Showing newest 9 of 10 posts from March 2009. Show older posts
Showing newest 9 of 10 posts from March 2009. Show older posts

3ஷா - 6லிருந்து 25 வரை...

March 31, 2009

“அய்யா.. ஜாலி.. நான் ஸ்கூலுக்கு போகப்போறேனே?”

“ஏஞ்சலுக்கே ஏஞ்சல் ட்ரெஸ்ஸா?
இதெல்லாம் ஓவரா தெரியலை?”

“கல்யாணம் தான் கட்டிக்கினு பாட்டுக்கு டேன்ஸ் ஆட
அப்பவே பிராக்டிஸ் பண்ணிட்டேன்!”

“மம்மி டாடியோட ஒரு பர்த்டே பார்ட்டி. யப்பா.. மம்மி எவ்ளோ அழகா இருக்காங்க?”

“டிஸ்னி லேண்ட் போனப்போ எடுத்தது. நீங்களே சொல்லுங்க.
நான் அழகா இருக்கேனா? இல்லேன்னா மிக்கி மவுஸ் அழகா இருக்கா?”

“கனா காணும் காலங்கள்!”

“க்க... க... க்க.... கல்லூஊர்ரீச் சாலை!”

“99ல் மிஸ் சென்னை. 2008ல் மிஸ் கோலிவுட்!”

“அப்போவெல்லாம் நான் தான் நெ.1 மாடல்!”

“சினிமாவில் கல்லக்கல் எண்ட்ரீ”

“ஒரு பங்ஷனில் ‘பகீர்' போஸ்!”

Read more...

மிஸ் கிளாமர் வேர்ல்டு!

March 30, 2009


எது எதற்கு தான் கருத்துக்கணிப்புகள் நடத்துவது என்ற விவஸ்தை மேற்கத்திய பத்திரிகைகளுக்கு இல்லாமல் போய் விட்டது. நல்ல வேளையாக ஆண்கள் பத்திரிகையான FHM "உலகின் கவர்ச்சியான அழகி" என்ற பரவாயில்லை ரக தலைப்பில் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கிறது.


கொஞ்ச காலம் முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் திரைப்படத்தில் நடித்த மேகன் டெனிஸ் ஃபாக்ஸ் 2008ஆம் ஆண்டின் கவர்ச்சி அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். உலகளவில் முதல் நூறு இடங்களில் இருக்கும் கவர்ச்சி அழகிகளையும் அந்தப் பத்திரிகை பட்டியலிட்டிருக்கிறது.

உதட்டழகால் உலகையே கிறங்கடிக்கும் ஏஞ்சலினா ஜோலிக்கே பண்ணிரண்டாவது இடம் தான் கிடைத்திருக்கிறது என்றால் போட்டியில் கலந்துகொண்ட அழகிகளின் கவர்ச்சியை எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள். பாரிஸ் ஹில்டனின் நிலையோ இன்னும் பரிதாபம், எழுபத்து ஏழாவது இடம் தான் அவருக்கு. அதிரடி திருமணங்கள், திடீர் குழந்தை என சமீபகாலமாக பரபரப்பை ஏற்படுத்திய பிரிட்னி ஸ்பியர்ஸுக்கு கடைசி இடமான நூறாவது இடம் மட்டுமே கிடைத்தது. நம்ம ஊர் நமீதாக்களும், நயன்தாராக்களும் இந்த போட்டியில் கலந்துகொள்ளாததாலேயே இவர்களுக்கெல்லாம் இடம் கிடைத்திருக்கிறது என்று பெயர் வெளியிட விரும்பாத ஹாலிவுட் முக்கியஸ்தர் ஒருவர் கருத்து கூறியிருக்கிறார்.


முதலிடம் பெற்ற ஃபாக்ஸுக்கு இருபத்தொரு வயது தான் ஆகிறதாம். பொது இடங்களுக்கும், விழாக்களுக்கும் அபாயகரமான உடைகளை அணிந்துவந்து ஆண்களின் மனநிலையை பிறழச் செய்வது தான் அம்மணிக்கு ஹாபியாம். பச்சை குத்திக் கொள்வதில் (tattoos) அதிக ஆர்வம் கொண்ட ஃபாக்ஸ் உடலில் ஒன்பது இடங்களில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார். அவரது பாய் ஃபிரண்டான பிரையனின் பெயரை அவர் எங்கே பச்சை குத்திக் கொண்டிருக்கிறார் என்று சொன்னோமானால் தணிக்கைக்குழு இந்தப் பதிவுக்கு "A" சான்றிதழ் வழங்கிவிடக்கூடும்.

Read more...

விகடன் - விமர்சனம்!

March 25, 2009


யூத்ஃபுல் நியூ ஜெனரேஷன் விகடன் வடிவத்தில் தான் ஏமாற்றம் தந்தது. இப்போது உள்ளடக்கத்திலும் பெரியளவில் ஏமாற்றம் தந்துவருகிறது. குமுதத்தின் மீதான விமர்சனமே பத்து ரூபாய் விலையுள்ள பத்திரிகையை பத்து நிமிடத்தில் படித்துவிட முடிகிறது என்பதுதான். விகடன் பதினைந்து ரூபாய். எனவே பதினைந்து நிமிடத்தில் படித்துவிட முடிகிறது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றபோதிலும் கூட இன்பாக்ஸ் என்ற பெயரில் பெரிய பெரிய படங்களைப் போட்டு பக்கத்தை நிரப்புவதை ஜீரணிக்கவே முடியவில்லை.

இருவாரங்களாக விகடன் வெளியிட்டு வரும் சர்வே முடிவுகள் கொஞ்சம் கூட மக்களின் எண்ணவோட்டத்தோடு தொடர்பில்லாததாகவே இருப்பதாக தெரிகிறது. உண்மையிலேயே சர்வே எடுக்கிறார்களா அல்லது டெஸ்க் ஒர்க்கா என்ற சந்தேகமும் எழுகிறது. மன்மோகன் மீதும், காங்கிரஸ் மீதும் அதிருப்தி மக்களுக்கு அதிகமாக இருக்கிறதாம். ஆனால் மக்கள் தேர்ந்தெடுக்க விரும்பும் பிரதமர் பட்டியலில் அவருக்கு தன் முதலிடமாம். நன்றாகவே காதுகுத்துகிறார்கள் விகடன் குழுவினர். இந்த சர்வே தொடர்பாக எழுதப்படும் கட்டுரை நல்ல நகைச்சுவை. ஷங்கர் படங்களில் டிவி மைக் முன்பாக பேசுபவர்கள் மாதிரி மக்கள் பேசுகிறார்கள். விகடன் நிருபர்களின் எண்ணவோட்டம் மக்களின் எண்ணவோட்டமாகி விடாது.

கார்ட்டூன்களும் முன்புமாதிரி ஷார்ப்பாக இல்லை. ஹரனும், மதனும் இன்னும் கொஞ்சம் மெனக்கெடலாம். சினிமாவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாக தோன்றுகிறது. சினிமாவை வாசிக்க பலருக்கும் ஆர்வமிருப்பினும் விகடன் ஒரு சினிமாப் பத்திரிகையல்ல என்பதால் ஓவர்டோஸாக இருக்கிறது. கதைகளுக்கான இடம் ரொம்ப ரொம்ப குறைவு. இன்னமும் கதை கேட்கும் ஆர்வம் மக்களுக்குண்டு. ஒருவேளை கதைசொல்லிகள் குறைந்துவிட்டார்களோ? நாஞ்சில் நாடனின் ‘தீதும், நன்றும்’ கூட ஏமாற்றத்தையே தருகிறது. பேசாமல் அவரை தொடர்கதை எழுதச் சொல்லலாம். டாபிக்கல் மேட்டர்களை எழுத வேறு எழுத்தாளர்களை ஏற்பாடு செய்துக் கொள்ளலாம்.

அதுபோலவே சினிமா விமர்சனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இப்போது இல்லை. வில்லு படத்துக்கும் காஞ்சிபுரம் படத்துக்கும் நான்கைந்து மதிப்பெண்களே வித்தியாசம் என்பதை யாராலும் நம்பமுடியவில்லை. விமர்சனத்தில் தாங்கு, தாங்குவென்று தாங்கப்படும் படங்களுக்கு கூட நாற்பத்தி ஐந்துக்கு மேல் விகடன் மதிப்பெண் தருவதில்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது.

