மாடசாமியின் தோற்றம் பார்த்ததுமே பிடித்துவிடும் தோற்றமல்ல. பொல்லாதவன் தனுஷ் மாதிரி. ஆனால் எனக்கென்னவோ பார்த்ததுமே பிடித்துவிட்டது. முதன்முறையாக ஒருவரோடு பேசுகிறோம் என்ற எண்ணமில்லாமல் ஒட்டுமொத்தமாக தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையே ஒப்பிக்க ஆரம்பித்து விட்டார்.
மாடசாமிக்கு மலைகளை ரொம்ப பிடிக்கும். தூரமாக திரியும் நீலமலைகளை நேரங்காலமின்றி ரசித்துக் கொண்டேயிருப்பார். எட்டமுடியாத இலக்குகளை தூரமாக நின்று பார்த்து, என்றாவது எட்டிவிடவேண்டும் என்ற அவரது உள்மன ஆசையின் வெளிப்பாடு இது.
ஸ்ரீவில்லிப்புத்தூர்காரர். சினிமா வெறியர். அவருடைய குடும்பத்தில் சகோதர சகோதரிகள் ஓரளவு நல்ல கல்வி கற்க, இவர் மட்டும் தினமும் மேட்னிஷோ ரஜினி படம் பார்த்துவிட்டு என்றாவது ரஜினியாகி விட வேண்டும் என்ற இலட்சியத்தில் மக்கு மாணவனாக இருந்து கொண்டிருந்தார். சினிமாவெறி அதிகமாகி சென்னைக்கு ஒருமுறை பஸ் ஏறிவிட்டார். வடபழனியிலும், கோடம்பாக்கத்திலும் சினிமா நட்சத்திரங்களும், புள்ளிகளும் இவரது தோளோடு தோள் உரசி டீக்கடையில் உட்கார்ந்து டீ சாப்பிடப் போகிறார்கள் என்றொரு எண்ணம் அவருக்கு. சினிமாவில் ரஜினி, விஜயகாந்த், முரளி வரிசையில் கருப்பு ஹீரோவாக 'செட்டில்' ஆகிவிடமுடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.
வழக்கமான கதைதான். இங்கே வந்தபிறகு தான் எல்லாம் தெரிந்தது. சினிமாவில் நுழைவதென்ன, சினிமா ஸ்டுடியோவுக்குள் நுழைவதே ஆகாத காரியமென்று. பசி. பட்டினி. அப்போதுதான் ஒரு குறுக்குவழி கண்டுபிடித்தார். சினிமாவுக்குள் வெற்றிக்கொடி நாட்டியவர்களில் பலரும் பத்திரிகையாளர்கள். பத்திரிகைக்குள் நுழைந்து விட்டால் அது சினிமாவுக்கு குறுக்குவழி. இங்கே வந்தபிறகுதான் மாடசாமிக்கு ஒரு உண்மை புரிந்தது. தன்னால் எந்தக் காலத்திலும் நடிகனாக சாதிக்க முடியாது என்பது. ஏனெனில் நடிக்கத் தெரிந்த, மாடசாமியை விட பர்சனாலிட்டியான குறைந்தது ஒரு லட்சம் பேர் இவருக்கு முன்பாக வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். எனவே இயக்குனராவது என்று முடிவெடுத்தார்.
மாடசாமிக்கு கொஞ்சம் டி.டி.பி. வேலைகள் தெரியும். எப்படியோ அடித்து பிடித்து சில பத்திரிகைகளில் வேலைபார்த்தார். குமுதம், குங்குமம் என்று வெகுஜன இதழ்கள் இவரது பெயரை தாங்கி வந்த இம்ப்ரிண்டுகள் ஏராளம். பத்திரிகைகளில் பணிபுரிவது மட்டுமல்லாமல் ஏதாவது சிறப்புமலர், சிறுபத்திரிகைகள் என்று பலவற்றிலும் பகுதிநேரமாக வேலைபார்த்து கொஞ்சம் கொஞ்சமாக செட்டில் ஆனார்.இதுதான் அவருடைய சுருக்கமான கதை.
நான் மாடசாமியை சந்தித்தபோது அவர் குங்குமத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நான் ஒரு விளம்பர நிறுவனத்தில் சீனியர் விஸூவலைஸர் ஆக இருந்தேன். ப்ரீலான்சாக குங்குமத்துக்கு சில கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தேன். முதல் சந்திப்புக்குப் பிறகு, அடுத்த ஓராண்டில் அனேகமாக அவரை ஓரிரு முறை குங்குமம் அலுவலகத்தில் சந்தித்திருப்பேன்.
