
சென்ற வருடம் போல இந்த வருடமும் தினசரி புத்தகக்காட்சி தரிசனம் சாத்தியமா என்று தெரியவில்லை. இன்று கூட போய்வரும் சாத்தியமில்லை. ரிசர்வில் எத்தனை நாள்தான் வண்டி ஓட்டுவது? முரளிதியோரா விரைவாக மனசு வைத்தால் கடைசி ஐந்து நாட்களாவது தினமும் போய்வர முடியும். சென்னை சங்கமத்தை வேறு போட்டியாக நாளை தொடங்குகிறார் ‘தலைவரின் கனி, தமிழின் மொழி’.
புத்தகக்காட்சியை தொடக்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்ட ஏ.பி.ஜே.அப்துல் கலாமுக்கு உடம்பு சரியில்லையாம். வாழ்த்துச்செய்தியோடு தன் கடமையை முடித்துக் கொண்டார். மெர்சிடிஸ் பென்ஸில் வந்திறங்கி கொச்சையான மேடைத்தமிழில் இலக்கியச்சேவை ஆற்றினார் நல்லி குப்புச்சாமி செட்டியார். எனக்கொரு சந்தேகம். கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது வாங்குபவர்கள் எல்லாமே பார்ப்பதற்கு பாவமாகவே இருக்கிறார்களே? ஏன்?
சென்ற வருடத்தை விட புத்தகக்காட்சி விசாலமாக காற்றோட்டத்தோடு இருப்பது போல ஒரு பிரமை. முதல் நாள் அனுமதி இலவசமென்றாலும் கூட்டம் நஹி. பல ஸ்டால்களில் இன்னமும் ஆணி அடித்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஞாநி ‘ஓ ஞாநி’ ஆகிவிட்டாராம். அலங்காரம் செய்துக் கொண்டிருக்கும் போது கருவறையை திரைபோட்டு மூடியிருப்பது போல அவரது ஸ்டாலும் திரைபோட்டிருந்தது. மஞ்சள் திரை.
பாரதி புத்தகாலயம் சுறுசுறுப்பாக இருந்தது. புத்தகங்களை அடுக்கி வைத்திருந்த முறை அபாரம். திருக்குடந்தை பதிப்பகம் (கேள்விப் பட்டிருக்கிறீர்களா?) மட்டுமே முதல்நாளில் முழுமையாக தயாராகியிருந்தது. காலச்சுவடு கருப்புமயம். உயிர்மையில் இன்னமும் புதிய பத்தகங்களை பார்வைக்கு வைக்கவில்லை. சுஜாதா, ஜெயமோகன், சாரு மூவருமே உயிர்மையின் 90 சதவிகித இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறார்கள். கல்லாப் பெட்டியில் முதலாளியம்மா. குழந்தை பீடிங் பாட்டிலில் பால் குடித்துக் கொண்டிருக்கிறது.
பத்து ரூபாய்க்கு பீர்வாசனையில் ஆப்பிள் ஜூஸ் கிடைக்கிறது. இனிப்பு மசாலா தடவிய வேர்க்கடலையின் விலை அதிகம் என்று ப்ளூ கலர் குல்லாய் போட்டு மாறுவேடத்தில் இருந்த ஒரு பிரபல எழுத்தாளர் புலம்பிக் கொண்டிருந்தார். தூர்தர்ஷன் ஒரு ஸ்டால் போட்டு தன்னுடைய நிகழ்ச்சிகளை(?) ஒரு விசிடி இருநூற்றி தொண்ணூற்றி ஐந்து ரூபாய் என்றளவில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். பர்மாபஸாரில் ‘திண்டுக்கல் சாரதி’ டிவிடியே பதினைந்து ரூபாய்க்கு கிடைக்கிறது என்று தூர்தர்ஷன் அதிகாரிகளுக்கு யாராவது எடுத்துச் சொன்னால் தேவலை.