கண்கள் பனித்து, இதயம் இனித்து விட்டாலும் இன்னமும் தயாநிதி ஃபீவர் விகடனுக்கு மட்டும் தீரவில்லை. கண்மூடித்தனமான கலைஞர் எதிர்ப்பு நடுநிலையாளர்களை(?) வேண்டுமானால் திருப்திபடுத்தலாம். ரெகுலர் விகடன் வாசகர்கள் விரும்புவது விகடனின் சீரியஸ்லெஸ் ட்ரேட்மார்க் கட்டுரைகளையே. திருமாவேலனின் கட்டுரைகள் உக்கிரமாக, அற்புதமாக வருகிறது. இவையெல்லாம் வரவேண்டிய இடம் ஜூனியர் விகடனே தவிர்த்து சீனியவர் விகடனில் அல்ல. ஆடிக்கொருமுறை, அமாவசைக்கொரு முறை இதுபோன்ற சீரியஸ் கட்டுரைகளோ, பேட்டிகளோ வரலாம். சென்ற இதழில் வெளிவந்த ம.க.இ.க. செயலர் மருதையனின் பேட்டி அபாரம். இதுபோன்ற பேட்டிகளை மாதத்துக்கு ஒருமுறை போடலாம். ரெகுலராக இங்கேயே வந்துவிட்டால் ஜூ.வி.க்கு என்ன வேலை? மொத்தத்தில் அரசியலுக்கான அளவை விகடன் கொஞ்சம் குறைக்க வேண்டும்.

பாராட்டும்படியாக இருக்கும் விஷயங்களும் நிறைய இருக்கின்றன. குறிப்பாக இதழ் முழுக்க தூவப்பட்டிருக்கும் இளமை. அந்த இளமைக்கு சப்போர்ட் செய்யும் கலக்கல் கலர்ஃபுல் லே-அவுட். விகடனை வாங்கியதுமே நான் முதலில் வாசிப்பது லூசுப்பையனை. ஆனால் லூசுப்பையன் கூட பயாநிதி பற்றி அதிகமாக எழுதுவதில்லை என்பது வருத்தம் தான். நா.கதிர்வேலனின் சினிமாக்கட்டுரைகளை சொற்சுவைக்காக தவறாமல் வாசிப்பதுண்டு.

சில கவனிக்கத்த இளைஞர்களும் விகடனில் உண்டு. பாரதித்தம்பி. எழுதி வைத்துக்கொள்ளுங்கள். பத்தாண்டுகள் கழித்து இவர் இந்தியாவின் தலைசிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவராக இருக்கப் போகிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சென்ற வார மருதையனின் பேட்டி ஒன்றே போதும். பாரதித்தம்பியின் முதிர்ச்சியை எடுத்துக்காட்ட. அடுத்ததாக மை.பாரதிராஜா. இவரை ஏன் தான் சினிமாவுக்குள்ளேயே அடைத்து வைத்திருக்கிறார்களோ என்று நொந்துப் போகிறேன். மற்ற விஷயங்களுக்கும் பாரதிராஜாவை உபயோகப் படுத்திக் கொள்ளலாம். டைமிங் சென்ஸ் நிறைந்தவர். ஜூவியில் பரக்கத் அலியும், ஆராவும் கவர்கிறார்கள்.

விகடன் விரைவில் அடுத்தக் கட்டத்துக்கு உள்ளடக்க ரீதியாகவும், வடிவ ரீதியாகவும் மாறவேண்டியது அவசியம்.

Read more...

லாடம், அருந்ததீ!

March 24, 2009

லாடம்!


ஒன்றரை மணி நேரத்தில் எடுத்திருந்தால் ‘நச்’சென்று வந்திருக்கக் கூடிய படம். ஆங்கிலத்தில் டப் செய்து வெளியிட்டிருக்கலாம். எக்ஸ்ட்ராவாக ஒரு மணி நேரத்துக்கு ஜவ்வென்று இழுத்தது இயக்குனரின் தவறு. இந்தப் படத்துக்கு எதற்கு ஹீரோயின், எதற்குப் பாடல்களெல்லாம் என்றே தெரியவில்லை. படத்தின் மேக்கிங்கில் கலக்கியிருக்கும் இயக்குனர் இன்னும் கொஞ்சம் வேகமான திரைக்கதைக்காக மெனக்கெட்டிருக்கலாம்.

இரண்டு தாதாக்கள். ஒரு தாதாவின் மகனை இன்னொரு தாதா கொன்றுவிட, அந்த இன்னொரு தாதாவின் மகனை இந்த தாதா பதினாறு நாட்களுக்குள் கொன்றுவிடுவேன் என்று சபதம் செய்கிறார். இரு தாதாக்களுக்கும் இடையில் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர். ஏதாவது புரிகிறதா? இதுதான் படத்தின் அவுட்லைன். அட்டகாசமான ஆக்சன் த்ரில்லராக வந்திருக்க வேண்டியது இடையிடையே லூசு ஹீரோயின் ஒருவரால் தொய்வடைகிறது.

படம் முழுக்க ப்ளூ டோன் வன்முறையை தீவிரமாக காட்ட உதவுகிறது. இருந்தாலும் காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் தேவையற்ற உறுத்தலையும் தருகிறது. ஹீரோ நல்ல தேர்வு. ஹீரோயின் அச்சு அசலாக ஜோதிகாவை மிமிக்ரி செய்கிறார். முதலிரவுக் காட்சியில் அவரது காஸ்ட்யூம்.. அடடா.. ‘சிறுதொடுதலில்’ பாட்டு சூப்பர் மெலடி. இன்னும் பத்து வருடம் கழித்தும் சன் மியூசிக்கில் யாரோ ஒரு கோவிந்தராஜ் தனது காதலி மாலதிக்காக டெடிகேட் செய்யலாம்.

லாடம் - நன்றாகவே அடிக்கப் பட்டிருக்கிறது!

* - * - * - * - * - * -


அருந்ததி!


நெஜமாகவே பயப்படும்படி ஒரு படத்தைப் பார்த்து எவ்வளவு நாள் ஆகிறது. சந்திரமுகியின் பத்துநிமிட க்ளைமேக்ஸ் நினைவிருக்கிறதா? அதே எஃபெக்டில் முழுநீளமாக எடுக்கப்பட்டிருக்கும் படம் அருந்ததி. கொல்டித் தேசத்திலிருந்து டப் செய்யப்பட்டு வந்திருப்பதால் உடை, கலாச்சாரம் இத்யாதி சமாச்சாரங்கள் மட்டும் உதைக்கிறது. ஆனால் திகிலுக்கு ஏது மொழி?

அந்த சமஸ்தானத்து பிளாஷ்பேக் அபாரம். சால பாக உந்தி. மூன்று தலைமுறை கழித்தும் வில்லனின் ஆவி ஹீரோயினின் மறுபிறப்புக்காக காத்திருக்கிறது. இதே அவுட்லைனில் தேவதை என்றொரு படத்தை நாசர் இயக்கியிருந்ததாக நினைவு.

இதுவரை வெறுமனே காட்டிக் கொட்டிருந்த அனுஷ்கா முதல்முறையாக நடித்துக் காட்டியிருக்கிறார். முகம் முழுக்க மஞ்சள் பூசி, பெரிய குங்குமப் பொட்டோடு.. வாவ்.. பகுத்தறிவாளர்கள் கூட கையெடுத்துக் கும்பிடக் கூடிய தெய்வத் தோற்றம். வில்லனாக வருபவருக்கு மேக்கப் போட்டவருக்கு ஒரு ஆஸ்கர் கொடுக்கலாம். வில்லனின் முகத்தில் எப்போதும் பிணக்களை.

