அசோகர் கல்வெட்டு!
November 29, 2009

எங்கள் தெருவில் ஒரு பெந்தேகோஸ்தே சர்ச் இருக்கிறது. அதற்கு பக்கத்தில் ஒரு அய்யிரு வூடு. அய்யிரு வயதானவர். தோட்டம் சரியாக பராமரிக்கப் படாமல் புல்லும், பூண்டும் மண்டிக்கிடக்கும். இன்று காலை அலுவலகத்துக்கு வரும்போது அந்த தோட்டத்தை நடுத்தர வயதுடையவர் ஒருவர் கடப்பாரை, மண்வெட்டி கொண்டு ஒழுங்கு செய்துகொண்டிருந்ததை கண்டேன். கொஞ்சம் கூன் விழுந்த அந்த மனிதரை எங்கோ பார்த்த நினைவு. பைக்கை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்து லேசாக புன்முறுவல் செய்தேன்.
யாரோ ஒருவர் சம்பந்தமில்லாமல் நின்று சிரிப்பதைப் பார்த்த அந்த நபர், “இன்னா சார். உங்க வூட்டுலேயும் ஏதாவது வேலை இருக்கா?” என்று திக்கித் திக்கிப் பேசினார். குரலை கேட்டதுமே அடையாளம் கண்டுகொண்டேன். அது அமல்ராஜ்.
அமல்ராஜ் யாரென்று தெரிந்துகொள்ள ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.
பரங்கிமலை ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே உண்டு. அது முடிந்ததுமே தந்தை பெரியார் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தேன். பையன்களுக்கு ‘ஏ' செக்ஷன். பெண்களுக்கு ‘பி' செக்ஷன். ‘ஏ' செக்ஷனில் மட்டுமே 106 பேர். முதல் வரிசையில் நான் அமர்ந்திருந்தேன். எனக்கு அருகில் கொஞ்சம் கூன் போட்ட ஒரு பையன் உட்கார்ந்திருந்தான். அவனை அதுவரை பார்த்ததில்லை. அவன் மடிப்பாக்கம் பஞ்சாயத்து பள்ளியில் இருந்து வந்திருந்தான். பார்த்ததுமே தெரிந்துகொள்ளலாம், அவனுக்கு வயதுக்கேற்ற மூளைவளர்ச்சி இல்லையென்பதை.
சீருடை என்ற கான்செப்ட் இருப்பதே மாணவர்களுக்குள் வேற்றுமை இருக்கக்கூடாது என்பதற்கு. ஆனால் அதில் கூட நுண்ணிய அளவில் வேறுபாடு இருப்பதை தெரிந்து கொள்ளலாம். ஏழை மாணவர்கள் காட்டன் சட்டை போட்டிருப்பார்கள். கொஞ்சம் நடுத்தர வர்க்கத்து பசங்கள் டெரிகாட்டன் அணிந்திருப்பார்கள். வசதியான வீட்டு பையன்கள் பாலியஸ்டர் அல்லது சைனா சில்க் அணிந்திருப்பார்கள்.
அமல்ராஜ் சைனா சில்க் சட்டை அணிந்திருந்தான். நான் வெள்ளை டெரிகாட்டன் சட்டையும், பிரவுன் கலர் டவுசரும் அணிந்திருந்தேன். ஆறாம் வகுப்பு படிக்கும்போதே அவனுக்கு 16 வயது இருக்கும். வகுப்பில் பேண்ட் அணிந்து வந்தவன் அவன் மட்டும் தான். அவனுடைய அப்பா அப்போது ஊரில் பெரிய ஆள். நிலம் நீச்சு, பரம்பரைச் சொத்து என்று கொஞ்சம் இருந்தது. அவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த தாரத்தின் மூத்த மகன் அமல்ராஜ்.
புதிய நோட்டையும், புத்தகங்களையும் முகர்ந்துப் பார்த்தபோது வந்த வாசனையும், முதல் நாள் வகுப்பு தந்த மகிழ்ச்சியும் இன்னமும் மனதில் ஓரமாய் இருக்கிறது. சொர்ணாம்பிகை மிஸ் தான் க்ளாஸ் டீச்சர். முதல்நாள் என்பதால் பாடம் எதுவும் எடுக்கவில்லை. டேபிளில் இருந்த நொச்சிக்குச்சிக்கும் வேலையே இல்லை.