மணிமேகலைப் பிரசுரம் வழக்கம்போல சுறுசுறுப்பு. காயிதே மில்லத் கல்லூரியில் நடந்த பழைய கண்காட்சி ஒன்றில் இங்குதான் ‘ஒல்லியாக இருக்கும் நீங்கள் குண்டாவது எப்படி?’ புத்தகத்தை வாங்கி தற்கொலை எண்ணத்தை கைவிட்டேன். அந்தப் புத்தகத்துக்கு அருகிலேயே ‘குண்டாக இருக்கும் நீங்கள் ஒல்லியாவது எப்படி?’ என்றொரு புத்தகமும் இருந்தது நினைவில் நீங்கா கொடூரம். கண்ணதாசன் பதிப்பக கல்லாவில் இங்கும் வழக்கம்போல முதலாளியம்மாவே உட்கார்ந்திருக்கிறார். அதே சுறுசுறுப்பு. ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ. முடிச்ச பையன் இன்னமும் நிர்வாகப் பொறுப்புக்கு வரவில்லை போலிருக்கிறது.
பாக்கெட் நாவல் ஜீ.ஏ. அண்ணாச்சியும் இந்த முறை ஸ்டால் போட்டிருக்கிறார். சாருவின் ’ஸீரோ டிகிரி’ மக்கள் பதிப்பாக ரூபாய் முப்பதுக்கு கிடைக்கிறது. அச்சு அவ்வளவு மோசமில்லை. கோணல் பக்கங்கள் இரண்டாவது தொகுதி ரூபாய் நூற்றி நாற்பது விலையில் தரமாக அச்சிடப்பட்டு விற்கிறது. அண்ணாச்சியிடம் விசாரித்தபோது ஸீரோ டிகிரி மலிவுப் பதிப்பு இருபதாயிரம் காப்பிகளுக்கு மேலாக இதுவரை விற்றதாக சொன்னார். அஜால் குஜால் டாக்டர் பிரகாஷின் நூல்களும் இங்கே மலிவுவிலையில் கிடைக்கிறது. சுந்தர ராமசாமியின் ‘புளியமரத்தின் கதை’ மக்கள் பதிப்பும் இங்கே பதினைந்து ரூபாய்க்கு கிடைக்கக்கூடும். இந்த ஸ்டாலின் முதல் கஸ்டமர் என்பதால் அண்ணாச்சி ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு எங்களோடு பேசிக்கொண்டிருந்தார்.
சினிமா செட் ரேஞ்சுக்கு செட் போடும் நக்கீரன் பதிப்பகம் இவ்வருடம் அடக்கி வாசிக்கிறது. கோபால் அண்ணாச்சி சேலஞ்ச் செய்யும் ஒரே ஒரு கட்-அவுட்டோடு நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். வாசலில் கிழக்கு எடிட்டர் மருதனோடு பேசிக்கொண்டிருந்தவர் “பெரியவங்க எங்களையும் ஞாபகம் வச்சிக்கோங்க” என்று கலாய்த்துக் கொண்டிருந்தார்.
கிழக்கு ஸ்டாலில் ’பிரபாகரன்’ புத்தகமே இவ்வருட பிரதான அலங்காரம். அதற்கும் தடை போட்டுவிட்டதாக பாராவும், பத்ரியும் எழுதியிருக்கிறார்கள். சென்ற ஆண்டு இதுபோலவே ‘நான் வித்யா’ புத்தகம் விற்பனையில் சூடாக இருந்தது. ’சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்’ புத்தகத்துக்கு அருகில் ‘கிரிமினல்கள் ஜாக்கிரதை’ புத்தகத்தை பார்வைக்கு வைத்திருந்தது யதேச்சையானதுதான் என்று கிழக்கின் விற்பனை மேலாளர் ஹரன்பிரசன்னா எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதன் மீது சத்தியம் செய்கிறார்.
