உன்னைப் போல் ஒருவர்!
November 11, 2009
ஜி.ஏ. ஜான், 61 வயதான இளைஞர். நீங்கள் எப்போதாவது சென்னை எல்டாம்ஸ் சாலை வழியாக சென்றிருந்தால் இவரைக் கண்டிருக்கலாம். அரசு அலுவலக குமாஸ்தா போன்ற சாமானியத் தோற்றம். இஸ்திரி செய்யப்பட்ட சட்டை, பேண்ட் அணிந்து பஜாஜ் சூப்பர் ஸ்கூட்டரில் உலா வந்து கொண்டிருப்பார்.
சரியாக பண்ணிரெண்டு மணிக்கு பார்வதி ஹால் அருகில் ஸ்கூட்டரை நிறுத்துவார். கையில் வைத்திருக்கும் பெரிய பை ஒன்றினை பிரிப்பார். மரத்தால் ஆன பிரத்யேக ஸ்டேண்டு ஸ்கூட்டர் மேல் வைக்கப்படும். டிஃபன் கேரியர்களும், பிளாஸ்டிக் தட்டுகளும், பாலித்தீன் பேப்பர்களும் அடுக்கப்படும். அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்கே ஒரு மினி ஹோட்டல் தயார். கட்டடங்களில் கூலி வேலை செய்பவர்கள், வாட்ச்மேன்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என்று பலருக்கும் இதுதான் ஃபைவ் ஸ்டார் ஓட்டல். மீன்குழம்பு + ஒரு குழம்பு மீன், சாம்பார், ரசம், பொறியல், ஊறுகாய் என்று பதினைந்தே ரூபாய்க்கு தரமான வீட்டு சாப்பாடு. வேகவைத்து, காரம் போட்டு பொறிக்கப்பட்ட முட்டை மட்டும் எக்ஸ்ட்ரா காஸ்ட்.
மதிய சாப்பாடு வேளையில் சுறுசுறுப்பாக சப்ளை செய்கிறார். கனிவான உபசரிப்பு. “அண்ணே அஞ்சு ரூவா கொறையுது!” என்றால், “பரவாயில்லை தம்பி. நாளைக்கு கொடு!” என்கிறார். யாசகம் கேட்கும் பெண் ஒருத்தி குழந்தையோடு வர, இலவசமாக ஒரு சாப்பாடு பார்சல்.
விலைவாசி விண்ணுக்கு உயர்ந்திருக்கும் வேளையில் ஜானுக்கு மட்டும் இதெல்லாம் எப்படி கட்டுப்படியாகிறது? அவரே சொல்கிறார்.
“இது எனக்கு தொழில் அல்ல. நான் சென்னை மாநகரப் போலிஸில் காவலரா வேலை பார்த்துட்டு ரிடையர் ஆனவன். ரிடையர் ஆனவங்க சும்மா வீட்டில் உட்காராம, இதுமாதிரி சின்ன சின்ன வேலை செஞ்சிக்கிட்டிருந்தா உடம்பும் நல்லாருக்கும், மனசும் நல்லாருக்கும், அன்றாட செலவுகளுக்கும் தாராளமா பணம் கிடைக்கும்.
நான் செக்யூரிட்டி ஏஜென்ஸி வெச்சி நடத்துறேன். எங்கிட்டேயே ஒரு பத்து பேர் வேலை பார்க்குறாங்க. அவங்களுக்கெல்லாம் சாப்பாடு நானே தயார் பண்ணி கொண்டு போய் கொடுப்பேன். ஒருநாள் இதே மாதிரி நடைபாதை கடை ஒன்றில் கடைக்காரனுக்கும், கஸ்டமருக்கும் சின்னப் பிரச்சினை. போலிஸ்காரனா இருந்தவனாச்சே? என்ன பிரச்சினைன்னு போயி கேட்டேன்.
கஸ்டமர் ஒரு வாட்ச்மேன். சாப்பிட்டுட்டு பார்த்தா அவர் பாக்கெட்டுலே ஒரு ரூபா குறையுது. கடைக்காரன் கிட்டே நாளைக்கு தர்றேன்னு சொல்லியிருக்கான். உடனே வெச்சாதான் ஆச்சின்னு கடைக்காரன் சண்டை போட்டுக்கிட்டிருக்கான். ‘தம்பி. சாப்பிட்டுட்டு போறவங்க வயிறும், மனசும் நிறைஞ்சிப் போகணும். நாளைக்குதான் அந்த ஒரு ரூபாயை வாங்கிக்குங்களேன்’ன்னு நான் அட்வைஸ் பண்ணேன். உடனே கடைக்காரன், ‘அவன் கொடுக்காட்டி நீ கொடு’ன்னு கேட்டான். ரெண்டு ரூபாயை கொடுத்துட்டு வந்தேன்.
அப்போதான் என் மனசுக்குள்ளே தோணுச்சி. போயும், போயும் வயித்துப் பசி ஆத்துற சாப்பாட்டை கூட தொழிலா பார்க்குறானுங்களேன்னு. ஏழை, எளியவர்களோட பசியை ஆத்தணும். எனக்கும் பொழுதுபோகணும். நியாயமான விலைக்கு நல்ல சாப்பாட்டை கொடுக்கிறேன். இங்கே சாப்பிடறவங்க என்னை வாழ்த்துறாங்க. நல்ல மரியாதை கொடுக்குறாங்க. இதுபோதும். எங்கிட்டே செக்யூரிட்டியா வேலை பார்க்குறங்கவங்களுக்கு எப்படியும் சமைக்கணும். அவங்களுக்கு தயார் செய்யுறதோட சேர்த்து முப்பது பேருக்கு எக்ஸ்ட்ராவா தயார் பண்ணுறேன் அவ்வளவுதான்.
