ஒயின்ஷாப்பும், பாரும் இருந்தது.

அவ்வப்போது குடிகாரர்கள் குடித்துவிட்டு கலாட்டா செய்வது சுவாரஸ்யமாக இருக்கும். சில குடிகாரர்கள் போதையில் விசில் அடித்துக்கொண்டே வீட்டுக்கு செல்வார்கள். சிலபேர் உரத்தக் குரலில் பழைய பாடல்களை பாடியபடியே தள்ளாடியபடியே நடப்பார்கள். இன்னும் சிலரோ போதையில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு தெருவில் புரள்வார்கள். சில பேர் பச்சை பச்சையாக எதிரில் இல்லாத எதிரி எவனையாவது திட்டியபடியே நடப்பார்கள். என் பெரியப்பாவும் அந்த பாரில் அவ்வப்போது 'கட்டிங்' விட்டு திராவிட இனமான வரலாறு சொல்ல ஆரம்பிப்பார். தினம் தினம் ஜாலியான கண்காட்சி தான். தெருப்பெண்கள் இரவு ஏழுமணிக்கு மேல் அந்தப்பக்கமாக செல்லமாட்டார்கள். குடிகாரர்கள் யாரும் பெண்களிடம் தவறாக நடந்துகொள்வதில்லை என்றாலும் பெண்களுக்கு குடிகாரர்களை பார்த்தாலே வெறுப்பு.

ராதிகா நடித்த சித்தி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அப்பா சித்தி ரசிகர். எம்.ஆர்.ராதா எங்களுக்கு தூரத்து உறவினர் என்பதால் ராதிகா நடித்த படம், சீரியல் எதையும் வீட்டில் விட்டு வைப்பதில்லை. எங்கள் வீடே 'சித்தி'யை பார்த்துக் கொண்டிருக்க, நான் குமுதத்தின் நடுப்பக்கத்தை அரைமணி நேரமாக ரசித்துக் கொண்டிருந்தேன். பிற்பாடு +2 பெயிலான பிறகு நடுப்பக்கத்தை மட்டும் அப்பா 'சென்சார்' செய்து கிழித்து தந்ததுண்டு :-(

ஒயின்ஷாப்பில் பாட்டில்கள் உடையும் சத்தமும், 'ஆய்.. ஊய்' என்று பலமான சத்தமும் கேட்டது. சித்தியில் மூழ்கியிருந்ததாலும், ஒயின்ஷாப்பில் வழக்கமாக கலாட்டாக்கள் நடந்தவண்ணம் இருந்ததாலும் யாருக்கும் அதில் ஆர்வமில்லை. நான் மட்டும் கதவைத் திறந்துகொண்டு சென்று பார்த்தேன். பக்கத்து பூசாரிவீட்டு காம்பவுண்டை எகிறிக் குதித்து இரண்டு பேர் எங்கள் வீட்டை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தார்கள். இருவர் கையிலும் உடைக்கப்பட்ட பீர் பாட்டில் முனைகள் கூர்மையாக பளபளத்தது. ஒருவனின் சட்டை முழுக்க இரத்தம். அவர்கள் ஓடிவருவதை கண்டதுமே யாரோ துரத்தி வருகிறார்கள் என்பது புலப்பட்டது. எப்படியும் எங்கள் வீட்டில் தான் பாட்டில்முனையில் கட்டாய அடைக்கலம் அடையப் போகிறார்கள் என்று தெரிந்தது. துரத்துவது போலிசாக இருந்தால் எங்களுக்கு தேவையில்லாத பிரச்சினை வரும்.