படத்தின் ஒவ்வொரு காட்சியும், அடுத்தக் காட்சியோடு இணைக்கப்பட்டிருக்கும் டிரான்ஸ்லிசன் அட்டகாசம். மொக்கை கதைக்கு சூப்பராக திரைக்கதை எப்படி எழுதுவது என்பதற்கு இப்படத்தை பாடமாகக் கூட வைக்கலாம். கேமரா, கிராபிக்ஸ், இசை, கலை, எடிட்டிங், கலர் கிரேடிங் என்று டெக்னிக்கல் ஆஸ்பெக்டில் இந்தப் படம் இந்தியத் திரையுலகுக்கே ஒரு மறுமலர்ச்சி.

அருந்ததி - அசல் தீ!

Read more...

ஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள்!


துப்பாக்கி - அழகிகள் - நவீன கார் - மிடுக்கான ரீட் அண்டு டெய்லர் ஷூட் - வில்லன்கள் - ஆக்சன் - சேஸிங் - உலகத்தில் எது மாறினாலும் மாறுமே தவிர ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கான இந்த விஷயங்கள் மாறவே மாறாது. என்ன தற்கால நவீன ஜேம்ஸ் பாண்ட் செல்போன் பயன்படுத்துகிறார்.

ஸ்டார் வார்ஸ் திரைப்பட தொடர்களுக்கு அடுத்ததாக உலகில் மிகப்பிரபலமான திரைத்தொடராக ஜேம்ஸ்பாண்டு 007 திரைப்படத் தொடர்களை குறிப்பிடலாம். இயான் பிளெமிங் என்ற இங்கிலாந்து எழுத்தாளர் 1950களில் எழுதிய நாவல்கள் மற்றும் குறுநாவல்களே ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்களாக பரிணமித்திருக்கின்றன. 1962ல் தொடங்கிய ஜேம்ஸ்பாண்டின் திரைப்பட சகாப்தம் 2008 வரை 22 பிரம்மாண்ட படங்களாக வளர்ந்து நிற்கிறது.

வசூல் ரீதியாக பார்க்கப் போனால் இதுவரை வந்த 22 படங்கள் மூலமாக நான்கு பில்லியன்களுக்கு மேல் டாலர்களாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஹாரிபாட்டர் திரைப்பட வரிசை மட்டுமே இதைவிட அதிக வருவாயை ஈட்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இயான் ப்ளெமிங் எழுத ஆரம்பித்து ஜேம்ஸ்பாண்டு பிரபலமான பின்னர் 1954ல் தொலைக்காட்சி வடிவமாக கடைசியாக வெளிவந்த ஜேம்ஸ்பாண்டு படமான காசினோ ராயல் வெளியாகியது. அதன் பின்னர் ஜேம்ஸ் பாண்டை திரைக்கு கொண்டுவர பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் மெனக்கெட்டு பல தடைகளால் தள்ளிப்போடப்பட்டது. 1962ஆம் ஆண்டு வெற்றிகரமாக முதல் ஜேம்ஸ்பாண்டு திரைப்படமான டாக்டர் நோ வெளியாகி வசூலை வாரி குவித்தது. அன்றிலிருந்து இன்றுவரை ஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் கோடைவிடுமுறை நேரங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுவரை ஜேம்ஸ்பாண்டு கதாபாத்திரத்தில் ஆறு பேர் நடித்திருக்கிறார்கள். சான்கானரி, ஜார்ஜ் லேசன்பி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் க்ரேக் ஆகியோர் அவர்கள்.

ஒலிப்பதிவு மற்றும் விஷூவல் எஃபெக்ட்ஸ்க்கான அகாடமி விருதுகளை ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்கள் பெற்றதுண்டு.

ஜேம்ஸ் பாண்டு படங்களுக்கென பல சிறப்பு அம்சங்கள் உண்டு.

ஜேம்ஸ் பாண்டு கலக்கல் ம்யூசிக்கில் ஸ்டைலாக நடந்துவந்து திரையை சுட்டதும் திரை முழுவதும் ரத்தமயமாகி டைட்டில் வரும். ஒரு சில படங்களில் மட்டும் இந்த பாரம்பரியம் மிஸ்ஸிங்.

கதாநாயகியை முத்தமிடுவது அல்லது காதல்செய்வது எல்லா ஜேம்ஸ் பாண்ட் படங்களின் கடைசி ரீலில் இடம்பெறும். ஆன் ஹெர் மெஜஸ்டி சர்வீஸ் மற்றும் காசினோ ராயல் படங்களின் இறுதியில் மட்டும் இந்த சம்பிரதாயம் இருக்காது. காரணம் இரண்டு படங்களிலும் ஜேம்ஸின் காதலி கடைசி காட்சியில் உயிரோடு இருக்கமாட்டார்.

ஜேம்ஸின் பாஸான மிஸ் எம்மின் செக்ரட்டரி மனிபென்னி ஜேம்ஸ்பாண்டை ஒரு தலையாக காதலிப்பது எல்லா படங்களிலும் வரும் காட்சி. ஜேம்ஸ் ஏனோ அவரது காதலை நிராகரித்தே வருவார். முதல் படமான டாக்டர் நோ மற்றும் கடைசியாக வெளிவந்த காசினோ ராயல் இருபடங்களிலும் மனிபென்னி கதாபாத்திரம் இல்லவே இல்லை. மற்ற அனைத்துப் படங்களிலும் அந்த கதாபாத்திரம் கண்டிப்பாக ஜேம்ஸை காதலிக்கும்.

ஒவ்வொரு படத்துக்கும் ஜேம்ஸ் பாண்டுக்கு க்யூ பிராஞ்ச் வினோத அழிவு ஆயுதங்கள் உருவாக்கித் தருவது வாடிக்கை. அவற்றை வைத்து தான் தலைவர் க்ளைமேக்ஸில் எதிரிகளை ஒற்றை ஆளாய் அழித்தொழிப்பார்.

இன்று தமிழ்படங்களில் உச்சரிக்கப்படும் பஞ்ச் டயலாக்குகளுக்கெல்லாம் ஜேம்ஸ் படங்கள் தான் முன்னோடி. ஒவ்வொரு படத்துக்கும் ஒரு ஸ்பெஷல் பஞ்ச் டயலாக் இருக்கும். தலைவரின் அறிமுகக் காட்சியிலேயே அனாயசமாக ஒரு சாகஸத்தை நிகழ்த்திவிட்டு ஒரு பஞ்ச் டயலாக் அடிப்பார். ஜேம்ஸ்பாண்டு திரைப்பட வரிசையில் இரண்டே இரண்டு படங்கள் மட்டும் இந்த சம்பிரதாயத்துக்கு விதிவிலக்கு.

ஜேம்ஸ்பாண்டு பார்களுக்கு சென்றால் வோட்கா மார்டினி விரும்பி குடிப்பார். பார் டெண்டரிடம் "Shaken, not stirred" என்றும் சொல்வார். கோல்டன் ஐ திரைப்படத்தில் இது கொஞ்சமாக மாற்றப்பட்டு "Shaken, but not stirred" ஆனது. காசினோ ராயல் திரைப்படத்தில் பார்டெண்டர் ஜேம்ஸ்பாண்டை பார்த்து "Shaken or stirred?" என்று கேட்பதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

ஜேம்ஸ் பாண்டு படங்கள் என்றாலே பெண்கள் வெகுபிரசித்தம். இவர் காப்பாற்றும் பெண்கள் இவரை காதலிப்பார்கள் அல்லது சக பெண் ஏஜெண்டுகள் இவரை காதலிப்பார்கள். அதுவும் இல்லையென்றால் வில்லனின் ஆசைநாயகிகளுக்கு ஜேம்ஸ் மீது காதல் வந்துவிடும். பெண்களே இல்லாமல் ஒரு ஜேம்ஸ் பாண்ட் படத்தை எடுப்பது நடக்காத காரியம்.

ஜேம்ஸ் பாண்டு படங்களில் அவருக்கு வழங்கப்படும் கார்கள் வெகுபிரசித்தம். நவீனவசதிகளோடு கூடிய அதிவேக கார்களை ஜேம்ஸ் பயன்படுத்துவார். படப்பிடிப்பு முடிந்ததும் அந்த கார்கள் பல மில்லியன் டாலர்களுக்கு ஏலத்துக்கு விடப்படும்.

எல்லா ஜேம்ஸ் படங்களிலும் அந்த படப் பெயர் ஒரு வசனத்திலாவது இடம் பெறும். உதாரணமாக சில....
Mr.Bond, You Only live Twice
You lived to Die Another Die.