பிற்பாடு கவுதம்சார் ஒரு கார்ப்பரேட் சினிமா கம்பெனியில் மார்க்கெட்டிங் பிரெஸிடெண்ட் ஆனபோது, நான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை எழுதிக் கொடுத்துவிட்டு அந்த கம்பெனியில் போய் சேர்ந்தேன். அங்கே ஒரு சினிமா பத்திரிகை ஆரம்பிக்கப் போவதாக சொல்லியிருந்தார்கள். என்னுடைய முடிவு கொஞ்சம் ரிஸ்க்கானது. ஏனெனில் ஏழெட்டு ஆண்டுக்காலம் கடுமையாக உழைத்து விளம்பரத்துறையில் அந்த நிலைக்கு உயர்ந்திருந்தேன். அடுத்தடுத்து ஜூனியர் ஆர்ட் டைரக்டர், ஆர்ட் டைரக்டர், கிரியேட்டிவ் டைரக்டர் என்று குறுகிய காலத்தில் வளர்ந்திருக்கலாம். இருப்பினும் அத்துறையை விட்டு விலகியதற்கு முக்கியமான ஒரு காரணம் இருந்தது. அது என்னவென்றால் எனக்கும் சினிமாதான் லட்சியம். நடிப்போ, இயக்கமோ அல்ல. கதை, திரைக்கதை, வசனம். சினிமாக் கம்பெனியில் சேர்ந்துவிட்டால் யார் கையிலாவது, காலிலாவது விழுந்து எப்படியாவது கலைமணியாகவோ, கதைமணியாகவோ ஆகிவிடலாமென்று முட்டாள்த்தனமாக சிந்தித்து வைத்திருந்தேன்.
இதேமாதிரி சிந்தித்துதான் மாடசாமியும் பத்திரிகைத்துறைக்கு தலைமுழுகிவிட்டு எனக்கு முன்பாகவே அந்த சினிமாக் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தார். ஒரே நிறுவனத்தில் வேலைபார்த்ததால் நெருங்கிய நட்பு எங்களுக்குள் மலர்ந்தது. இருவருக்கும் பொதுவான விஷயங்கள் நிறைய இருந்தன. சுருக்கமாக சொல்வதாக இருந்தால் ஒத்தசிந்தனை கொண்டவர்கள் நாங்கள். எனக்கு பிடித்த சினிமா அவருக்கும் பிடிக்கும். அவரது பிடிக்காத படம் எனக்கும் பிடிக்காது. மாஸை ரசிப்போம். கிளாஸை ஆராதிப்போம். இங்கே எங்கள் இருவருக்கும் சதிஷ் என்ற நண்பர் அறிமுகமானார். பொன்னமராவதிகாரரான இவருக்கு சினிமாவெல்லாம் இலட்சியம் இல்லை. தற்காலிகமாக சென்னையில் பணிபுரியவேண்டிய நிர்ப்பந்தம்.
எங்கள் இருவருக்கும் லட்சியம் சினிமா என்பதை ஏற்கனவே தெரிந்து கொண்டிருப்பீர்கள். சதீஷூக்கு வேறுமாதிரியான லட்சியம். சொந்த ஊரில் பெரியாளாக இருந்தவர். கிட்டத்தட்ட நாட்டாமை சரத்குமார் மாதிரி. நிஜமாகவேதான். அவர் பொன்னமராவதி பேரூராட்சியின் தலைவராக கூட இருந்திருக்கிறார். ஏதோ போதாத நேரம் எங்களோடு லோல்பட்டுக் கொண்டிருந்தார். அம்பாசமுத்திரம் அம்பானி மாதிரி ஏதாவது பிசினஸ் செய்து மீண்டும் தலைதூக்குவது அவரது இலட்சியமாக இருந்தது. மூவருக்குமே எடக்கு மடக்கான வயது வித்தியாசம் இருந்தாலும் நெருங்கிய நண்பர்களானோம். எங்கு போனாலும் சேர்ந்தே போவோம். ஜி.என். செட்டி ரோடு பெனின்சுலா ஹோட்டல் வாசலில் விஷயமேயில்லாமல் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை சினிமா, அரசியல், சமூகமென்று எதையாவது பேசிக்கொண்டிருப்போம். ரெகுலராக வெள்ளிக்கிழமைகளில் பைலட் தியேட்டரில் ஈவ்னிங் ஷோ.