வேகமாக ஓடிவந்து கதவை மூடி தாளிட்டேன். அப்பாவும், அம்மாவும் வித்தியாசமாக பார்த்தார்கள். உள்ளறைக்கு ஓடி, மரம் வெட்டும் இரண்டு அடி நீள கத்தியை (சாணை பிடிக்காமல் மொக்கையாக இருந்தது) எடுத்துக் கொண்டு கதவுக்கு அருகில் ஓடிவந்து நின்றேன். எங்கள் வீட்டு காம்பவுண்டை அவர்கள் எகிறிக் குதிக்கும் சத்தம் கேட்டது. நான்கைந்து நொடிகளில் கதவை நெருங்கி விடுவார்கள். "த்தா.. ங்கொம்மா.. வெட்டிடுவேன்.. குத்திடுவேன்" என்று பீதியில் வெறிக்கூச்சல் இட்டவாறே கத்தியை தரையில் சரக் சரக்கென இழுத்து பயங்கர சத்தம் எழுப்பினேன். கதவுக்கு அருகில் வந்தவர்கள் உள்ளே ஒரு 'பெரிய ரவுடி' இருக்கக்கூடும் என்று நினைத்திருக்கலாம். அல்லது பதட்டத்தில் உள்ளே எழுந்த கூச்சல் அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். குழம்பிப் போனவர்கள் எங்களது பின்வாசல் கேட்டை எகிறிக் குதித்து ஓட ஆரம்பித்தார்கள்.

அவர்கள் ஓட ஆரம்பித்ததுமே எனக்கு தெம்புவந்துவிட்டது. கதவை திறந்துகொண்டு அவர்களை கத்தியோடு துரத்த ஆரம்பித்தேன். வெற்றுடம்பு. வீட்டில் இருக்கும்போது சட்டையோ, உள்பனியனோ போடுவதில்லை. கேட்டை தாண்டி ஓட ஆரம்பிக்கும்போது 'லுங்கி' தடையாக இருந்தது. அதை அவிழ்த்து தூக்கியெறிந்துவிட்டு 'டாண்டெக்ஸ்' ஜட்டியோடு அவர்களை வெறியோடு துரத்தினேன். மூன்று பெரியப்பா வீடுகளும் எங்கள் வீட்டுக்கு அருகருகே இருந்தது. எங்கள் வீட்டிலிருந்து வந்த வினோத சத்தத்தை கேட்டவர்களும் துணுக்கிட்டிருக்கிறார்கள். பெரிய பெரியப்பாவின் மகன் என்னவென்று பார்க்க சாலைக்கு வந்தபோது தம்பி ஜட்டியோடு கத்தியை எடுத்துக்கொண்டு இருவரை துரத்துவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். என்ன ஏதுவென்று தெரியாத அவரும் அந்த 'இருவரை' துரத்த ஆரம்பித்தார். உண்மையில் அவர்களை ஏன் கத்தியோடு துரத்தினேன் என்று எனக்கும் அப்போது தெரியாது.

குடிகாரர்கள் இருவர் மூச்சுவாங்க முன்னால் ஓட.. அவர்களை துரத்தியவாறே நாங்கள் இருவரும் பின்னால் ஓட.. ஒன்றும் புரியாமல் எங்கள் குடும்பத்தார் ஒட்டுமொத்தமாக ரோட்டுக்கு வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். என் அண்ணனாவது சைலண்டாக ஓடிவந்தார். நானோ அபோகலிப்டோ வேட்டை ஸ்டைலிலும், அப்பாச்சே செவ்விந்தியர்கள் ஸ்டைலிலும் ஆய்.. ஊய்.. என்று கொடூர சத்தம் எழுப்பியவாறே துரத்தினேன். துரத்தப்பட்டவர்கள் மடிப்பாக்கம் பஸ் நிலையத்துக்கு அருகிலிருக்கும் குளத்துக்குள் நுழைந்து ஓட ஆரம்பித்தார்கள். குளத்தை தாண்டினால் அவர்கள் ஊருக்குள் தப்பி ஒளிவது எளிது. ஓட்டம்.. ஓட்டம்.. மரண ஓட்டம்.. அந்த அளவுக்கு வேகமாக வெறிநாய்கள் துரத்தியபோது கூட நான் ஓடியதில்லை. என்னைவிட என் அண்ணன் வேகமாக ஓடினார். முன்னால் ஓடிக்கொண்டிருந்தவர்களை கிட்டத்தட்ட அவர் நெருங்கிய வேளையில், அவர்களில் ஒருவன் சடன் பிரேக் போட்டு திரும்பி உடைந்த பாட்டிலை காட்ட இருவரும் திகிலடித்துப் போனோம். நோஞ்சான்களாக இருவர் இவ்வளவு தூரம் அவர்களை துரத்திவந்தது குறித்து அவன் கருடகர்வ பங்கம் பட்டிருக்க வேண்டும். "அப்படியே திரும்பி ஓடுங்கடா... முன்னாடி ஸ்டெப் வச்சா இறக்கிடுவேன்" என்று பாட்டிலை குத்துவது போல காட்ட..