மூவி டைட்டிலில் ஒரு பிரபலமான பாப் பாடகரின் பாடல் இடம் பெறும். அந்த பாடல் வரியிலும் பட பெயர் இடம் பெற்றிருக்கும். மடோனாவின் பாடல் Die Another Die படத்தை சிறப்பித்தது.

ஒரு சூதாட்ட காட்சியாவது 007 படங்களில் கண்டிப்பாக இடம் பெறும். அது என்ன ராசியோ தெரியவில்லை. பனி சறுக்கு காட்சிகளும் நிறைய படங்களில் வருவதுண்டு.

ஜேம்ஸாக நடிக்கும் நடிகர்களை எடுத்து கொண்டால், ஒருவரை விட்டு ஒருவர் தான் நிலையாக இருகின்றனர். கானரிக்கு பிறகு வந்த லெஸன்பி ஒரு படத்திலும், மூருக்கு பிறகு வந்த டிமோத்தி டால்டன் இரு படங்கள் மட்டுமே நடித்தனர். டானியல் கெரெக் தொடர்ந்து நிலைப்பாரா என்று பொறுத்து பார்ப்போம்

ஜேம்ஸின் உதவியாளராக, Money Penny என்று ஒரு பெண்மணி தோன்றுவார். பாண்டு தன் அலுவலகத்தில் நுழைந்த்தும், தன் தோப்பியை கழற்றி Stand-டை நோக்கி வீசுவது வாடிக்கை.


இதுவரை வெளிவந்த ஜேம்ஸ்பாண்ட் 007 திரைப்படங்கள் :


டாக்டர் நோ (1962)



ஃப்ரம் ருஷ்யா வித் லவ் (1963)



கோல்டுஃபிங்கர் (1964)



தண்டர்பால் (1965)



யூ ஒன்லி லைவ் ட்வைஸ் (1967)



ஆன் ஹெர் மெஜஸ்டிஸ் சீக்ரட் சர்வீஸ் (1969)



டயமண்ட்ஸ் ஆர் ஃபாரெவெர் (1971)



லைவ் அண்ட் லெட் டை (1973)



தி மேன் வித் தி கோல்டன் கன் (1974)



தி ஸ்பை ஹூ லவ்ட் மீ (1977)



மூன்ரேக்கர் (1979)



ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி (1981)



ஆக்டோபுஸ்ஸி (1983)



எ வ்யூ டூ கில் (1985)



தி லிவிங் டேலைட்ஸ் (1987)



லைசென்ஸ் டூ கில் (1989)



கோல்டன் ஐ (1995)



டுமாரோ நெவர் டைஸ் (1997)



தி வேர்டு இஸ் நாட் எனஃப் (1999)



டை அனதர் டே (2002)



கேசினோ ராயல் (2006)



குவாண்டம் ஆஃப் சோலஸ் (2008)
Font size



அடுத்து வர இருப்பது

பாண்ட் 23 (2011)

Read more...

ஜெயலலிதா!

March 19, 2009


அது 1988ஆம் ஆண்டு. சென்னைக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமம். இரவு 8 மணி இருக்கலாம். ஏராளமான பொதுமக்கள் திரண்டிருக்கிறார்கள். கொடியேற்ற ஜெயலலிதா வருகிறார். அந்தக் கூட்டத்திலே ஒரு சிறுவனும் இருந்தான். ஜெயலலிதா வந்தவுடன் உதயசூரியன் சின்னத்தை காட்டுவேன் என்று நண்பர்களிடம் சபதம் செய்திருந்தான். இரவு 11.30 மணியளவில் ஜெ. புயலென வருகிறார். மின்னல் வேகத்தில் கொடி ஏற்றுகிறார். "புரட்சித்தலைவி வாழ்க" கோஷம் விண்ணை முட்டுகிறது. உதயசூரியன் சின்னம் காட்டுவேன் என்று சபதம் எடுத்தச் சிறுவனோ அம்மாவின் வசீகரத்தால் கவரப்பட்டு இரட்டை இலை காட்டுகிறான். அந்த வசீகரம் தான் புரட்சித்தலைவி ஜெயலலிதா. மக்களை கவர்ந்திழுக்கக் கூடிய அவரது வசீகரமான முகம் தான் அவரது வெற்றிகளுக்கெல்லாம் அச்சாணி.

உலகிலேயே ஒரு அரசியல் தலைவருக்கு மிக அதிகமான நெகடிவ் பாயிண்ட்ஸ் இருக்கிறது என்றால் அது செல்வி ஜெயலலிதாவுக்கு தான். அவரது சர்ச்சைக்குரிய நட்பு, பிடிவாதம், கோபம், முன்னுக்குப் பின் முரணாக நடக்கும் செயல், அவசரப்படும் தன்மை, ஆட்சியியல் நிர்வாகத் திறமையின்மை என்று ஏகப்பட்ட பின்னடைவுத் தரக்கூடிய விஷயங்கள் அவரிடையே உண்டு. இருப்பினும் தொடர்ந்து அரசியல் ஓட்டத்தில் ஓடி வெற்றி பெற்று வருவதற்கு காரணம் மாற்றாரையும் வசீகரிக்கக்கூடிய அவரது "மாஸ்".

அதுபோலவே பொதுவாழ்வில் ஈடுபடக்கூடிய ஒவ்வொரு பெண்ணுக்கும் ICON அவர். எத்தகைய கடுமையான சூழலையும் முறியடித்து வெற்றி பெறுவது எப்படி என்பதற்கு ஜெயலலிதா தான் சரியான முன்னுதாரணம். எப்படியெல்லாம் ஒரு பெண் நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கும் அவரே முன்னுதாரணம். எந்த ஒரு சூழ்நிலையிலும் இவர் இதைத்தான் செய்வார் என்று கொஞ்சமும் கணிக்க முடியாத இரும்புத்திரை அவரது மனம். அம்மா ஒரு முடிவெடுத்து விட்டால் அதை ஆண்டவனால் கூட மாற்ற முடியாது என்று அதிமுகவின் கடைக்கோடித் தொண்டனுக்கும் தெரியும்.

82ஆம் ஆண்டு ஜூன் மாதம் திரையுலகில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார் ஜெயலலிதா. அரசியலில் ஈடுபட முடிவு செய்து எம்.ஜி.ஆர். முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார். இவரெல்லாம் முதல்வர் ஆவார் என்று யாருமே எண்ணிப் பார்த்திருக்க முடியாது. சுமார் ஆறு மாதம் கழித்து 83 ஜனவரியில் கட்சியின் கொ.ப.செ.வாக அறிவிக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் அரசின் ஸ்டார் திட்டமான சத்துணவுத் திட்டத்தின் உயர்குழுவிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். கொஞ்சம் கொஞ்சமாக கட்சியைப் பிடியில் கொண்டு வரும் முயற்சியை மேற்கொண்டார். அவருக்கென தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஆதரவாளர்கள் பெருகினார்கள். சேலம் கண்ணன் என்பவர் ஜெயலலிதாவின் காட்பாதராகச் அந்நேரத்தில் செயல்பட்டார் (இப்போது அட்ரஸே இல்லை. இருக்கிறாரோ? இல்லையோ?)

மேலும் 3 மாதம் கழிந்த நிலையில் ஜெ.வின் வற்புறுத்தலால் எம்.ஜி.ஆர் அவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியும் வழங்கினார். பாராளுமன்றத்துக்கு சென்றவர் அறிஞர் அண்ணா அமர்ந்த இருக்கை எதுவென்று கேட்டு, அவ்விருக்கையை தனக்கு வாங்கிக் கொண்டார். இதற்குப் பின் அவரது வளர்ச்சி ஜெட் வேகம் தான். எம்.ஜி.ஆராலேயே அவரது வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை. எம்.பியாக தேர்ந்தெடுக்கப் பட்டதுமே யாரும் எதிர்பார்க்காத வகையில் நேரடியாக பிரதமராக இருந்த இந்திராவைப் போய் சந்தித்தார்.