விகடன் பிரசுரம் முழுமையாக தயாராகாததால் உள்ளே நுழையவில்லை. குமுதத்தின் பு(து)த்தகம் ஸ்டாலில் ரேஞ்ச் குறைவு என்றாலும் ஆடம்பரத்துக்கு குறைவில்லை. ப்ளக்ஸ் பேனர்களும், கண்காட்சி முகப்பில் வரவேற்பு வளைவுகளுமாக ரொம்ப ஆடுகிறார்கள். சாருவின் ‘ஸீரோ டிகிரி’ ஆங்கிலப் பதிப்பை வெளியிட்ட ப்ளாப்ட் பப்ளிகேஷன்ஸ் அசத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் பல்ப் பிக்ஷன் நூல்களை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கும் இந்நிறுவனத்தின் ஸ்டாலில் தமிழ்வாணனின் ‘சங்கர்லால்’ வேடத்தில் ஒருவர் பயமுறுத்திக் கொண்டிருந்தார். நல்லவேளை கையில் துப்பாக்கி இல்லை.
நீண்டகாலமாக தமிழ் வாசகர்களின் டவுசர் கயட்டும், தாவூதீரும் நடையில் புத்தகங்கள் வெளியிட்டு வரும் க்ரியா பதிப்பகம் இந்த முறை ஸ்டால் போட்டிருக்கிறது. ஒவ்வொரு புத்தகத்தின் விலையிலும் ஒரு கல்யாணம் காட்சி செய்துக் கொள்ளலாம். பார்வைக்கு மட்டும் இவர்கள் வைத்திருக்கும் விண்டேஜ் கலெக்ஷன் புத்தகங்கள் கண்ணை கொள்ளை கொள்ளுகிறது. இவற்றை வேடிக்கை பார்ப்பதே மெகா சுவாரஸ்யம். மைக்கா கவரில் சுற்றி பாதுகாக்கப்பட்ட சுராவின் ஜே.ஜே.சில குறிப்புகள் முதல் பதிப்பை கையில் எடுத்துப் பார்க்கும்போது எதையோ சாதித்தது போல சொல்லவொண்ணா மகிழ்ச்சி.
இந்த வருடத்தின் டாக்காக சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ இருக்கக்கூடும். அறுநூறு ரூபாய் விலையில் வந்திருக்கும் ஆயிரம் பக்கத்துக்கும் மேலான மெகாநாவல். முதல்நாளிலேயே பலரும் ஆவலோடு புரட்டிப் பார்த்தார்கள். எத்தனை பேர் வாங்குவார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நூலாசிரியரின் பத்தாண்டு உழைப்பு வீண்போகாமல் வெற்றியடைய வாழ்த்துவோம்.
முதல்நாள் விசிட் வெறும் பறவைப் பார்வை பார்க்கவே உபயோகப்பட்டது. அடுத்தடுத்து செல்லும் நாட்களில் எதையாவது உருப்படியாக வாங்க வேண்டும். ஆயிரம் ரூபாய்க்கு இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் என்றெல்லாம் அறிவிப்பினை கண்டு பேஜார் ஆகியும் போயிருக்கிறேன். எழுத்துப்போராளி சாருவின் ‘காமரூபக் கதைகள்’ கட்டாயம் வாங்கியாக வேண்டும் என்று எண்ணம். பாராவின் ‘மாயவலை’யும் நிச்சயமாக வீட்டு நூலகத்தில் இடம்பெற்றாக வேண்டிய நூல்.
பாரதி புத்தகாலயத்தில் சில பிரதிகள் வாங்க வேண்டும். மணிமேகலையில் ‘கல்யாணம் செய்துகொள்வது எப்படி?’ என்ற நூல் இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும். எங்கேயோ ‘காதலிப்பது எப்படி?’ என்றொரு நூலைப் பார்த்தேன். சென்ற வருடம் வாங்கிய இதேபோன்ற ஒரு நூலால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. ஒரு ஸ்டாலில் டாக்டர் ஒருவரின் செக்ஸ்நூல்கள் சூடாக பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஸ்டாலுக்கு அடிக்கடி போகவேண்டும்.