முன்னால் ஓடிய வேகத்திலேயே அப்படியே அபவுட் டர்ன் போட்டு திரும்பி பின்னால் ஓட ஆரம்பித்தோம். அந்த குடிகாரர்கள் காரிய மண்டபம் பக்கமாக ஓடி ஒளிந்து எஸ்கேப் ஆனார்கள். திரும்பி ஓடிவரும்போது அண்ணன் கேட்டார். "எதுக்குடா அவனுங்களை கையில கத்தியோட துரத்துனே?". என்ன பதில் சொல்லுவதென்றே தெரியவில்லை. அவர்களை துரத்த வேண்ட அவசியம் எதுவுமில்லாமலேயே துரத்திக்கொண்டு ஓடியிருக்கிறேன். "தெரியலையே!" என்று சொன்னபோது மண்டையில் நங்கென்று குட்டினார். மேலதிக விசாரணைகளுக்கு அப்புறம் தான் தெரிந்தது. அந்த ரெண்டு பேரும் குடிபோதையில் ஒயின்ஷாப் மாடியில் இருந்து தெருவில் பாட்டில் விட்டிருக்கிறார்கள். அவர்களது போதாதநேரம் ரோந்துவந்த போலிஸ் ஜீப் ஒன்றின் மீதே பாட்டில் விழுந்து உடைந்திருக்கிறது. போலிஸ் துரத்த, இந்த அப்பாவிகள் தப்புவதற்காக எங்கள் வீட்டுப் பக்கமாக ஓடிவந்திருக்கிறார்கள்.

வீட்டு வாசலில் நின்றிருந்த அப்பா சொன்னார். "நல்லா சவுண்டு உடறே. அரசியலுக்கு போனா அசத்திடுவே!". அதுவரை ஓ.வில் ஆரம்பிக்கும் ஸ்லோகத்தையெல்லாம் என் வாய் உச்சரிக்கும் என்பது என் வீட்டுக்கு தெரியவே தெரியாது. என்னோடு அந்த குடிகாரர்களை துரத்தி வந்த எனது அண்ணன் இப்போது அரசியல்வாதி.

Read more...

நக்சல் தரப்பு நியாயங்கள்!

முதல் பாகம் : துப்பாக்கிக் குழாயில் அரசியல் அதிகாரம்!
இரண்டாம் பாகம் : வசந்தத்தின் இடிமுழக்கம்!
மூன்றாம் பாகம் : இடியுடன் கூடிய மழை!
நான்காம் பாகம் : மழைக்குப் பின் புயல்!
ஐந்தாம் பாகம் : பீகார் ஜெயில் தகர்ப்பு!
ஆறாம் பாகம் : அழித்தொழிப்பு!
ஏழாவது பாகம் : தமிழ் நக்சலைட்டுகள்!