பன்மொழி ஆற்றல் ஜெ.வின் பெரிய பலம். குறிப்பாக ஆங்கிலத்தில் சரளமாக, சுவையாகப் பேசும் ஆற்றல் பெற்றவர். பாராளுமன்றத்தின் பல விவாதங்களில் அனல்பறக்க அருமையான ஆங்கிலத்தில் உரையாற்றினார். இந்தியைத் தவிர வேறு மொழி தெரியாத பல வடநாட்டு எம்.பி.க்கள் மிரண்டு போயினர். குஷ்வந்த் சிங் அப்போது மேல்சபை எம்.பியாக இருந்தார். அம்மாவின் ஆங்கிலப் பேச்சாற்றலால் கவரப்பட்ட அவர் கூட "அம்மாவின் ரசிகர்" ஆனார். வட இந்தியத் தலைவர்களோடு ஜெ.வுக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது.

இதனால் அரசியலின் சித்து விளையாட்டு அம்மாவுக்கு அத்துபடி ஆனது. பாராளுமன்ற நூலகத்தில் பெரும் நேரத்தை செலவழித்ததாக அவரோடு எம்.பி.யாகப் பணியாற்றியவர்கள் சொல்கிறார்கள். இந்நிலையிலே எம்.ஜி.ஆர் உடல்நலமில்லாமல் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்திரா மரணமடைந்த நிலையில் பிரதமராக பொறுப்பேற்ற ராஜீவ் பாராளுமன்றத் தேர்தலை நடத்துகிறார். பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலும் அனுதாப அலைக்காக இணைந்தே நடக்கிறது. தமிழ்நாட்டிலே நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக பணியாற்றுகிறார்.

அரசியல் அனல் பறந்தது. கலைஞரே கூட எம்.ஜி.ஆர் திரும்பி வந்தால் அவர் தான் முதல்வர் என்று அறிக்கை விட, அம்மா மட்டும் உஷாராக இருந்தார். ராஜீவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்திலே தமிழ்நாட்டின் நிர்வாகம் எம்.ஜி.ஆர் இல்லாமல் சீர்குலைந்து இருப்பதால் தன்னை முதல்வராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது. அரண்டு போனார் ராஜீவ். ஜெ.வின் அந்த அசட்டுத் துணிச்சல் தான் இன்றுவரை அவரைக் காக்கிறது.

87ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். மரணமடைகிறார். எம்.ஜி.ஆரின் உடல் ராஜாஜி மண்டபத்தில் கிடத்தப்பட்டிருக்கிறது. கட்சி யார் பக்கம்? - அண்ணா மறைந்தபோது நடந்தது போல திரைமறைவில் காய்கள் நகர்த்தப்படுகிறது. ஜெயலலிதா மட்டும் வரக்கூடாது என்று அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் சிலரால் முடிவு எடுக்கப்படுகிறது. ஜானகி அம்மாளை முன் நிறுத்தும் யோசனையை ஆர்.எம்.வீ செயல்படுத்தத் தொடங்குகிறார். எம்.ஜி.ஆரின் உடல் ஏற்றப்படும் பீரங்கி வண்டியிலே ஜெயலலிதாவும் ஏற முயற்சிக்க ஆரம்பத்திலேயே அறுத்து விடும் நோக்கில் ஜானகி அம்மாளின் உறவினரான நடிகர் தீபன் எட்டி உதைக்கிறார். எம்.எல்.ஏ.வாக இருந்த கே.பி.ராமலிங்கம் (இப்போது திமுக) ஓடிவந்து இழுத்து கீழே தள்ளுகிறார்.

இவ்வாறெல்லாம் சொந்தக் கட்சிக்காரர்களாலேயே அவமானப்படுத்தப்பட்ட, அடிக்கப்பட்ட ஜெயலலிதா அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரானது தான் காலத்தின் கோலம். அதிமுக இரண்டாகப் பிரிந்தது. ஜானகி அம்மாளை முன்னிறுத்தி ஆர்.எம்.வீயும், நெடுஞ்செழியனை முன்னிறுத்தி ஜெ.வும் கட்சியைப் பிரித்தார்கள். தக்க சமயத்தில் நெடுஞ்செழியனைத் தட்டி விட்டு தானே முன்னுக்கு வந்தார் ஜெ. நெடுஞ்செழியனோ நால்வர் அணி அமைத்து நாசமாய்ப் போனார்.

இந்தச் சமயத்தில் ஒரு விஷயம் பார்க்க வேண்டும். ஜெ. மட்டும் இந்தக் காரியத்தைச் செய்ததில்லை. இதுபோல தங்களுக்கு மேலே இருந்த தலைவர்களை தட்டி விட்டுத் தான் (அமைதிப்படை அமாவாசை போல) பல தலைவர்கள் புகழ் பெற்றிருக்கிறார்கள். உதாரணத்திற்கு ராஜாஜியை அமுக்கி மேலே வந்த காமராஜர், நெடுஞ்செழியன் - சம்பத் - மதியழகன் - அன்பழகன் எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டு மேலே வந்த கலைஞர், அந்தக் கலைஞருக்கே ஆப்பு வைத்த எம்.ஜி.ஆர், காமராஜரை திணறடித்த இந்திரா அம்மையார் என பல உதாரணங்கள் உண்டு. ஒரு வெற்றிகரமான அரசியல்வாதிக்கு தேவையான வல்லமை இது. இன்றைய தேதியிலும் அதிமுகவை இரும்புக் கோட்டையாக ஜெயலலிதா வைத்திருக்க இந்த வல்லமை தான் காரணம்.

89 சட்டமன்றத் தேர்தல் வருகிறது. நான் தான் எம்.ஜி.ஆரின் வாரிசு என்று ஜானகியும், ஜெ.வும் ஆளுக்கொரு பக்கமாக அறிக்கை விட்டு மோதிக் கொள்கிறார்கள். காங்கிரஸ் எப்படியாவது இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கோட்டை கட்டுகிறது. தேர்தல் முடிவுகள் பலருக்கும் (ஏன் கலைஞருக்கும் கூட) அதிர்ச்சி அளிக்கக் கூடிய வகையில் அமைந்தது. பிரதான எதிர்க்கட்சித் தலைவி ஆனார் ஜெயலலிதா. தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அரசியல் தலைவர்களில் முதலாவதாக தன் சூறாவளி சுற்றுப் பயணத்தை அறிவித்தவரும் அவர் தான். முதலில் வந்த வேட்பாளர் பட்டியலும் அவருடையது தான். இந்த "முதல்" குணம் இன்றுவரை அவரிடம் மாறவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் கூட எல்லா "முதல்"-ம் அவருடையது தான்.

எதிர்க்கட்சித் தலைவி ஆன பிறகு புத்திசாலித்தனமாக கட்சியை இணைத்தார். வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்வார் ஜெயலலிதா. அதுவரை அரசியலில் அவருக்கு பெரும் நெருக்கடிகள் கொடுத்த ஆர்.எம்.வீ-யுடனேயே கட்சியை இணைக்க கை கோர்த்தார். காங்கிரசிடம் இணக்கமாக போக காய்களை நகர்த்தினார். தான் முன்னேற யாருடன் வேண்டுமானாலும் கூட்டு சேருவார், யாரை வேண்டுமானாலும் வீழ்த்துவார்.

இந்த வேளையிலே மத்தியிலே வி.பி. சிங்கிடம் ஆட்சியை இழந்த காங்கிரசுக்கு ஜெ. தேவதையாகத் தெரிந்தார். வி.பி. சிங் பா.ஜ.க.வை முறைத்துக் கொள்ள சந்திரசேகருக்கு அதிர்ஷ்ட தேவதையின் சகாயம் காங்கிரஸ் உருவில் கிடைத்தது. காங்கிரஸ் மூலமாக சந்திரசேகரை உசுப்பேத்தி திமுக ஆட்சியைக் கலைத்தார் ஜெ. இந்த அயோக்கியத்தனத்தில் குடியரசுத் தலைவராக இருந்த வெங்கட்ராமனுக்கும் கூட்டு உண்டு.

91ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் ராஜீவ் எதிர்பாராதவிதமாக மரணமடைந்து விட அம்மாவுக்கு அடித்தது அதிர்ஷ்டம். தமிழக சட்டமன்றத்திலேயே யாரும் பெறாத அளவுக்கு பெருவாரியான வெற்றியை காங்கிரஸ் தயவில் பெற்றார் அம்மா. தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல்வர். இந்தியாவிலேயே இன்றுவரை (43 வயது) இளம்வயதில் முதல்வர் பொறுப்பை ஏற்ற ஒரே பெண். தமிழகத்திலும் மிகக்குறைந்த வயதில் முதல்வர் ஆனவர் இவர் தான். வெற்றி பெறும் வரை தான் அவருக்கு ஏணி வேண்டும். வெற்றி பெற்றப் பின்னால் அதை எட்டி உதைப்பது அவர் வழக்கம். 92ஆம் ஆண்டு ஏணி எட்டி உதைக்கப்பட்டது. காங்கிரஸ் அவமானப்படுத்தப் பட்டது. எட்டி உதைக்கப்பட்ட ஏணியே மீண்டும் மீண்டும் அவர் ஏறிச்செல்ல உதவுவது தான் அரசியலின் விசித்திரம். அம்மாவின் விவேகம் என்றும் சொல்லலாம்.

92ஆம் ஆண்டு ராஜிவின் முதல் நினைவுநாள் வருகிறது. இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் ஸ்ரீபெரும்புதூருக்கு அஞ்சலி செலுத்த வருகிறார்கள். அம்மா போகவில்லை. இதுகுறித்து சட்டமன்றத்திலே ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்புகிறார். "முதல்வர் ஏன் ராஜீவ் நினைவிடத்துக்குச் செல்லவில்லை?" உடனே முதல்வர், "இதுவரை டெல்லியிருந்து தமிழகம் வந்த எந்த காங்கிரஸ் தலைவனாவது எம்.ஜி.ஆர், அண்ணா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்திதுண்டா? நான் மட்டும் ஏன் செலுத்த வேண்டும்?" - இந்தத் துணிச்சல் தான் இன்று வரை எந்த சூழ்நிலையிலும் அவரை தளர விடாமல் காப்பாற்றி வருகிறது.

91 - 96 ஆட்சிக்காலத்தில் அவர் சார்ந்த சாதிக்கு அவர் முன்னுரிமை தருகிறார் என்று எதிர்க்கட்சிகளால் பிரச்சாரம் செய்யப்படும் வேளையில் தன் இமேஜைப் பற்றிக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் சட்டமன்றத்திலேயே "நான் பாப்பாத்தி தான்" என்று அறிவித்தார்.... அவர் அதுபோல சொன்னது சரியா? தவறா? என்பது வேறு விஷயம். இமேஜைப் பற்றி பயமில்லாது சொன்ன அவரது தைரியம் வேறு எந்த அரசியல்வாதிக்கும் இன்றைய நிலையில் இல்லை.

96ல் நடந்த தேர்தலில் வரலாறு காணாத தோல்வி. அம்மாவுக்கு வெற்றி எப்படி என்ற வித்தை அத்துப்படியானாலும், அந்த வித்தையை தோற்றுப் போன பின்பு தான் பயன்படுத்துகிறார். 98 பாராளுமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராவிதமாக ஒரு வித்தியாசமான கூட்டணியை உருவாக்கினார். இந்தியாவிலேயே அதுவரை அப்படி ஒரு கூட்டணி அமைந்திருக்குமா என்பது சந்தேகமே? அது எப்படி வெற்றி பெறும் என்று கணித்தாரோ தெரியவில்லை. பா.ஜ.க, பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளை கூட்டணியில் சேர்த்து பெரும் வெற்றி பெற்றார்.

அம்மா ஒரு புதிர். எந்த வேளையில் என்ன செய்வார் என்று யாருக்கும் தெரியாது. கட்சியில் யாருக்கு பதவி தருவார். யாருக்கு கல்தா கொடுப்பார் என்று யாரும் ஜோசியம் சொல்ல முடியாது. திடீரென்று அடிமட்டத் தொண்டனை தூக்கி மேலே வைப்பார். மேலே இருந்தவரைத் தூக்கி கீழே எறிவார். இதற்கெல்லாம் அவர் ஏதாவது லாஜிக் வைத்திருக்கிறாரா என்று கொஞ்சமும் புரியவில்லை. இவரது அடுத்த மூவ் என்ன என்பது தெரியாமலேயே கலைஞரின் தலையில் இருந்த கொஞ்ச நஞ்ச முடியும் காணாமல் போனது. ஆனால் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் எப்போதும் நம்பிக்கையோடு இருக்கிறான். ”அம்மா ஏதாவது செய்வார்”. அந்த நம்பிக்கை திமுக உட்பட வேறு எந்தக் கட்சித் தொண்டனுக்கும் கட்சித் தலைமையால் தரமுடியாமல் இருப்பது அதிமுகவின் பெரிய பலம்.

பா.ஜ.க. தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவும் அமைச்சரவையில் இடம் பெறுகிறது. 91 ஸ்டைலில் திமுக ஆட்சியைக் கலைக்க பா.ஜ.க.வை நெருக்குகிறார் அம்மா. பா.ஜ.க. மறுக்க அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சு.சாமியுடன், சோனியாவுடனும் டீப்பார்ட்டியில் கைகோர்க்கிறார். எனக்குத் தெரிந்து பாஸ்டன் தேநீர் விருந்துக்குப் பிறகு மிகவும் உலகப் புகழ்பெற்ற தேநீர் விருந்து அம்மா கலந்து கொண்டதுதான்.

பா.ஜ.க. ஆட்சி கவிழ்கிறது. காட்சிகள் வேகவேகமாக மாறுகிறது. 99 தேர்தல். இந்த முறை விசித்திரமான அரசியல் விளையாட்டில் வெற்றி எதிரிகளுக்குப் போய் சேர்கிறது. துவண்டு விட்டாரா அம்மா? அதுதான் இல்லை. ஏராளமான வழக்குகள். தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை, அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கிடையே 2001 தேர்தலைச் சந்தித்தார். சூறாவளி சுற்றுப் பயணம். கூட்டணிக் கட்சிகளிடையே தாராளம் என்று தன் பலத்தை அசுரபலம் ஆக்கி தேர்தலிலே வென்றார். 134 தொகுதிகளில் மட்டுமே நின்று மெஜாரிட்டியை அதிமுக பிடித்தது அகில இந்திய அளவிலான சாதனையாக எடுத்துக் கொள்ளலாம்.

இவருடைய 2001 ஆட்சிக்காலத்தில் பலரின் புருவத்தை உயர்த்தும் அளவுக்கு சில முடிவுகளை எடுத்தார். அறிவிக்கப்படாத ராஜகுருவாக இவருக்கு விளங்கிய சங்கராச்சாரியாரை கைது செய்தது இவர் புகழை உலகெங்கும் பரப்பியது. எந்தச் சூழ்நிலையில் அந்த முடிவை எடுத்தார் என்பது இதுவரைக்கும் புரியாத புதிர் தான்.

2006ல் தோல்வி. இதோ முடங்கிவிடாமல் 2009 பாராளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆனால் இம்முறை இதுவரை அவரிடம் பார்க்காத நிதானத்தைப் பார்க்க முடிகிறது. இந்த நிதானம் அவருக்கு வெற்றியை தருமா என்பதை தமிழக வாக்காளர்கள் அளிக்கும் தீர்ப்பில் தான் தெரிந்துகொள்ள முடியும்.

தோல்வியின் விளிம்புக்கும் சென்றிருக்கிறார். வெற்றியின் அதிகபட்ச உயரத்துக்கும் சென்றிருக்கிறார். யாராலும் புரிந்துகொள்ள முடியாத கவர்ச்சி அதிரடி அரசியல்வாதி இவர். இன்னமும் குறைந்தது 15 ஆண்டுக்காலத்துக்கு இவரது பங்கேற்பினை தமிழக அரசியலில் மறுக்க முடியாது. முகலாய மன்னர் அவுரங்கசீப்பை போல மகிழ்ச்சி, கோபம், நயவஞ்சகம், பிடிவாதம், விட்டுக் கொடுக்காத தன்மை, கனிவு, தலைமைப் பண்பு எல்லாம் கலந்த கலவை தான் புரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா!