நான் திராவிட அரசியல் சார்பு கொண்டவன். மாடசாமி கொஞ்சம் வித்தியாசமானவர். அவருடைய அனுபவத்திலிருந்தே அவருக்கென்று ஒரு அரசியலை அடையாளங் கண்டுகொண்டார். கிட்டத்தட்ட அவரது அரசியல் தமிழ்த்தேசிய அரசியலை ஒத்திருக்கும். இத்தனைக்கும் பெரியதாக சித்தாந்த, அரசியல் அறிமுகமோ, வாசிப்போ அவருக்கில்லை. ஆனாலும் எப்படி இவ்வளவு தெளிவாக அரசியல் பேசுகிறார் என்று ஆச்சரியமடைவேன். எதையாவது பேச ஆரம்பித்தால் உணர்ச்சிவசப்பட்டு, ஒரு பேச்சாளனின் லாவகத்தோடு, கைகாலை ஆட்டி சத்தமாக உரையாடுவார் (கிட்டத்தட்ட வைகோ மாதிரி).
மிகத்தீவிரமான ஈழ ஆதரவாளர். முத்துக்குமார் தீக்குளித்து வீரமரணடைந்தபோது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஒருவாரமாக திரிந்து கொண்டிருந்தார். ஏதோ ஒரு இங்கிலீஷ் டப்பிங் படம் பார்த்துக் கொண்டிருந்தோம் (ரேம்போ பார்ட் 4 என்று நினைவு). அப்படத்தில் மியான்மர் மக்களின் இன்னல்கள் படம்பிடித்து காட்டப்பட்டிருக்கும். பார்த்து முடித்ததும் மாடசாமி 'ஓவராக' உணர்ச்சிவசப்பட்டு விட்டார். இதுபோலதானே நம் மக்கள் ஈழத்தில் அல்லல் படுகிறார்கள் என்று ஆரம்பித்து, உலகின் ஒடுக்கப்படும் இனங்களை எல்லாம் பட்டியலிட்டு, ஈழத்தை ஒப்பிட்டு இரவு 12 மணி வரை பேசிக்கொண்டிருந்தார். ஒடுக்கப்படுவதும், அடக்கப்படுவதும் மாடசாமியால் சகித்துக்கொள்ளவே முடியாத விஷயம். அனுபவங்களிலிருந்தே இவ்வளவு உலக அரசியல் அறிவு பெற முடியும் என்பதற்கு மாடசாமி நல்ல உதாரணம்.
அங்கே பணிபுரிந்துகொண்டே சில இயக்குனர்களிடம் உதவியாளராக சேர்வதற்கு மாடசாமி முயற்சித்துக் கொண்டிருந்தார். அடிக்கடி என்னிடம் ஏதாவது ஒரு கதையை சொல்வார். லேசாக திரைக்கதை பில்டப் செய்து நான் வசனங்களை சொல்லவேண்டும். அடிக்கடி நிகழும் கூத்து இது. இரவு 12 மணிக்கு மேல் கூட செல்போனிலேயே கதை, திரைக்கதை, வசனமெல்லாம் எழுதியிருக்கிறோம். அவர் படம் இயக்கினால் நான்தான் வசனமென்று எங்களுக்குள் ஒரு ஹிட்டென் அக்ரீமெண்ட்.
இடையில் நான் செய்த ஒரு வடிகட்டிய முட்டாள்த் தனத்தால் மாடசாமிக்கு ஏழரைநாட்டு சனி ஒன்று பிடித்தது. நண்பர் விஸ்வாவுக்கு ஒரு டுபாக்கூர் தயாரிப்பாளர் நண்பராக இருந்தார். எனக்கும் ஒரு சூப்பர்ஃப்ளாப் படத்தை கொடுத்த உப்புமா இயக்குனரின் தொடர்பு ஏற்பட்டது. எடக்கு முடக்காக இவர்கள் என் மூலமாக அறிமுகமாகி லிங்க் ஆகித் தொலைத்தார்கள். மாடசாமி அந்த உப்புமாவிடம் உதவியாளராக சேர்ந்தார். டுபாக்கூரும், உப்புமாவும் சேர்ந்தால் என்ன ஆகும்? சுற்றியிருந்தவர்கள் எல்லோருக்கும் பிரச்சினை. டுபாக்கூரால் விஸ்வாவுக்கு பல லட்சம் இழப்பு. மாடசாமிக்கு கடுமையான மன உளைச்சல். கவுதம் சாருக்கும் தேவையில்லாத பிரச்சினைகள். நல்லவேளையாக இன்றும் விஸ்வா, மாடசாமி, கவுதம்சார் ஆகியோரோடு நான் நல்ல நட்பிலேயே இருக்கிறேன்.