ஒரு இயக்கம் திடீரென்று ஒரே நாளில் நேற்று பெய்த மழையில் இன்று முளைக்கும் காளானைப் போல தோன்றிவிடுவதில்லை. நக்சல்பாரிகளின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் 1960 காலக்கட்ட நாட்டு நடப்போடு பொருத்திப் பார்த்தோமானால் அந்த இயக்கம் தோன்றியிருக்க வேண்டியதின் அவசியத்தையும் உணரமுடியும்.

எந்த ஒரு நாட்டிலுமே அரசினை எதிர்க்கக் கூடிய மக்கள் இருக்கவே செய்கிறார்கள். அம்மக்களது அன்றாடத் தேவைகள் கூட அவர்களை ஆளும் அரசாங்கங்களால் நிறைவேற்றி வைக்கப்படாத நேரங்களில் அரசினை எதிர்த்து கலகக்குரல் எழுப்புகிறார்கள். முன்னேறிய பல நாடுகளில் கூட இதுபோன்ற புரட்சியாளர்களை காணமுடியும். எல்லாத் தரப்பு மக்களையுமே அரசாங்கங்களால் திருப்திபடுத்திவிடக் கூடிய சாத்தியம் இருக்கிறதா என்பது ஆராயக்கூடிய கேள்வி. வளர்ந்த நாடாக மாறிக்கொண்டிருக்கும் இந்தியாவில் சில தரப்பு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது நமக்கு கண்கூடாகவே தெரிகிறது. எனவே இங்கே புரட்சிக்குரல் எழுந்ததில் எந்த ஆச்சரியமுமில்லை.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்கா கண்டங்களில் புரட்சிகர சிந்தனைகளை வழிதொடர்பவர்கள் அதிகரிக்கிறார்கள். காரல் மார்க்ஸின் சிந்தனைகளை தேடி, தேடி வாசிக்கிறார்கள். சமுதாய நலனுக்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்ய மனதளவில் தயாராகிறார்கள். கம்யூனிஸம் மக்கள் மனங்களில் ஒரு மதமாகிறது. இந்த மனப்பான்மை வியட்நாமில் எதிரொலித்து புரட்சி மலர்கிறது, அமெரிக்காவை வியட்நாமிய கொரில்லாக்கள் ஓட ஓட விரட்டுகிறார்கள்.

ஐரோப்பாவில் மாணவர்களின் அடக்குமுறைகளுக்கு எதிரான தொடர்போராட்டங்கள், பொலிவியக் காடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போர் தொடுத்து உயிரிழந்த சேகுவேரா, சீனாவில் மாசேதுங்கின் கலாச்சாரப் புரட்சி என்று உலகளாவிய செய்திகளாலும், 1940களின் இறுதியில் ஆந்திராவில் நடந்த தெலுங்கானா போராட்டங்களாலும் தாக்கத்துக்கு உள்ளானவர்கள் மனதில் ‘புரட்சி' நீறுபூத்த நெருப்பாக உறங்கிக் கிடந்தது. இவையெல்லாம் மனரீதியாக இந்திய விவசாயிகளையும், பாட்டாளிகளையும் புரட்சிக்கு தயார் செய்துவந்தன.

இமயம் முதல் குமரி வரை இந்தியாவில் சுரண்டப்பட்ட விவசாயிகளும், பாட்டாளிகளும் தங்களை காக்க ஒரு தேவமைந்தன் வரமாட்டானா என்று ஏங்கிக் கொண்டிருந்தார்கள். சினிமாக்களில் கதாநாயகன் விவசாயியாக, தொழிலாளியாக நடித்து வில்லன்களான பண்ணையார்களையும், தொழில் அதிபர்களையும் தட்டிக்கேட்டு, அடித்து உதைத்தபோது சந்தோஷமாக கைத்தட்டி ரசித்தார்கள். அதே வேலையை ஒரு அமைப்பு செய்கிறது என்றபோது ஒவ்வொருவரும் ஆயுதம் ஏந்தி அந்த அமைப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். தனிமனிதனாக அதிகார வர்க்கத்தை யாரும் எதிர்க்க முடியாது என்பதை உணர்ந்தவர்கள் நக்சல்பாரியாக மாறி அமைப்புரீதியாக இயங்கத் தொடங்கினார்கள்.