Read more...

யாவரும் நலம்!

March 18, 2009


பிரசாந்த், மீனா நடித்த ‘ஷாக்’ என்ற திகில் படத்தை பார்த்தபோது முடிவுசெய்தேன். இனி தமிழில் தயாரிக்கப்படும் திகில் படங்களை பார்ப்பதில்லையென்று. நன்றாக இருக்கிறது, பயமாக இருக்கிறது என்றெல்லாம் நண்பர்கள் ஹைப் கொடுத்து தொலைத்ததால் யாவரும் நலம் பார்த்தே தீரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பேசாமல் பதினைந்து ரூபாய் கொடுத்து ‘ஆவிகளின் அலறல்’ டிவிடி வாங்கிப் பார்த்திருக்கலாம்.

மாதவன் குடும்பம் 13-பி என்ற பிளாட்டில் குடியேறுகிறது. அங்கே சில அமானுஷ்ய விவகாரங்களை மாதவன் மட்டும் உணர்கிறார். உதாரணத்துக்கு அங்கே இருக்கும் லிஃப்ட் மாதவனுக்கு மட்டும் வேலை செய்வதில்லை. பி.சி.ஸ்ரீராமின் கேமிரா ஒரு நூறுமுறையாவது லிஃப்ட் கேபிளை வெவ்வேறு ஆங்கிள்களில் காட்டியிருக்கும். இசை கூட பயமுறுத்த மறுக்கிறது என்பதுதான் கொடுமை.

இவர்கள் வீட்டு டிவியில் மட்டும் எடக்குமடக்கான ஒரு மெகாசீரியல். அந்த சீரியலில் வரும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் இவர்கள் குடும்பத்தில் அப்பட்டமாக நடக்கிறது. டிவிக்கு ஆவி பிடித்திருக்கிறதாம். இண்டர்வெல் வரை இப்படியே ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். மாதவனுக்கு ஜோடி நீதுசந்திரா. படத்தில் எனக்கு இருந்த ஒரே எண்டெர்டெயிண்மெண்ட் இவர்தான். ஹோம்லி ஃபிகர். வாத்ஸ்யாயனர் எழுதிய சமையல் புத்தகம் ஒன்றை மனைவிக்கு பரிசளிக்கிறார் மாதவன். புத்தகத்தில் இருப்பது மாதிரி சிக்கன் சிக்ஸ்டி நைன் செய்யச்சொல்லி இரவுகளில் வற்புறுத்துகிறார். அடுத்த கமல்ஹாசன். மாதவன் ஜோடியின் அன்னியோநியத்தை இன்னும் நெருக்கமாக காட்டியிருக்கலாம். கொஞ்சம் ‘சீன்’ சேர்த்திருந்தால் மஜாவாக இருந்திருக்கக் கூடும்.

இண்டர்வெலுக்குப் பிறகு படம் கொஞ்சம் வேகம் எடுக்கிறது. 1977ல் நடந்த எட்டு கொலைகள். கொலையாளி யாரென்ற மர்ம முடிச்சு. கொலை செய்யப்பட்ட பெண் டிவி ஆவியாக வந்து கொலையாளியை பழிவாங்குவது என்று இரண்டாம் பாதியின் பரபரப்பு ஓக்கே. ஒரு ஆவி தன்னைக் கொல்லவந்தவனை 32 ஆண்டுகள் கழித்துதான் பழிவாங்க வேண்டுமா என்று லாஜிக்கலாக கேள்வி கேட்டுவிடக்கூடாது என்றே தியேட்டரில் டிக்கெட் கிழிப்பவர் படம் பார்க்க வருபவர்கள் காதில் வைத்துக்கொள்ள இரண்டு ரோஜாப்பூக்களை இலவசமாக கொடுக்கிறார். பிளாக் & ஒயிட் டோனிங்கில் அந்த 1977 பிளாஷ்ஃபேக் படமாக்கப்பட்ட விதம் அபாரம். இந்தப் படத்துக்கு 1977 நடந்தது என்ன? என்று பெயர் வைத்திருக்கலாம்.

பேயையே காட்டாத பேய் படம் என்பது ஒன்றுதான் இப்படத்தின் சிறப்பு. டீசண்டான மெகாசீரியல் என்று சொல்லலாம். விஜய் டிவியின் ’நடந்தது என்ன?’ கூட இப்படத்தை விட சிறப்பாக எடுக்கப்படும் தொடர். மைடியர் லிசா, ஆடிவெள்ளி படங்கள் கூட இதைவிட அதிக திகிலை தரும். இது பகுத்தறிவுக்கு எதிரான படம் என்று சொல்லி என் டவுசரை நானே கிழித்துக் கொள்ள விரும்பவில்லை. ஏனெனில் நாளை பகுத்தறிவு இயக்கத்தைச் சார்ந்தவரான இராம.நாராயணன் ‘அருந்ததி’ ரிலீஸ் செய்கிறார்.

யாவரும் நலம் - ஒரே ஒருமுறை பார்ப்பது நலம்!

Read more...

தேர்தல் நிலவரம்!

March 17, 2009

தேர்தலில் எந்தெந்த கட்சி தேறும் என்பது இன்றுவரை தமிழகத்தில் தெளிவில்லாமல் இருக்கிறது. இப்போதைக்கு திமுக - காங்கிரஸ், அதிமுக - மதிமுக - கம்யூனிஸ்டுகள் என்ற அளவுக்கே கூட்டணி அமைந்திருக்கிறது. பாஜகவோடு, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, விஜய டி.ராஜேந்தரின் லட்சிய திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. தேமுதிக திமுக அணிக்கு வருவதற்கே வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. எந்த அணி வெற்றிவாகை சூடும் என்று தெரியாததால் திரிசங்கு சொர்க்கத்தில் அள்ளாடுகிறது பாமக.

தேர்தல் ஓராண்டுக்கு முன்பாக நடந்திருக்குமேயானால் மிகத்தெளிவாக சொல்லிவிட்டிருக்கலாம் ரிசல்ட்டை. நாற்பதுக்கு ஜீரோ என்றளவில் திமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்திருக்கும். மின்வெட்டுப் பிரச்சினையை தட்டுத் தடுமாறி சமாளித்தது, வெள்ளமெனப் பாய்ந்த வெள்ள நிவாரணம், ஒரு ரூபாய்க்கு அரிசி, பெரியளவிலான இலவசடிவி, கேஸ் கனெக்‌ஷன் வினியோகம், ஐம்பது ரூபாய் மளிகைப்பொருட்கள், பொங்கலுக்கு பொங்கல் வைக்க இலவசப் பொருட்கள் என்று ஓட்டுக்களை குறிப்பார்த்து வீசப்பட்ட திட்டங்கள் திமுகவை கரையேற்றி இருக்கிறது. இன்றைய நிலையில் இருபதுக்கு இருபது என்றே இரு அணிகளுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.

பாமக, தேமுதிக கட்சிகள் சேரும் அணிகளைப் பொறுத்து ஐந்து முதல் பத்து தொகுதிகளில் ரிசல்ட் மாறலாம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெல்லும் என்பது போன்ற தோற்றம் இருந்தது. இப்போது அதே பிம்பம் திமுக மீது இருக்கிறது. சுலபமாக வெற்றியடைந்து விடுவோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் கோட்டை விட்டால் திமுகவின் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையே ஆட்டம் கண்டுவிடக்கூடிய சூழல் இருக்கிறது. பிரச்சாரத்தின் போது வழக்கமாக ஏதாவது மேஜிக் செய்வார் கலைஞர். இம்முறை என்ன செய்யப்போகிறார் என்று ஜெயலலிதா ஆவலாக காத்திருக்கிறார்.

பாமகவுக்கு கிட்டத்தட்ட பதிமூன்று தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கக்கூடிய சக்தி இருக்கிறது. ஆயினும் தனியாக நின்றால் நாற்பதில் நான்கில் கூட டெபாசிட்டை வாங்க முடியாது. பதிமூன்று தொகுதிகளில் பாமகவுக்கு இருக்கும் செல்வாக்கைப் போலவே விஜயகாந்துக்கு கிட்டத்தட்ட முப்பது தொகுதிகளில் செல்வாக்கு இருக்கிறது. எனவே இந்த இரண்டு கட்சிகளும் எடுக்கப்போகும் கூட்டணி நிலை தேர்தல் முடிவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். கூட்டணி பலமின்றி வெற்றிக்கனி பறிக்கும் நிலையை திமுகவும், அதிமுகவும் பத்தாண்டுகளுக்கு முன்பாகவே இழந்துவிட்டன.