எங்கள் கம்பெனி நிலவரம் அப்போது அவ்வளவு சரியாக இல்லை. எப்போது வேண்டுமானாலும் ஊத்திக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது. எப்படியாவது எஸ்கேப் ஆகிவிடவேண்டும் என்று மூன்று பேரும் முயற்சித்துக் கொண்டிருந்தோம். எனக்கு சினிமா ஆசை கிட்டத்தட்ட ஒழிந்துவிட்டது. சதிஷூம் ஓரளவுக்கு அப்போது தன்னுடைய நெருக்கடிகளை தீர்த்து விட்டிருந்தார். மாடசாமி மட்டும் ஏதாவது பட டைட்டிலில் தன் பெயர் வந்தே ஆகவேண்டும் என்ற சபதத்தில் இருந்தார்.
2008 டிசம்பரில் நான் அங்கிருந்து வெளியேறினேன். எனக்கு முன்னதாக சதீஷ், அவருக்கு முன்னதாக கவுதம்சார் வெளியேறி இருந்தார்கள். மாடசாமி மட்டும் அதே கம்பெனியிலேயே சம்பளமேயில்லாமல் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். கவுதம் சாரிடம் சில ஊடகம் தொடர்பான பணிகளை ஒரு ஆறு மாதத்துக்கு தற்காலிகமாக செய்துக் கொண்டிருந்தேன். பின்னர் ஒரு வாரப்பத்திரிகையில் வேலை கிடைத்து ஓரளவுக்கு செட்டில் ஆகிவிட்டேன். ஆசைப்பட்டபடியே ஒரு பத்திரிகையின் இம்ப்ரிண்ட் என் பெயரை தாங்கி வாராவாரம் வந்து கொண்டிருக்கிறது. ஊருக்குபோன சதீஷ் ஏதேதோ முயற்சி செய்து இன்று பொன்னமராவதியில் லோக்கல் கலாநிதிமாறன் ஆகிவிட்டார்.
கடைசியாக தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தனான மாடசாமியும் ஒரு நல்ல, உருப்படியான இயக்குனரிடம் அவர் விரும்பியபடியே வேலைக்கு சேர்ந்தார்.
இதெல்லாம் நடந்து இரண்டு ஆண்டுகள் சரசரவென்று ஓடிவிட்டது. எவ்வளவோ கசப்பான அனுபவங்களுக்கு மத்தியில் கவுதம்சார், மாடசாமி, சதிஷ் என்று நினைத்துப் பார்க்க மகிழ்ச்சியான மனிதர்களும் அதே காலக்கட்டத்தில் இருந்திருக்கிறார்கள். போனவாரம் தேவி தியேட்டரில் முதல் வரிசையில் உட்கார்ந்து படம் பார்க்கிறேன். ரெட் ஜயண்ட் மூவிஸ், உதயநிதி ஸ்டாலின் வழங்கும்... நெஞ்சுக்குள் பட்டாம்பூச்சி படபடத்தது. எந்தப் படத்தின் டைட்டிலைப் பார்க்கும்போதும் இப்படியான ஒரு உணர்வு ஏற்பட்டதேயில்லை. உதவி இயக்குனர்கள் வரிசையில் 'மாடசாமி எம்' என்ற பெயரை கண்டவுடன்தான் டென்ஷன் குறைந்தது. மகிழ்ச்சி பிறந்தது.
"நண்பேண்டா!" என்று உரத்து கத்தத் தோன்றினாலும், தியேட்டர் நாகரிகம் கருதி, நான் மட்டும் கைத்தட்டி பரவசப்பட்டேன்.

22 பின்னூட்டங்கள்:
சூப்பர் !!!!!!!!!
"நண்பேண்டா!"
Hats off Maadasamy.
Soon you will be Director Maadasamy!
:)
[[[உதவி இயக்குனர்கள் வரிசையில் 'மாடசாமி எம்' என்ற பெயரை கண்டவுடன்தான் டென்ஷன் குறைந்தது. மகிழ்ச்சி பிறந்தது. "நண்பேண்டா!" என்று உரத்து கத்தத் தோன்றினாலும், தியேட்டர் நாகரிகம் கருதி, நான் மட்டும் கை தட்டி பரவசப்பட்டேன்.]]]
நானும்தான்..!
தம்பி மாடசாமியின் பெயரை மிக விரைவில் இயக்குநர் டைட்டிலில் பார்த்துவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்குண்டு..!
கலக்கல் பதிவு.
:)
அருமை!
வாழ்த்துகள் மாடசாமி(க்கும்!)