அச்சுபிச்சுத்தனமாக ‘தடை செய்யப்பட்ட இயக்கங்கள் குறித்தான நூல்கள் காட்சியில் இடம்பெறக்கூடாது’ என்று கருத்துச் சுதந்திரத்துக்கு, எழுத்துச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கும் அதிகார அமைப்புகளை இப்பதிவின் வாயிலாக கடுமையாக கண்டிக்கிறேன்.


26 பின்னூட்டங்கள்:
5:04 PM, January 09, 2009
சரோஜாதேவி பதிப்பகத்தின் புத்தகங்கள் எதுவும் அங்கே கிடைக்கவில்லையா லக்கி?
5:19 PM, January 09, 2009
கொஞ்சநாளைக்கப்புறம் பேக் டு பார்ம் சூப்பர் பதிவு...
நானும் கருத்துசுகந்திரகாவலர்களை கண்டிக்கிறேன்...
செக்ஸ்நூல்கள் என்று 'இடை'வெளிவிடாமல் எழுதினதில் ஏதும் நுண்ணரசியல் / உள்குத்து இல்லையே ?
?
5:22 PM, January 09, 2009
லக்கி,
மறுபடியும் எப்போது செல்வீர்கள் என்பதைத் தெரிவிக்கவும். (பேருந்தில் போகலாம். கவலை வேண்டாம். )
5:52 PM, January 09, 2009
haahhh...one should consult you for the choices of books before setting up their private library! BTW reading the post felt like i was walking through the fair...
6:50 PM, January 09, 2009
நல்ல விமர்சனம் லக்கி.. நேரில் பார்ப்பது போல் உள்ளது.. இந்த வார கடைசியில் நான் செய்யும் செலவு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்..
7:56 PM, January 09, 2009
எழுத்தில் சுஜாதா எட்டிப் பார்க்கிறார். மிக அருமையான அப்சர்வேஷன் யுவா! அதுவும் உங்கள் புத்தகத்துக்கு அருகில் கிரிமினல்கள் ஜாக்கிரதை புத்தகம் இருந்ததாய்ச் சொன்னது உண்மையாய் இல்லாத பட்சத்தில் பாராட்டத்தக்க கற்பனை. அடுத்த வருடம் இன்னும் பல யுவகிருஷ்ணாவின் புத்தகங்கள் இடம்பெற வாழ்த்துகள்!
கலக்குங்கள்!
9:29 PM, January 09, 2009
கடந்து எட்டு வருடங்களாக தவறாது புத்தகக்கண்காட்சிக்கு சென்று வருகிறேன். இந்த வருடம் மிஸ் செய்துவிடுவேனோ என பயம்மாக இருக்கிறது. திங்களன்று ஊருக்கு செல்கிறேன் லாங் லீவில். இந்த ஞாயிறன்று முக்கிய வேலையிருக்கிறது. நாளை ஒரே நாள்தான் இருக்கிறது. குறிப்பாக இந்த ஆண்டு முதல் நாளை மிஸ் செய்த வருத்தமுண்டு. அந்த குறையை போக்கும்வண்ணம் முதல் நாள் காட்சிகளை நானே நேரில் சென்று பார்த்ததைப்போன்ற உணர்வைத் தந்தது உங்கள் பதிவு. குறிப்பாக நக்கீரன் சினிமா செட் போன்ற வரிகள் நான் உணர்வதை தந்தது. கேட்டரிங் பற்றி சொல்லாததுதான் குறை. நன்றி லக்கி.! (குறைந்த பட்சம் ஐநூறிலிருந்து அதிகபட்சம் 2000 வரைதான் நம் பட்ஜெட். இந்த ஆண்டு யாரோ புதிய எழுத்தாளரார்களாம், அவர்கள் எழுதிய 'அவன்-அது=அவள்', 'விளம்பர உலகம்' ஆகிய புத்தகங்களை வாங்குவதாக வேறு முன்முடிவு செய்துள்ளேன். பார்க்கலாம்)
10:17 PM, January 09, 2009
மருதன் நக்கீரன் கோபாலுடன் என்ன பேசிக்கொண்டிருந்தார்? கொஞ்சம் காது கொடுத்து கேட்க வேண்டியதுதானே லக்கி? ஏதாவது ப்ளான் போடறாங்களா?