கலைஞர் இரு நாட்களுக்கு முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறித்து கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஷயம். கொள்கை அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகளுக்கும், திமுகவுக்கும் பெரியளவில் வேறுபாடு இல்லையென்று சொல்லியிருக்கிறார். சிறுத்தைகளுக்கு அரசியல் அரங்கில் கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக இதை எடுத்துக் கொள்ளலாம். தாங்கள் மட்டுமே கொள்கைக்குன்றுகள் என்று இதுவரை திமுகவினர் சொல்லிவந்த நிலை மாறியிருக்கிறது. சிறுத்தைகளுக்கு பலமான எதிர்காலம் இருப்பதை ஒருவேளை கலைஞர் கணித்திருக்கலாம். அதே நேரத்தில் காங்கிரஸின் எதிர்ப்பையும் மீறி சிறுத்தைகள் தங்கள் பக்கம் தான் என்பதை அழுத்தம் திருத்தமாக அவர் சொல்லியிருப்பதும் குறிப்பிடத் தகுந்தது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக ஈழப்பிரச்சினை இத்தேர்தலில் பெரிய அலையாக இருக்கக்கூடும் என்று தமிழுணர்வாளர்கள் பேசிவந்தனர். தேதி அறிவிக்கப்பட்டதற்கு பின்பாக பார்க்கப்போனால் ஈழ உணர்வு எழுச்சியில் தேக்கம் ஏற்பட்டிருப்பதாகவே உணரமுடிகிறது. ஈழப்பிரச்சினையை அடிப்படையாக வைத்து போராட்டங்கள் நடத்திய இயக்கங்கள் மதிமுக, பாமக, சிறுத்தைகள் உள்ளிட்டவர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே திமுக - அதிமுக என்று தேர்தல் கூட்டணிகளுக்கு முக்கியத்துவம் தந்து ஈழப்பிரச்சினையை பின்னுக்கு தள்ளியது இதற்கு ஒரு முக்கியக் காரணம்.

அதே நேரத்தில் தமிழிணையங்களில் ஈழம் தொடர்பாக கூறப்படும் அதீத எழுச்சியின் அளவினை என்னால் இங்கிருக்கும் மக்கள் மனங்களில் காண முடியவில்லை. காசிஆனந்தன் விகடன் பேட்டியில் சொல்லியிருப்பதைப் போன்று 83ஐ விட அதிகமான ஈழ ஆதரவு அலை இங்கே நிச்சயமாக இல்லை. இப்போதிருப்பது அனுதாபம் மட்டுமே. கடந்த சிலமாதங்களாக நேரடியான களப் போராட்டங்களிலும், கூட்டங்களிலும் கலந்துகொண்ட அனுபவத்தின் அடிப்படையிலேயே இதை தெளிவாக என்னால் உணரமுடிகிறது.

தமிழன் வாக்களிக்கும்போது தன்னுடைய வாய்க்கால், வரப்பு பிரச்சினைக்கு தான் முன்னுரிமை அளிக்கிறானே தவிர, வன்னிக்கு அல்ல. ஈழத்தமிழர் மீதான அனுதாபத்தை தாண்டி காங்கிரஸை புறக்கணிக்கிறோம், அதிமுகவை புறக்கணிக்கிறோம், திமுகவை புறக்கணிக்கிறோம் என்று தங்கள் கட்சி அபிமானங்களை விட்டுத்தர யாரும் தயாராக இல்லை. எனவே இத்தேர்தலிலும் ஈழம் ஓட்டுக்கான அரசியலாக இங்கே முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. ஒருவேளை பாமக, வி.சிறுத்தைகள், மதிமுக கட்சிகள் அணி அமைத்துப் போட்டிருந்தால் இது வாக்குக்கான பிரச்சினையாக முன்வைக்கப்பட்டிருக்கக் கூடிய சூழல் இருந்திருக்கும்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஐம்பது சதவிகிதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று வெல்ல முடிந்தது. இத்தேர்தலில் அப்படிப்பட்ட வெற்றியை பெறுவது அசாத்தியமானது. மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே எந்த அணியும் வெல்ல முடியும் என்ற நிலை இருக்கிறது. எந்த அலையோ, எந்தப் பிரச்சினையோ இல்லாமல் விளக்கெண்ணெய் மாதிரி வழ வழா கொழ கொழா என்று நடைபெறப் போகிற தேர்தல் இது. தேர்தல் பிரச்சாரம் தொடங்கியப் பிறகாவது நிலைமை சூடு பிடிக்கிறதா என்று பார்க்கலாம்.

Read more...

நமீதா! - குளோஸ் அப் ஷாட்!




மும்பையில் பிறந்து வளர்ந்த கவர்ச்சி சுனாமி மீதாவின் பிறந்தநாள் மே 10 (வயது 26?). நமீதாவின் தந்தை பிரபல தொழிலதிபர். மீதாவின் பூர்விகம் மலையாளம் என்பது நிறைய பேருக்கு தெரியாது. ஸ்பெஷல் சேச்சி ட்ரேட்மார்க் அவரிடம் இருப்பதை கூர்ந்து பார்க்காமலேயே உணரலாம். குஜராத்தில் வளர்ந்தவர் அவர். தமிழில் ப்ரண்ட்ஸ் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் சித்திக்கால் தென்னிந்தியாவில் பிரபலமானார். தமிழிலும் எங்கள் அண்ணா திரைப்படம் மூலமாக சித்திக்கே அவரை அறிமுகப்படுத்தினார்.


2001 மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டபோது மீதாவின் உயரம் 5'8", வயது 18, பலான பலான அளவு 32:24:35, எடை : 55 கிலோ. அந்தப் போட்டியில் அதிகபுள்ளிகளுடன் முதலிடம் பெற்றிருந்தபோதிலும், இறுதிச் சுற்றில் நடுவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மொழிபெயர்ப்பாளரை பயன்படுத்தியதால் வெற்றிவாய்ப்பினை இழந்தார்.

மிஸ் இந்தியா போட்டியில் பங்குபெற்றதன் விளைவாக தெலுங்கு திரையுலகில் அதிரடியாக நுழைந்தார். அவர் நடித்த சொந்தம், ஜெமினி திரைப்படங்கள் வணிகரீதியிலாக பெரிய வெற்றி பெறாதபோதிலும் வசீகரிக்கவைக்கும் அவரது தோற்றத்தால் தெலுங்கு சினிமா ரசிகர்களை சுண்டி இழுத்தார். "ஏய்" படத்தின் "அர்ஜூனா, அர்ஜூனா" பாடல் மூலமாக தமிழ் ரசிகர்களையும் கிறங்கடித்தார். கன்னடத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

மீதாவுக்கு பிடித்த வண்ணங்கள் கறுப்பு வெள்ளை. மீதாவை காதலிக்க விரும்புபவர்கள் ஒரு வெள்ளை ரோஜாவுடன் Propose செய்யலாம். வெள்ளை ரோஜா என்றால் அவருக்கு உயிர். ஓய்வு நேரங்களில் நீந்துவதும், பேட்மிண்டன் ஆடுவதும் அவரது பொழுதுபோக்கு. குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிப்பதில் அலாதி விருப்பம் கொண்டவர் மீதா. சிட்னி ஷெல்டன் நாவல்களை வாசிப்பதில் அலாதி பிரியம் கொண்ட நமீதாவுக்கு ரொம்ப பிடித்தது படங்களோடு வரும் காமிக்ஸ் புத்தகங்கள். நந்திதா தாஸ், தபு போன்றவர்களின் நடிப்பை ரொம்பவும் ரசிப்பார். விலங்குகள் மற்றும் பறவைகள் மீது அன்பு செலுத்துவதில் அவர் இன்னொரு மேனகா காந்தி.

Read more...

Back to TOP