இதுதான் லக்கி. நண்பனுக்கு நண்பன் எனக்கும் நண்பன். வாழ்க வளமுடன்.
அருமை!
உங்கள் பதிவில்,நட்பின் துடிப்பை, நண்பனின் வெற்றிக்கு துள்ளும் மண உணர்வுகளை, வலிகளைப் பகிர்ந்து கொள்ளும் தோழமை எல்லாம்
சதிராடுகிறது. தக்கை மேல் பதித்த கண்களுடன் காத்திருங்கள் நண்பர்களே! உங்களுக்கில்லாத வெற்றி வேறு யாருக்குத் தான்?
அருமை... நண்பர்கள் வாழ்கையின் நாடி துடிப்பு.
இன்னும் படம் பார்கல, நாளைக்கு ticket கிடைகிதானு பார்க்கறேன்...
வாவ்! கொஞ்ச நேரம் பிரம்மித்து உட்காந்து இருந்தேன். காரணம் எழுத்து ஓட்டமா? அல்லது மாடசாமி குறித்தா என சரியாக புரியவில்லை. என்ன பின்னூட்டம் போடுவது என தெரியவில்லை!
நண்பேன்டா
வாழ்த்துக்கள்
சூப்பருங்க.. மாடசாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்:)
பிரமாதம்.
யுவகிருஷ்ணா உன்னால் எனக்கு ஒரு கட்டுரை கிடைக்கக் கூடும்.
நீ ஒரு குறுநாவல் அல்லது நாவலை பரபரப்பில் கடந்துவிட்டாய்,
விருப்பமில்லை, பொறுமையில்லை, இலக்கு இல்லை, என்ற காரனங்கள் உனக்கு இருக்கலாம்.
எவ்வளவு படித்தான் என்பதல்ல என்ன படைத்தான் என்பதுதான் ஒருவனின் இடத்தை இறுதியாய் சுழிக்கிறது.
அனுபவம் எல்லோருக்கும் இருக்கிறது. பார்வைதான் களத்தைத் தீர்மானிக்கும் ஆரம்பப்புள்ளி.
இலக்கில் பதிக்கும் கண்தான் எழுத்தை மொழியை ஆழத்தைத் தீர்மானிக்கிறது.
மணிரத்தினம் நினைத்தால் சத்யஜித்ராய் போலப் படம் எடுக்க முடியாதா என்பதும்
சுந்தர ராமசாமி நினைத்தால் சுஜாதா மாதிரி எழுத முடியாதா என்பதும்
நிறைய இளைஞர்களின் எளிய மாயக்குழப்பம்.
அது வந்துவிடாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
வாழ்த்துக்கள், உன் இலக்கை நீ அடைய.
யுவா, சைவபட்சிணியா?! சொல்லவேயில்ல!
Hello Yuva,
Excellent article!
naNBendAAAA!!!!!!! Goodluck for your friend Madasamy.....soon to be director!! (BTW,I saw BEB and enjoyed it thoroughly!)
லாவகமான நடை லக்கி.டபுள் ஹீரோ மேட்டரை வைத்து ஒரு ஸ்பூஃப் ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணலாமா? புரொடியூசர் ரெடி
சிறந்த எழுத்து யுவா!
oh..good..i am also from srivilliputtur...guess this madasamy was my calssmate for quite some time in school..
நண்பர் மாடசாமிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! (ஒரே முறை நண்பன் ராஜ்மோகனோடு சந்தித்திருக்கிறேன்) நண்பரின் வெற்றியை உரக்க அறிவித்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்!
மாறுபட்ட பார்வையில்
ஒரு வித்தியாசமான பதிவு . . .
பாராட்டுக்கள்
--)
ம்ம்ம்..இதுதான் 'Pure co-incidence' என்பது..
நேற்று பட டைட்டில் பார்க்கும்போது உதவி இயக்குனர்கள் வரிசையில் 'மாடசாமி எம்' என்ற பெயர் எனக்கு ஏன் வித்தியாசமாக தெரிந்த்திருக்க வேண்டும்...?
ரொம்ப நாளாக பார்க்காமல் இருந்து இன்று உங்கள் பிளாக்கைப் பார்க்கும் போது, அவரை பற்றிய பதிவை ஏன் வாசிக்க வேண்டும்?
இன்னொரு விஷயம் டைட்டிலில் எனக்கு நெருடியது - துணை, இணை, உதவி, இயக்குனர்கள் என்று பெரிய பட்டியலே இருந்த்தது... இத்தனை பேரா?
Post a Comment