11:14 PM, January 09, 2009
சென்னையில் தினபூமி, தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகள் கூட வாங்கிவிடலாம். நீங்க எழுதன புத்தகம்தான் கிடைக்கவில்லை என்ற கவலை இருந்தது. இந்த புத்தக காட்சியில் வாங்க வேண்டிய பட்டியலில் உங்கள் புத்தகமும் உள்ளது. நிச்சயமாக படித்துவிட்டு பின்னூட்டம் இடுகிறேன்.
கிட்டத்தட்ட புத்தக காட்சிக்குள் நுழைந்து திரும்பிய உணர்வு ஏற்பட்டது. முக்கியமாக கேண்டீன், சிறுநீர் கழிக்குமிடம், குடிநீர் வசதி, உட்காரும் வசதி, பொது அரங்கம் ஆகிவற்றை பற்றி நீங்கள் அடுத்த பதிவில் எழுதுவீர்கள் என எதிர்பார்கிறேன்.
- சென்னைத்தமிழன்
11:18 AM, January 10, 2009
எப்பா லக்கி, புத்தக கண்காட்சி பற்றிய உங்கள் பதிவு என் கையை பிடித்து பொருட்காட்சியை காண்பித்தது
போன்ற உணர்வு ஏற்ப்பட்டது.
வாழ்த்துக்கள்
11:51 AM, January 10, 2009
Hi,
Since 2007 I have been trying to get Indhumathi's Avan. I read that at my school days. Why these guys are not providing a system where i can say author and title it should say the stall no, so that i can go & get there. i wish that i could get that book at least by this year.
2:26 PM, January 10, 2009
//சாருவின் ’ஸீரோ டிகிரி’ மக்கள் பதிப்பாக ரூபாய் முப்பதுக்கு கிடைக்கிறது//
இதனால் உயிர்மை பதிப்பகம் வெளியீட்டின் விற்பனைக்கு பாதிப்பு இருக்காதா? ஏற்கனவே விற்பனை பற்றி குறைப்படும் சாரு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?
(உயிர்மை பதிப்பக சீரோ டிகிரி 150 ரூபாய் என நினைவு.)
4:02 PM, January 10, 2009
கலைஞர் காவியம் பற்றி ஏதும் இல்லையே
4:22 PM, January 10, 2009
புத்தக கண்காட்சியின் முதல்நாள் பற்றிய தங்களின் வருணைன அருமை. பொங்கல் விடுமுறைக்குதான் போகவேண்டும்.
12:05 PM, January 11, 2009
இல்லைங்க.... ஈழ . தமிழகர்கள் பிரச்சனை குறித்த புக்ஸ் எல்லாம் நான் நேற்று பார்த்தேனே.....
5:22 PM, January 11, 2009
கொள்க கோமணம் குண்டிக்கு ஆகாதுண்ணு பொளைக்க தெரிஞ்ச புள்ளையாயிட்ட.வாழ்த்துறேண்னே.
10:01 AM, January 12, 2009
//பாக்கெட் நாவல் ஜீ.ஏ. அண்ணாச்சியும் இந்த முறை ஸ்டால் போட்டிருக்கிறார். சாருவின் ’ஸீரோ டிகிரி’ மக்கள் பதிப்பாக ரூபாய் முப்பதுக்கு கிடைக்கிறது. அச்சு அவ்வளவு மோசமில்லை. கோணல் பக்கங்கள் இரண்டாவது தொகுதி ரூபாய் நூற்றி நாற்பது விலையில் தரமாக அச்சிடப்பட்டு விற்கிறது.//
can u give stall name and no pls.
baskar
1:47 PM, January 12, 2009
சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை மலிவுவிலைப் பதிப்பாகச் சில வருடங்கள் முன் வந்துவிட்டதே... (விலை பத்து ரூபாய் என்ற ஞாபகம்)
2:06 PM, January 14, 2009
happy to have seen you and bruno on the 12th in the book fair.
keep writing.
best wishes
11:35 PM, January 14, 2009
//சென்ற வருடத்தை விட புத்தகக்காட்சி விசாலமாக காற்றோட்டத்தோடு இருப்பது போல ஒரு பிரமை//
இது உண்மைதான்.