சின்ன இடைசெறுகல் : நொச்சி என்பது மரமாகவும் வளராமல், செடியாகவும் குறுகிப்போகாமல் வளரக்கூடிய ஒரு தாவரம். நொச்சிக்குச்சி வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட உறுதியான கொம்பு. இந்த குச்சியை வைத்து நுங்கு சைக்கிள் தயாரித்தால் பலன் அமோகம். நொச்சியின் இலை நல்ல வாசனை கொண்டது. நொச்சி இலைகளை நெருப்பில் எரித்தால் யாகங்களில் வருவது போல வெண்மையான புகை வரும். இந்த புகை கொசுக்களையும், பூச்சிக்களையும் அழிக்கவல்லது.
அப்போதெல்லாம் க்ளாஸ் ரூமில் டேபிளில் தினமும் ஒரு புதிய நொச்சிக்குச்சி தயாரித்து வைக்க வேண்டும். இதற்காக வாத்தியார்களின், டீச்சர்களின் அல்லக்கை மாணவர் யாராவது வகுப்புக்கு ஒருவர் இருப்பார். அந்த அல்லக்கை வேலையை எட்டாவது வரை நான் செய்துவந்தேன். எட்டாவதுக்குப் பிறகு பொறிக்கி பசங்க லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டதால் பத்மநாபனோ யாரோ டீச்சருக்கு அல்லக்கையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். நொச்சிக்குச்சிக்கு டிமாண்டு ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக நுணா மரத்தின் கிளையை உடைத்து பிரம்பு தயார் செய்து வைக்க வேண்டும். நுணாம்பழம் சுவையாக இருக்கும், ஆனால் நல்ல வாசனை இருக்காது.
ஓக்கே, கமிங் பேக் டூ த பாயிண்ட்..
சொர்ணாம்பிகை டீச்சரின் க்ளாஸ் முடிந்ததுமே ஒல்லி தமிழய்யா வந்தார். அந்த காலத்தில் கவிஞர் இளமுருகு எழுதிய பக்திப்பாடல்களை விவிதபாரதியில் கேட்டிருப்பீர்கள். அந்த இளமுருகு இவர் தான். ஒல்லி தமிழய்யா ஜாலியான ஆள். டைமிங் கமெண்ட்கள் அடிப்பதில் கில்லாடி. கோபம் வந்துவிட்டால் மட்டும் நொச்சிக்குச்சி பிய்ந்துப்போகும் அளவுக்கு விளாசிவிடுவார்.
க்ளாசுக்கு வந்த அய்யா எல்லோரையும் உயிரெழுத்து, மெய்யெழுத்து எழுதச்சொன்னார். உயிரெழுத்துக்களை வரிசையாக எழுதிவிட்டேன், மெய்யெழுத்து எழுதும்போது மட்டும் கொஞ்சம் திணறிப்போனேன். எல்லோர் நோட்டுக்களையும் வரிசையாக நடந்தவாறே கவனித்து வந்த அய்யா அமல்ராஜின் நோட்டைப் பார்த்து வெறுத்துவிட்டார். அவன் எழுதியதில் ஒன்றுகூட சத்தியமாக தமிழில் இல்லை. அது எந்த மொழி என்றும் அய்யாவால் கூட கண்டுபிடிக்க இயலவில்லை.
”என்னய்யா இது? அசோகர் கல்வெட்டை அப்படியே பார்க்குறது மாதிரி இருக்கே?” என்றார்.
அமல்ராஜ் அமைதி காத்தான். அவனுக்கு லேசாக திக்குவாய். வேகமாக பேசமுடியாது.
“ஏண்டா கேட்டுக்கிட்டிருக்கேன். பதில் சொல்ல முடியாதா?” என்றவாறே நொச்சிக்குச்சியை எடுத்தார். அவனோடு படித்த இன்னொரு பையன் “ஐயா, அவனுக்கு சரியா பேசவராது” என்றான்.
“சரி. உன்னோட பேரை நோட்டுலே எழுது!” என்றார் அய்யா.
அமல்ராஜ் எழுதியது மீண்டும் அசோகர் கல்வெட்டு மாதிரியே இருந்தது. அமல்ராஜால் அவன் பெயரை கூட எழுதமுடியவில்லை.