வாட்ச்மேன் வேலை பார்க்குற ஒருத்தரோட ஒரு நாள் சராசரி வருமானம் 70 ரூபாய். இதில் நாற்பது ரூபாயை மதிய சாப்பாட்டுக்கு செலவழிச்சா, அத்தொழிலாளியோட வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கும்? யோசிச்சுப் பாருங்க. தோராயமா ஒரு நாளைக்கு இந்த சேவையாலே எனக்கு இருநூறு ரூபாய் லாபம் கிடைக்குது. அதோடு சேர்த்து மனநிம்மதியும். இது போதாதா?”
போலிஸ் மொழியிலேயே தனது அடுத்த தலைமுறையினருக்கு அறிவுரையும் சொல்கிறார். “வாழ்க்கை ஒரு நீச்சலுங்க. நீந்தத் தெரியாதவன் குற்றங்களில் ஈடுபட்டு ஜெயிலுக்கு போறான். எனக்கு நீச்சல் தெரியுது. நல்லா நீந்துறேன்”
“இந்தத் தொழிலை.. மன்னிக்கவும்.. சேவையை விரிவுபடுத்தி ஹோட்டலாக உருவாக்கினால் நிறைய பேருக்கு பயன்படுமில்லையா?” என்று கேட்டால்,
“இல்லைங்க. ஹோட்டல் வைக்கணும்னா காசு தேவைப்படும். வங்கியில் கடன் வாங்கணும். கடனை திருப்பிக் கட்டணுமேன்னு காசு பார்க்க நினைப்பேன். சேவை மனப்பான்மை குறைஞ்சி, தொழில் மனப்பான்மை மிகுந்துடும். நான் இப்படியே வெள்ளந்தியாவே இருந்துட்டுப் போறேனே?” சொல்லிவிட்டு வியாபாரத்தில் மும்முரமாகிறார்.
சேவையாக செய்யப்பட வேண்டிய உணவுத்தொழில் வணிகமயமாகிவிட்ட இச்சூழலில் சாமானியரான ஜான் போன்றவர்கள் நம்பிக்கை தருகிறார்கள். இதுபோன்ற சேவைகளை செய்ய ஓய்வுபெற்றவர்கள் தான் வரவேண்டும் என்பதில்லை. இளைஞர்களும் முயற்சிக்கலாம், தப்பில்லை.
11 பின்னூட்டங்கள்:
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்
பாலாஜி
naatula ippadiyum naalu peru irukirathala than mazhai peiyuthu!!!
athuvum hotel vaikalayanu ketathuku avaroda bathil nacch!!!
இப்படி ஒரு மனிதரை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. தொடரட்டும் அவரது சேவை. அவருக்கு மனமார்ந்த பாராட்டுக்களும், நன்றிகள் பலவும்.
//சேவை மனப்பான்மை குறைஞ்சி, தொழில் மனப்பான்மை மிகுந்துடும். நான் இப்படியே வெள்ளந்தியாவே இருந்துட்டுப் போறேனே?//
தலைநகரில் ஆயிரத்தில் ஒருவர் !
தேடி பிடித்து தெரியப்படுத்துறீங்க வாழ்த்துக்கள் :)
அவருக்கு என் வணக்கங்கள்
“இல்லைங்க. ஹோட்டல் வைக்கணும்னா காசு தேவைப்படும். வங்கியில் கடன் வாங்கணும். கடனை திருப்பிக் கட்டணுமேன்னு காசு பார்க்க நினைப்பேன். சேவை மனப்பான்மை குறைஞ்சி, தொழில் மனப்பான்மை மிகுந்துடும். நான் இப்படியே வெள்ளந்தியாவே இருந்துட்டுப் போறேனே?”
வாழ்த்துகள்
நல்ல விஷயம் லக்கி.
அவரை இன்னும் கொஞ்சம் ஊக்கப்படுத்தி அதிக கடன் சுமையில்லாமல் ஒரு ஹோட்டல் ஆரம்பிக்க உதவினால் பல பேருக்கு அன்னமிட்ட பாக்கியமாவது கிடைக்கும்.
படிக்கும் சென்னையார்கள் யாரேனும் மனது வைப்பர் என நம்பலாம்..
அறிமுகத்திற்க்கு நன்றி லக்கி
நாடு ஒரேடியா நாசமா போயிடல .
நல்ல மனிதன்.
இவரைப் போல மனிதர்களை பார்க்கும்போதும் தான் வாழ்க்கையில் கொஞ்சம் நம்பிக்கை பிறக்குது. இந்த மாதிரி நாட்டில் நிறைய பேர் அவங்களால் முடிஞ்சதை செஞ்சிட்டுதான் இருக்காங்க.நமக்குதான் அது தெரியமாட்டுது ! யரோ சொன்ன கவிதை நினைவுக்கு வருகிறது !
நாம் வீட்டில் உள்ளே இருக்கிறோம்..மழை வெளியே பெய்கிறது !
அறிமுகத்திற்கு நன்றி லக்கி !
all the best john/ u r only true indian........ i m salute u,, ershath
Post a Comment