ஆனா எனக்கு ஒண்ணே ஒண்ணுதான் கேக்கணும். இத்தன விசயங்கள குறிப்பெடுத்து வச்சிருந்து இடுகையிட்டீங்களா இல்ல ஞாபகத்தில் வச்சிருந்து எழுதியதா?
ஆச்சரியம் தாங்க முடியவில்லை...!!!!!!
12:38 PM, January 15, 2009
//சுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதை மலிவுவிலைப் பதிப்பாகச் சில வருடங்கள் முன் வந்துவிட்டதே... (விலை பத்து ரூபாய் என்ற ஞாபகம்)//
பதினைந்து ரூபாய்.
ஜீயே பப்ளிகேஷன்ஸ் ஸ்டாலில் அதுவும் கிடைக்கிறது.
6:51 PM, January 19, 2009
வாழ்த்துக்கள் லக்கி சார்... நானும் கண்காட்சிக்கு சென்றிருந்தேன்... தங்களின் புத்தகம் அருமை... எழுத்து நடை மிகவும் ஜனரஞ்சமாக இருக்கிறது...
விரைவில் கலகல நாவல் எழுதுங்கள்... நன்றி
- சராஜ்
2:32 PM, January 20, 2009
கிழக்கு பதிப்பகம் இந்த முறை கலந்து கொள்ளவில்லையா? தேடிப்பார்த்தும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை .தகவல் தரும் இடத்தில் கெட்டதற்கு 6-வது வரிசை என்றார்கள் .அங்கேயும் காணோம்.
4:10 PM, January 20, 2009
ஜோ,
ஏனென்று தெரியவில்லை. அமைப்பாளர்கள் கொடுத்த ஸ்டால் லிஸ்டில் கிழக்குப் பதிப்பகம் பெயர் இல்லை. நான் இரண்டு மூன்று முறை சுற்றிதான் கண்டுபிடிக்க முடிந்தது.
1:02 PM, January 23, 2009
Hello Lucky Look !
Keezhai Kattru stall is the one among the crowded (sales are also moderately high) ones. You didnot comment anything about this ???
Any special reason ?
Arivudainambi
http://purachikavi.blogpsot.com
12:03 PM, January 27, 2009
புத்தக கண் காட்சியில் கும்பல் சேர்ப்பதை தவிர எந்த ஒரு நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை.அப்படி ஒரு கும்பல் புழுதி
இரண்டு வருடத்திற்கு முன்னால் என்னுடைய கீழ் கண்ட புது யோசனையை பதிவு செய்தேன்.
கண்காட்சி நிகழும் 15 நாட்களில் 2 நாட்கள் ஒதுக்கப்பட வேண்டும்
1.ஒருநாள் அழைப்பிதழ் பெற்றவர்களுக்கு மட்டும்
அழைப்பிதழ்கள் சென்ற கண்காட்சியில் ரூ 250 க்கு மேல் புத்தகம் வாங்கியோர் அனைவர்க்கும் அனுப்பப்படவேண்டும்
2.ஒரு நாள் அனுமதி கட்டணம் ரூ.500. இதில் 4 பேர் அனுமதி .உள்ளே ரூ 500 க்கான
புத்தகங்கள் இந்த அனுமதி சீட்டை மாற்றி பெற்றுக்கொள்ளலாம்.
விழா அமைப்பாளர்கள் இந்த யோசனையை கிடப்பில் போட்டு விட்டார்கள்
நானும் கண்காட்சி போவதை நிறுத்தி விட்டேன்!
Post a Comment