“நீயெல்லாம் எப்படிடா ஆறாங்கிளாஸ் வந்தே?” என்று கேட்டவாறே நொச்சிக்குச்சியால் அடித்து விளாசிவிட்டார். அடிகளை பொறுமையாக வாங்கிய அமல்ராஜ் ஒரு சின்ன எதிர்ப்பு கூட தெரிவிக்கவில்லை. அவனது கையை பார்த்தேன். சிவந்துப்போய் ரத்தம் கட்டியிருந்தது. அமல்ராஜை பார்க்க பாவமாக இருந்தது.
மறுநாள் காலையில் ஹெட்மாஸ்டர் ரூம் அல்லோலகல்லோலப்பட்டது. அமல்ராஜின் அப்பா அவரது உறவினர்களோடு வந்து மகன் அடிபட்டதற்காக பிரச்சினை செய்தார். அவனால் அ, ஆ கூட எழுதமுடியவில்லை என்று சொன்ன தமிழய்யாவின் நியாயம் எடுபடவில்லை. ”அதை சொல்லிக் கொடுக்கத்தான் உங்ககிட்டே அனுப்புறேன்” என்று அமல்ராஜின் அப்பா அழும்பு செய்தார். தமிழய்யா நொந்துப்போய் மன்னிப்பு கேட்டதாக நினைவு.
அதிலிருந்து அமல்ராஜை எந்த வாத்தியாரும், டீச்சரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அவன் பாட்டுக்கு வகுப்புக்கு வருவான். கடைசி வரிசையில் மந்தமாக உட்காருவான். ஏதோ எழுதுவான். பரிட்சை கூட அசோகர் கல்வெட்டு மொழியில் தான் எழுதுவான். எப்போதுமே எல்லா பேப்பரிலுமே மார்க் “0” தான். ஓரிரு டீச்சர்கள் பரிதாபப்பட்டு ஐந்தோ, பத்தோ ரிவிஷன் டெஸ்டில் தந்ததுண்டு. ஆனால் அவனது சைனா சில்க் வெள்ளைச் சட்டையில் மட்டும் ஒருநாள் கூட நான் அழுக்கை கண்டதில்லை. அவனுக்கு அப்போதே அவன் அப்பா பாட்டா செருப்பு வாங்கித் தந்திருந்தார். மற்ற பையன்கள் மாதிரி விளையாட்டிலும் அமல்ராஜுக்கு ஆர்வமில்லை.
தமிழய்யா அவனது எழுத்தை ‘அசோகர் கல்வெட்டு' என்று விமர்சித்திருந்ததால் அவனை மற்ற மாணவர்களும் அசோகர் கல்வெட்டு என்றே அழைத்தோம். அமல்ராஜ் என்று அட்டெண்டனன்ஸில் அழைப்பதோடு சரி. தமிழய்யா அட்டெண்டென்ஸ் எடுத்தால் அமல்ராஜ் என்று சொல்லவேண்டிய நேரத்தில் கூட ‘அசோகர் கல்வெட்டு' என்று தான் குசும்பாக சொல்வார். அமல்ராஜால் உடனே ‘உள்ளேன் அய்யா' சொல்ல முடியாது. கையை மட்டும் தூக்கிக் காட்டுவான்.
ஆறாம் வகுப்பில் 105 பேர் தேர்ச்சி பெற்றார்கள். வெற்றிவாய்ப்பை இழந்த ஒரே மாணவன் அசோகர் கல்வெட்டு மட்டுமே. காரணம் சொல்லி தெரியவேண்டியதில்லை. நான் ஏழாம் வகுப்புக்கு போனபின்பு அசோகர் கல்வெட்டை பார்ப்பது குறைந்துபோனது. எப்போதாவது பார்த்தால் சிரிப்பதோடு சரி. அவனுக்கு மூடிருந்தால் பதிலுக்கு சிரிப்பான். இல்லையென்றால் உர்ரென்று போய்விடுவான். பள்ளிக் கட்டடம் கட்ட நிதி திரட்டியபோது அமல்ராஜின் அப்பா பெருத்த தொகையொன்றை அளித்தார் என்று கேள்விப்பட்டேன். வகுப்புகள் மாற மாற அசோகர் கல்வெட்டையே சுத்தமாக மறந்துவிட்டோம். ஓரிரண்டு ஆண்டுகளில் பள்ளியை விட்டு நின்றுவிட்டான் என்று நினைக்கிறேன்.