மார்க்சிஸம் - லெனினிஸம் - மாவோயிஸம், இந்த மூன்று முப்பெரும் சிந்தனைகளின் அடிப்படையிலேயே நக்சல்பாரிகளின் கொள்கைகள் கட்டமைக்கப்படுகிறது. காரல்மார்க்ஸின் சிகப்புச் சிந்தனைகளை செயலாக்கிக் காட்டியவர் ரஷ்யாவின் லெனின். லெனினுக்கு பின்பாக இச்சிந்தனைகளை ஆயுதவழியிலும், ஏனைய வழிகளிலும் சீனாவில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியவர் மாவோ என்று கம்யூனிஸ்ட்களால் அழைக்கப்படுகிற மாசேதுங்க்.

மாவோயிஸ்ட்டுகள் என்று சொல்லப்படும் நக்சல்பாரிகள் பின்பற்ற விரும்புவது மாசேதுங்கையே. மாசேதுங் சீனாவில் வெற்றிகரமாக செயல்படுத்திய ‘மக்கள் போர்' தான் மாவோயிஸ்டுகளின் குறிக்கோள். மக்களுக்கான உரிமைகளை மக்களே ஆயுதம் தாங்கி, கொரில்லா போர் முறையில் வென்றெடுப்பது தான் மாவோயிஸ்டுகள் வரையறுக்கும் புரட்சி. இந்திய நக்சல்பாரிகளின் நதிமூலமாக போற்றப்படும் சாருமஜூம்தாரின் மொழியில் சொன்னால், “துப்பாக்கி முனையில் மக்களுக்கான அதிகாரம்!”

“ஓட்டுப் போடாதே, புரட்சி செய்!” என்பது நக்சல்பாரிகளின் இன்னொரு கோஷம். இது ஜனநாயகமுறையில் தேர்தல் நடக்கும் உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான இந்தியாவுக்கு அச்சுறுத்தல் தரும் கோஷம். தேர்தல் புறக்கணிப்பை நீண்டகாலமாக நக்சல்பாரிகள் பல மாநிலங்களிலும் செய்து வருகிறார்கள். தேர்தல் முறையால் நாட்டில் புரட்சி ஏற்படுவது தாமதமாகிறது என்பது அவர்களது குற்றச்சாட்டு.

ஏழ்மை தான் ஒருவனை நக்சல்பாரியாக, புரட்சியாளனாக மாற்றியது, மாற்றுகிறது. இந்தியாவில் இன்றும் செல்வாக்கோடு நக்சல்பாரிகள் இருக்கும் மாவட்டங்களை சற்று கவனத்தோடு நோக்கினோமானால் ஒரு விஷயம் புரியும். எங்கெல்லாம் ஏழ்மை தலைவிரித்தாடுகிறதோ, அங்கெல்லாம் நக்சல்பாரிகள் வலுவாக காலூன்றியிருக்கிறார்கள். இந்தியாவின் சாபம் ஏழ்மை. இந்தியர்களின் ஏழ்மைக்கு ஆட்சியாளர்கள் காரணமா, அரசு அதிகாரிகள் காரணமா, நிலப்பிரபுக்கள் காரணமா, முதலாளிகள் காரணமா என்பதெல்லாம் ஆய்வுக்குரிய, விவாதத்துக்குரிய விஷயம். ஆனால் ஏழ்மை ஆயுதம் தூக்கவும் செய்யும் என்பது மட்டுமே நிரூபிக்கப்பட்ட உண்மை.

இன்றைய நிலையைப் பாருங்கள். பழங்குடி கிராமத்தவர் அதிகம் வசிக்கும் சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் செல்வாக்காக இருக்கிறார்கள். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உடல்ரீதியாக அதிகம் சுரண்டப்படும் வடகிழக்கு மாநிலங்களில் வலுவாக இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் ஏழைகளாக மட்டுமே பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும் ஒரிஸ்ஸாவில் அசுரத்தனமாக காலூன்றி வருகிறார்கள்.

அடுத்ததாக கலாச்சாரத் திணிப்பும் கூட ஆயுதமேந்த செய்கிறது என்று சொல்லலாம். இந்தியா யாருக்கு சொந்தமோ இல்லையோ, இந்தியாவின் பூர்வகுடி மக்களாக வாழ்ந்துவரும் பழங்குடியினருக்கு சொந்தம் என்பதை நாம் எல்லோருமே ஒப்புக்கொண்டாக வேண்டும். உலகமயமாக்கல், நகரமயமாக்கல் மற்றும் நவீன பொருளாதாரத் திட்டங்களால் பழங்குடி மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள், சுரண்டப்படுகிறார்கள், அவர்களது சொந்த நிலமான கிராமங்களையும், காடுகளையும் விட்டு துரத்தப்படுகிறார்கள். காடுகளை நகரமயமாக்கல் விழுங்குகிறது. கிராமங்களை தொழிற்பேட்டைகள் ஆக்கிரமிக்கிறது.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அவர்கள் செய்துவந்த பரம்பரைத் தொழில்கள் அந்நிய சந்தையாளர்களால் அழிக்கப்படுகிறது. “நீ வாழவேண்டுமா? நகரவாசியாக மாறு. உன் கலாச்சாரத்தை, தொழிலை மாற்றிக்கொள்” என்று மறைமுகமான அச்சுறுத்தல் அவர்களுக்கு விடப்படுகிறது. நாகரிகமானவர்கள் என்று சொல்லிக்கொள்கிற நகரவாசிகளால் நாட்டிலிருந்து காட்டுக்கு துரத்தப்பட்டவர்கள் தங்கள் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், வேரையும் விட்டுத்தர இயலாமல் நக்சல்பாரிகளாக மாறினார்கள். பழங்குடியின மக்கள் மத்தியில் நக்சல்பாரி இயக்கங்கள் செல்வாக்காக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். நக்சல்பாரி இயக்கங்களில் பணியாற்ற ஆதிவாசிகளும், தலித்துகளுமே அதிகமாக குறிவைக்கப் படுகிறார்கள் என்பதை இங்கே பொருத்திப் பார்க்கவும்.

ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் ஏழ்மை, வர்க்க வேறுபாடு, நிலப்பங்கீடு குறித்த அரசுகளின் முரட்டுத்தனமான அணுகுமுறை, சாதிய அடக்குமுறை, நீதிமறுப்பு என்று பல காரணிகள் நக்சல் இயக்கங்கள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

அரசு வழங்கும் நலத்திட்டங்கள் பரவலாக கடைக்கோடி இந்தியனுக்கும் சரியாக கிடைத்திருந்தால், இன்று ஏழைகள் அதிகமாக இருக்கும் இந்திய மாவட்டங்களில் அந்தந்த மாநில அரசுகளால் சரியான கட்டமைப்பும் - வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டிருந்தால், நீதி அனைவருக்கும் சமமாக காவல்துறையாலும் - நீதிமன்றங்களாலும் வழங்கப்பட்டிருந்தால், முதலாளிகள் - நிலப்பிரபுக்கள் மீது அரசுகள் காட்டும் முரட்டுத்தனமான பரிவை விவசாயிகள் - பாட்டாளிகள் மீது காட்டியிருந்தால்.. ஒருவேளை நக்சல்கள் உருவாகாமலேயே இருந்திருப்பார்கள்.

(அரசுத் தரப்பு நியாயங்கள் அடுத்த பாகத்தில்)

Read more...

Back to TOP