ஃப்ளாஷ்பேக் ஓவர்.
என்னோடு ஆறாம் வகுப்பு படித்த அதே அமல்ராஜ் தான் இன்று காலை அய்யிரு வீட்டில் தோட்டவேலை செய்து கொண்டிருந்தவன். அழுக்கான லுங்கி அணிந்திருந்தான். சட்டை இல்லை. வியர்வையில் உடல் நனைந்திருந்தது. உழைப்பின் பலனால் ஆர்ம்ஸ் கொஞ்சம் வெயிட்டாக இருந்தது போல தெரிந்தாலும், கூன் போட்ட முதுகால் சுத்தமாக அவன் தோற்றத்துக்கு கம்பீரம் இல்லை.
“நான் தாண்டா கிர்ஷ்ணகுமாரு. உங்கூட ஆறாவது படிச்சேனே?”
அவனால் நினைவுபடுத்தி பார்க்க இயலவில்லை. பொத்தாம் பொதுவாக சிரித்தான். அவனுக்கு வயது இப்போது 33 அல்லது 34 ஆக இருக்கலாம். ஆனால் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்கது போல இருக்கிறான்.
“ஞாபகமில்லே”
“பரவாயில்லை அமல். நல்லாருக்கியா?”
“ம்ம்ம்... நல்லா தானிருக்கேன். கட்டட வேலை பார்க்குறேன். வேலை இல்லாத நாள்ல இதுமாதிரி தோட்டவேலையும் செய்வேன்” முன்பைவிட இப்போது திக்கு கொஞ்சம் பரவாயில்லை. தொடர்ச்சியாக புரியும்படி பேசுகிறான்.
வேறு எதுவும் பேசாமல் “வர்றேண்டா” என்று சொல்லிவிடைபெற்றேன். அவனுக்கு இப்போதாவது அவன் பெயரை எழுதத் தெரியுமா? என்று கேட்க ஆவல். கேட்காமலேயே கிளம்பிவிட்டேன். அவன் அப்பா இருந்த இருப்புக்கு இவன் இந்த நிலைக்கு வந்திருக்க வேண்டியதில்லை. விசாரித்துப் பார்த்தால் ஏதோ ஒரு கதை நிச்சயம் இருக்கும். அவன் தம்பி, தங்கைகள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டால் அந்த கதையின் அவுட்லைன் கிடைத்து விடும்.
இடுப்பிலும், கையிலும் குழந்தையோடு கூடபடித்த கவிதா மாதிரி பெண்களை எங்காவது ரேஷன் கடையிலோ, ஆஸ்பிடலிலோ காண நேர்ந்தால் லேசாக மனசு கனக்கும். அமல்ராஜ் மாதிரி பசங்களை பார்க்கும்போதும் அதே கனம்.
8 பின்னூட்டங்கள்:
சூப்பர்!!!
பெந்தகொஸ்தே சர்ச்சிலிருந்து பள்ளிக்கூடத்தின் வழியாக அய்யர் வீட்டுத் தோட்டத்தைத் தாண்டி ஆஸ்பிட்டல் வரை இழுத்து வந்து விட்டது இந்தக் கதை. நொச்சிக்குச்சி கொசுறுச்செய்தி மட்டுமே இலாபம்!
8ஆம் வகுப்புத் தமிழ்ப் புத்தகத்தில் 'சந்திப்பிழை நீக்குக' பகுதியில் இந்தக் கதையை அப்படியே தரலாம். இது கூடுதல் இலாபம்.
அமல்ராஜின் கதை கண்களை ஈரமாக்கியது.
யுவா,
படிக்கவே மனசு கஷ்டமா இருக்கு.
அவருக்கு ஏதாவது நீங்க உதவி செய்யலாமில்லை???
Touching
அமல்ராஜின் கதையை விசாரித்துப் போடவும்.
http://snehiti.blogspot.com
படித்த பின் என் மனமும் கனத்துப்போய் விட்டது.
<<”என்னய்யா இது? அசோகர் கல்வெட்டை அப்படியே பார்க்குறது மாதிரி இருக்கே?” என்றார்.>>
மேலே உள்ள வரியை படித்துவிட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை, என்ன செய்வது உங்களது எழுத்து நடை அப்படி.
ஆனால் கடைசி வரியில் மனம் கனத்து விட்டது
one more flashback from lucky still interesting :)
Post a Comment